மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாகும் 10 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகள் தலா இரண்டு வேட்பாளர்களையும், பாஜக 5 வேட்பாளர்களையும் நிறுத்தி இருந்தன. இதில் பாஜகவால் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலையில் கூடுதலாக ஒரு வேட்பாளரை பாஜக களத்தில் இறக்கியது. பாஜக-வின் 5-வது வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக 24 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருந்தது. இத்தேர்தலில் சுயேச்சை மற்றும் சிறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 26 பேர் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. சிவசேனா கூட்டணியும், பாஜக-வும் சுயேச்சைகளை தக்கவைத்துக்கொள்ள போராடின.
பாஜகவின் தேவேந்திர பட்நவிஸ் இதில் முன்னின்று செயல்பட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக துணை முதல்வர் அஜித்பவார் தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் விலை போய்விடக்கூடாது என்பதை தீவிரமாக கண்காணித்து வந்தார். இந்நிலையில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் வாக்களிப்பதற்காக புனேயில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இரண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர். அதோடு பகுஜன் விகாஸ் அகாடி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.அமெரிக்கா சென்று இருந்தார். அவரை வாக்களிப்பதற்காக பாஜக அமெரிக்காவில் இருந்து அழைத்திருந்தது. சிறையில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை அணுகி வாக்களிக்க அனுமதி பெற முயன்று தோல்வி அடைந்தனர். இத்தேர்தலில் 285 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இரு எம்.எல்.ஏ.க்கள் உதவியாளர்கள் உதவியோடு வாக்களித்தனர். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அந்த எதிர்ப்பை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இரண்டு மணி நேரம் தாமதமாக எண்ணப்பட்டன. இதில் சிவசேனா சார்பாக போட்டியிட்ட சச்சின் அஹிர், ஆம்சயா பதாவி, தேசியவாத காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ராம்ராஜே நிம்பல்கர், ஏக்நாத் கட்சே, பாஜக சார்பாக போட்டியிட்ட பிரவீன் தாரேகர், ராம் ஷிண்டே, ஸ்ரீகாந்த் பாரதியா, உமா கப்ரே, பிரசாத் லாட் ஆகியோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட பாய் ஜக்தாப் மற்றும் சந்திரகாந்த் ஹண்டோரே ஆகியோரில் யார் வெற்றி பெறப்போகிறார் என்ற கேள்வி நள்ளிரவு வரை நீடித்தது. இதில் பாய் ஜக்தாப் இறுதியில் வெற்றிபெற்றார்.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்திருக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு அவையில் 44 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால் 41 உறுப்பினர்கள்தான் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு முதல் முன்னுரிமை என்ற அடிப்படையில் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகள் தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்து விடக்கூடாது என்பதில் குறியாக இருந்ததால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை தங்களது பக்கம் இழுப்பதில் கோட்டை விட்டனர். இத்தேர்தல் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸுக்கு கிடைத்த மற்றொரு வெற்றியாக கருதப்படுகிறது.
ஏற்கனவே சமீபத்தில் நடந்த ராஜ்ய சபைத்தேர்தலில் தேவேந்திர பட்நவிஸ் கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தி மூன்று பேரையும் வெற்றி பெறச்செய்தார். தற்போது சட்டமேலவை தேர்தலிலும் தேவேந்திர பட்நவிஸ் தனது செல்வாக்கை நிரூபித்து காட்டியிருக்கிறார். இத்தேர்தல் முடிவு அடுத்த சில மாதங்களில் நடக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/news/politics/bjp-wins-5-seats-in-maharashtra-legislative-council-elections
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக