1986. யூகோஸ்லேவியா. `ஆர்மர் ஆஃப் காட்’ ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. நடிகர் ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்புபவர். ரிஸ்க் எடுப்பதென்றால் அவருக்கு ஃபேவரைட்டான சீனாவின் நூடுல்ஸ் சாப்பிடுவதுமாதிரி.
அதற்கு முன்பு நடித்திருந்த படங்களிலும், ஏன்... அந்தப் படத்திலுமேகூட எத்தனையோ அபாயகரமான சண்டைக் காட்சிகளில் அடித்துப் பின்னியிருந்தார் ஜாக்கி. அன்றைக்கு ஒரு சிறிய சாகசக் காட்சியை ஷூட் செய்யவேண்டியிருந்தது. ஒரு சுவரிலிருந்து தாவி ஒரு மரக்கிளையைப் பிடிக்க வேண்டும், அவ்வளவுதான். ஆனால், அது அவரை மரணத்தின் விளிம்புவரை கொண்டு போய்விடும் என்பதை அவரே எதிர்பார்த்திருக்கவில்லை.
முதல் டேக்கிலேயே சுவரிலிருந்து தாவி மரத்தின் கிளையைப் பற்றிவிட்டார் ஜாக்கி. ஆனால், எதிலும் ஒரு பர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பவர் அவர். `இன்னொரு டேக் போனால் என்ன?’ என்று அவருக்குத் தோன்றியது. இரண்டாவது முறையும் சுவரிலிருந்து தாவினார். ஒரு சின்ன ஸ்லிப்...
நடந்துபோகும்போது எதுவும் இடறாமலேயே ஸ்லிப் ஆகி நாம் விழுவதில்லையா... அதுபோல நூலிழையில் மரக்கிளை அவரிடமிருந்து விலக, கீழே விழுந்தார். கீழே கிடந்ததோ கற்குவியல்.
நன்றாகப் பதம் பார்த்தன கற்கள். முக்கியமாக அவருடைய தலையை. அவரின் மண்டையோட்டு எலும்பின் சிறு பகுதி முறிந்துபோனது. அதனால் அவருடைய மூளையிலிருக்கும் ஒரு சிறு திசுவில் பாதிப்பு. மயங்கிக்கிடந்த ஜாக்கியின் காதுகளிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. படக்குழுவினர் பதறிப்போனார்கள். அவரை அள்ளிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தார்கள்.
அந்த விபத்து அவரைப் பெரிதும் பாதித்தது. சிறிது காலத்துக்கு அவருடைய வலது காது கேட்காமல்போனது. அவருடைய மண்டையோட்டில் விழுந்த துளையை அடைப்பதற்காகப் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் பிளேட் இன்றைக்கும் இருக்கிறது. மீண்டெழுந்த ஜாக்கி, அதற்காகவெல்லாம் கவலைப்படவில்லை; படத்தின் சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுப்பதைக் குறைத்துக்கொள்ளவும் இல்லை. அடுத்த இருபது வருடங்களுக்கு தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக ரிஸ்க் எடுத்துக்கொண்டேயிருந்தார்.
ஜாக்கி சானின் வெற்றிப்பாதை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கரடுமுரடான முட்கள் நிறைந்த பாதை அது. ஏழ்மையான குடும்பம். முறையான படிப்பில்லை. 7 வயதிலிருந்தே சண்டைக்கலையில் பயிற்சி எடுக்க ஆரம்பித்திருந்தார். 20 வயதில் பல படங்களில் சண்டைக் காட்சிகளில் அவர் தோன்றியிருந்தாலும் அவையெல்லாம் வெற்றிப் படங்களாக அமையவில்லை. அதற்காக அவர் துவண்டுபோய்விடவில்லை. அவருடைய சுயசரிதையான `நெவர் குரோ அப்’ (Never Grow Up) புத்தகத்தில் அவர் எடுத்த கடினமான பயிற்சிகளைப் பற்றிய குறிப்புகளைப் படிக்கும்போதே மலைப்பாக இருக்கிறது. காலை 5:00 மணிக்கு எழுந்தால், பிரேக்ஃபாஸ்ட்டுக்கு மட்டுமே கொஞ்சம் பிரேக். மதியம் வரை குங்க்ஃபூ பிராக்டீஸ்... பிராக்டீஸ். மதியம் லஞ்ச். மாலை 5:00 மணிவரை மறுபடியும் பிராக்டீஸ்... இரவு உணவு... பிறகு மறுபடியும் இரவு 11:00 மணி வரை பிராக்டீஸ்... மறுநாள் காலை 5:00 மணி... அதே தொடர்கதை!
சாதாரண சக சண்டைக் கலைஞராக சினிமாவில் தோன்றிய ஜாக்கி, வாழ்க்கையிலும் ரிஸ்க் எடுக்கத் தயங்கவில்லை. அன்றைக்குப் பிரபலமாக இருந்த நடிகர் புரூஸ் லீயின் இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். சண்டைக் காட்சியில் அவரிடம் அடி வாங்கியிருக்கிறார். உலகப் புகழ்பெற்ற புரூஸ் லீ 33 வயதில் இறந்த பிறகு அவர் இடத்தைப் பிடிக்க பல நடிகர்கள் முயன்றார்கள்.
ஜாக்கி சான் தன் வழியே போய்க்கொண்டிருந்தார். பின்னாளில் ஒருமுறை பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது ``நீங்கள் ஏன் புரூஸ் லீயின் இடத்தைப் பிடிக்க முயலவில்லை?’’ என்ற கேள்விக்கு இப்படி பதில் சொன்னார் ஜாக்கி சான்... ``நான் அடுத்த புரூஸ் லீயாக விரும்பவில்லை. முதல் ஜாக்கி சானாக இருக்க விரும்பினேன். அவ்வளவுதான்...’’
source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/importance-of-taking-risk-in-life-motivational-story-of-jackie-chan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக