Ad

சனி, 25 ஜூன், 2022

தவாங்கில் இறுதி இரவு ~ Back பேக் 23

சுமோ ஓட்டுநர்கள் கூறும் வரையிலும், நான் அதைப் பொருட்படுத்தவில்லை. தேஸ்பூரில் இருந்து தவாங்குக்கு நாங்கள் வந்தது ஒரு வழிப்பாதை. சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருவதைக் கவனித்தேனே தவிர, எதிரே ஒரு வாகனம்கூட வராதது குறித்த எந்த ஐயமும் அப்போது எழவில்லை. தவாங்குக்கு தேஸ்பூர் மற்றும் கவுகாத்தியில் இருந்து சுமோக்கள் வருகின்றன. அவையே, தவாங்கில் இருந்து தேஸ்பூர், கவுகாத்திக்குச் செல்கின்றன.

ஒரு பகுதியில் இருந்து ஒருநாள் விட்டு ஒரு நாள்தான் பயணம் மேற்கொள்ள முடியும். தேஸ்பூர் / கவுகாத்தியில் இருந்து வாகனங்கள், இன்று தவாங்குக்கு அனுமதிக்கப்படுகின்றன என்றால், தவாங்கில் இருந்து கீழே வரும் வாகனங்களுக்கு நாளைதான் அனுமதி. எனக்கு இந்தத் தகவலே தெரியாமல்தான், பிப்ரவரி 19-ம் தேதி சனிக்கிழமை கிளம்பி தேஸ்பூருக்கு வந்தேன். பிப்ரவரி 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தவாங் செல்லும் வாகனங்களுக்கான அனுமதி நாள் என்பது தற்செயலாக எனக்கு விளைந்த அதிர்ஷடம்.

தவாங்கில் உள்ள ஸ்தூபி

பிப்ரவரி 21-ம் தேதி திங்கள்கிழமை தவாங்கில் இருந்து தேஸ்பூருக்கு வாகனங்கள் சென்றிருக்க வேண்டும். கடும்பனிப் பொழிவால் சாலை மூடப்பட்டுவிட்டதால் இன்றைய பயணம் ரத்தாகிவிட்டது என்றும், அடுத்த நாள் 22-ம் தேதி தேஸ்பூர் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் சுமோ ஓட்டுநர்கள் சென்னார்கள். 23-ம் தேதி புதன்கிழமை நான் தவாங்கில் இருந்து கிளம்பும் முடிவில் இருந்தேன். அன்று தவாங்கை நோக்கி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் நாள். எனது திட்டத்துக்கான சாத்தியங்கள் அறவே அற்ற நிலையில், என் முன் இரண்டு தெரிவுகள் இருந்தன.

ஒன்று, அடுத்த நாள் காலையே தவாங்கில் இருந்து கிளம்ப வேண்டும். இல்லையென்றால் 24-ம் தேதி வியாழக்கிழமை கிளம்ப வேண்டும். நான் என்ன செய்வது என்கிற குழப்பத்தில் இருந்தேன். ஏனென்றால், 26-ம் தேதி சனிக்கிழமை, சிலுகுரியில் இருந்து சென்னைக்கு செல்ல ரயில் முன்பதிவு செய்திருந்தேன். அதற்குள் மேகாலயாவுக்குச் சென்றே தீர வேண்டும். ஆஷுவும் மேகாலயாவுக்கு என்னுடன் வருவதாக இருந்தான். அவனிடம் கேட்டதற்கு வியாழக்கிழமையே சென்றுவிடலாம் என்று சொன்னான். அதுதான் எனக்கும் சரியென்று பட்டது. வியாழன் கிளம்புவது என்று முடிவானதும், தவாங்கில் எங்களுக்கு முழுதாக இரண்டு நாள்கள் இருந்தன.

அடுத்த நாள் கிளம்பி, போர் நினைவிடத்துக்கு நடந்தே சென்றோம். புத்த ஸ்தூபிகள் நிறுவப்பட்டிருந்தன. புத்தக் கோயிலில் பார்த்ததைப் போலவே பௌத்த கட்டடக்கலையால் அந்நினைவிடம் அமைக்கப்பட்டிருந்தது. நமது தேசியக்கொடி உட்பட ராணுவப் படைகளுக்கான கொடிகள், முகப்பில் நாட்டப்பட்டிருந்தன.

இந்திய - சீன யுத்தத்தில் உயிரிழந்த வீரர்களுக்கான நினைவிடம் அது. நினைவிடத்துக்கு வெளியே இந்திய ராணுவத்தினரால் நடத்தப்படும் அங்காடி ஒன்று இருந்தது. ராணுவத் தளவாடங்களின் மினியேச்சர், புத்தர் சிலைகள், கீ செயின்கள் உள்ளிட்ட பொருள்கள் அந்த அங்காடியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. கல்லால் செய்யப்பட்ட புத்தர் சிலைகளில் சிறிய சிலை ஒன்றை வாங்கினேன். தவாங்கின் நினைவாக அதை எடுத்துச் செல்லலாம் என்று நினைத்தேன். அதன் விலை 115 ரூபாய்தான். வெளிக்கடைகளில் இரண்டு மடங்கு விலை வைத்திருப்பார்கள். இது ராணுவத்தால் நடத்தப்படுகிற கடை என்பதால் விலை குறைவாக இருந்தது.

போர் நினைவிடம்

போர் நினைவிடத்தில் இருந்து திரும்பிய பிறகு, சோனத்தின் தக்காளி சோற்றைத் தின்று சலித்திருந்த நாங்கள், வெளியே எங்காவது சாப்பிடலாம் என்று முடிவு செய்தோம். வடகிழக்கில் சீனா, திபெத், மியான்மர் உணவுகளின் கலவையே அதிக அளவில் கிடைக்கும். அதை விட்டால், வட இந்தியாவுக்கே உரித்தான ரொட்டி, நான், ஃப்ரைடு ரைஸ். நாங்கள் சென்ற உணவகத்தின் மெனு கார்டைப் பார்த்து ஆஷுதான் ஆர்டர் செய்தான்.

முதலில் வெஜ் ஃப்ரைடு ரைஸ் ஒரு பிளேட் வாங்கி பங்கிட்டுக் கொண்டோம். அடுத்ததாக அவன் சொன்னது ஒரு சீன உணவு. சைவ சூப்பில் தட்டை வடிவிலான பாஸ்தாவைப் போட்டுக் கொடுத்ததைப்போல இருந்தது. போர்க்கில் எடுக்க, வழுக்கிச் சென்றது. அதன் பெயர் கூட நினைவில் இல்லை. மோமோஸ் அங்கு அனைத்து உணவகங்களிலும் முக்கிய உணவாக இருந்தது. சாப்பிட்டு முடித்ததும் முந்தைய நாளைப் போலவே தூங்கினோம், எழுந்தோம், சமையலறையில் கூடிக் குளிர்காய்ந்தபடியே உரையாடினோம்... அந்நாள் நிறைவுற்றது.

எந்தத் திட்டமும் இல்லாமல் நன்றாகத் தூங்கிக் காலையில் எழுந்தேன். குளிப்பது குறித்து கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவில் குளிர்வாட்டிக்கொண்டிருந்தது. காலை உணவை முடித்த பிறகு, சோனத்தின் அங்கிள் விடுதிக்கு வந்திருந்தார். அவர் கையில் ஜெபமாலையை வைத்து உருட்டிக் கொண்டே மென்குரலில் மந்திரத்தை உச்சரித்தபடி இருந்தார். அவரிடம் ஆஷு இந்தியில் பேசிக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் என்னிடம் வந்து 300 ரூபாய்க்குப் பெட்ரோல் போட்டால் 6வது தலாய் லாமா பிறந்த தலத்துக்கு அங்கிளே காரில் கூட்டிச் செல்வதாகச் சொல்கிறார் என்றான். தாராளமாகச் செல்லலாம் என்றேன்.

தலாய் லாமா, திபெத்திய புத்த மதத்தின் தலைவர். அவர்தான் திபெத்தின் ஆட்சிப்பொறுப்பையும் ஏற்றிருப்பார். இந்த மரபில் தற்போது 14 வது தலாய் லாமா ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். சீனாவின் அரசியல் இடையீட்டால் திபெத்தில் இருந்து அவர் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தார். நான் முன்பு குறிப்பிட்ட கர்நாடக மாநிலம் கொல்லேகால் அருகே உள்ள திபெத்திய அகதிகள் முகாமில் இருக்கிறவர்கள், தலாய் லாமாவோடு சீன ஆதிக்கத்தால் வெளி வந்தவர்கள்தாம். இந்த வரலாறு தனிக்கதை.

தலாய் லாமா பிறந்த மண்ணில்...

ஆறாவது தலாய் லாமா பிறந்த இடத்துக்கு, அங்கிள் எங்களைக் காரில் கூட்டிச் சென்றார். மரங்கள் சூழ அமைந்திருந்த வளாகத்தில் புத்தக் கோயிலும் இருந்தது. தலாய் லாமா பிறந்த வீட்டினுள் சென்றால், அவரது சிலையும், அதற்கு முந்தைய 5 தலாய் லாமாக்களின் சிலைகளும் நிறுவப்பட்டிருந்தன. வெளியில் இருந்து பார்க்கையில் புத்தத் தலங்கள் அனைத்தும் ஒன்று போலவே தெரிகின்றன. அவற்றின் வேறுபாடுகளை அறிய வேண்டுமெனில் நாம் புத்த மத மரபு சார்ந்தும், அதன் கட்டடக்கலை நுணுக்கங்கள் சார்ந்தும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

வரலாற்றுத் தலங்களுக்குச் செல்கையில் அதன் வரலாறு சார்ந்த அறிவோடு செல்லும்போது, நம்மை இன்னும் அந்த இடத்தோடு தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். காண்கிற காட்சியினூடே அந்த வரலாற்றுக் காலத்தை நோக்கி நம் அகம் பயணப்படும். காண்கிற அனுபவமாக மட்டுமே எனக்கு அவை எஞ்சி நின்றதில் சிறிதளவு வருத்தம் இருக்கவே செய்தது.

திரும்ப தவாங் வந்து ரம் டம்ளரோடு சமையலறையில் உட்கார்ந்தேன். அந்த இரவுதான் தவாங்கில் எங்களின் இறுதி இரவு. அங்கு வந்த சுமோ டிரைவரோடு பேசி 1,800 ரூபாய்க்கு தேஸ்பூர் அழைத்துச் செல்ல ஆஷு ஏற்பாடு செய்தான். நான் பால்கனிக்கு வந்து நின்று, நகரைப் பார்த்தபடியே அந்த கடைசி இரவுக்கு விடை கொடுத்தேன்.

- திரிவோம்...



source https://www.vikatan.com/lifestyle/travel/visit-to-arunachal-pradesh-back-pack-23

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக