Ad

புதன், 15 ஜூன், 2022

``குற்றம்சாட்டப்பட்டவர்கள் சரணடையவில்லை என்றால் வீடுகள் ஏலம் விடப்படும்" - உ.பி காவல்துறை எச்சரிக்கை

நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்தால் கடந்த 10-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்-ல் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மீது 29 கடுமையான சட்டப்பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், எஃப்.ஐ.ஆர்-ல் பதிவு செய்யப்பட்ட 40 பேர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரயாக்ராஜ் எஸ்.எஸ்.பி அஜய் குமார் செய்தியாளர்கள் சந்திப்பின் போது," குற்றம் சாட்டப்பட்டவர்கள் சரணடையவில்லை என்றால் வாரண்ட் பிறப்பிக்கப்படும். சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்களது வீடுகள் ஏலம் விடப்படும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கற்களை வீசுவதைக் காட்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது அவர்களை அடையாளம் காண உதவும். அவர்கள் ஒரு அமைதியான போராட்டத்தை நடத்தி எங்களிடம் புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறை

குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து கோடிக்கணக்கான இழப்பீடு வசூலிக்கப்படும். வரும் வெள்ளிக்கிழமைக்கு மாநில நிர்வாகம் தயாராகி வருகிறது. கடந்த முறை பயன்படுத்தப்பட்ட காவல்துறையை விட 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதராஸாக்கள் மற்றும் பள்ளிவாசல்களின் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/houses-will-be-auctioned-off-if-the-accused-do-not-surrender-up-police-warning

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக