மகாராஷ்டிராவில் கடந்த 20-ம் தேதி சட்டமேலவைக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தல் முடிந்த பிறகு திடீர் திருப்பமாக இரவோடு இரவாக அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத் மாநிலம் சூரத்திற்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் அங்கிருந்து அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அஸ்ஸாமுக்கு சென்றவண்ணம் இருந்தனர். ஆரம்பத்தில் 30 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்த நிலையில், இப்போது தேவையான 37 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு ஏக்நாத் ஷிண்டேயிக்கு கிடைத்துவிட்டது.
நேற்று மாலையே 37 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டேயிக்கு ஆதரவாக கையெழுத்திட்டுவிட்டனர். சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து தங்களுக்கு 42 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். கட்சி தாவல் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தேவையான ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கிடைத்துவிட்டதால், அவர்கள் கையெழுத்திட்ட கடிதம் இன்று மகாராஷ்டிரா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது. அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் 12 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவியை பறிக்கும்படி சிவசேனா, துணை சபாநாயகரிடம் மனுக்கொடுத்துள்ளது. ஆனால் இது சட்டவிரோதம் என்றும், எங்களுக்கும் சட்டம் தெரியும் என்றும், யாரை பயமுறுத்தப்பார்க்கிறீர்கள் என்று ஏக்நாத் ஷிண்டே பதிலளித்துள்ளார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று கூட்டிய கூட்டத்திற்கு வெறும் 13 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வந்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவர்களே அவரை கைவிட்டுவிட்டு ஷிண்டே பக்கம் சென்றுவிட்டனர். சூரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அனுப்பப்பட்ட ரவீந்திர பதக் மற்றும் மற்றும் இரண்டு எம்.எல்.ஏ.க்களும் ஏக்நாத் ஷிண்டே அணியுடன் சேர்ந்துவிட்டனர். இதனால் சிவசேனாவே உத்தவ் தாக்கரே கையை விட்டு செல்லும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே மகா விகாஷ் அகாடி கூட்டணி உருவாக காரணமாக இருந்த சரத்பவார் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், ``யாருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தெரிந்து கொள்ள முடியும். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு குஜராத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு யார் ஆதரவு கொடுக்கின்றனர் என்று அனைவரது பெயரையும் தெரிவிக்க விரும்பவில்லை. அஸ்ஸாம் அரசு அவர்களுக்கு உதவி செய்கிறது” என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/news/politics/37-shiv-sena-mlas-in-maharashtra-sign-in-support-of-minister-shinde
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக