Ad

புதன், 22 ஜூன், 2022

1950-களில் திருச்சி எப்படி இருந்தது தெரியுமா?! - ஒரு சின்ன சஸ்பென்ஸ்! #AppExclusive

அந்தக் காலத்து திருச்சியைப் பற்றி இத்தனை சுவாரஸ்யமாக எழுதியிருக்கும் எழுத்தாளர் யார் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா... முடியாதவர்கள் கட்டுரையை முடித்துவிட்டு கடைசி வரிக்கு வரலாம்!

திருச்சி பற்றி...

ட்டப் படிப்பு வரை நான் திருச்சியில் படித்தேன். ஸ்ரீரங்கத்திலிருந்து தினம் காலை ரெயில் ஏறி ஜோஸப் காலேஜுக்கு வருவேன். ரெயில்வேயில் மஞ்சளாக பாஸ் கொடுப்பார்கள். திருச்சிக்கு இரண்டணா என்று ஞாபகம்.

Guess who wrote this article about Vintage Trichy

இரண்டணா என்பது இப்போதைய பனிரெண்டு பைசாவுக்கு சமானம்... இரண்டணாவில் காப்பி சாப்பிடலாம். பெனின்ஸூலர் கபேயில் சாதா தோசை இரண்டணா. சினிமாவில் தரை டிக்கெட் இரண்டணா. மலைக்கோட்டையில் இரண்டணா கொடுத்து கைரேகை பார்த்துக் கொள்ளலாம்.

முதலில் திருச்சிக்கு ரெயில் பயணம். காலை ஒன்பது மணிக்கு லால்குடியிலிருந்து வரும் பாசஞ்சர் வண்டி. அதில் பெட்டிகளுக்கெல்லாம் பெயர் உண்டு. பஜனை வண்டியில் திருப்புகழ் பாடுவார்கள், சீட்டு வண்டியில் முன்னூத்திநாலு ஆடுவார்கள். அதே போல் பால் வண்டி, ஆபீசர் வண்டி என்று பாகுபாடுகள். காலேஜுக்கு பாண்ட் போட்டதாக ஞாபகமில்லை.

வேட்டியை டப்பா கட்டு கட்டிக் கொண்டு செருப்பில்லாமல்தான் செல்வேன். டவுன் ஸ்டேஷனில் இறங்கி ஆண்டார் தெரு அல்லது பட்டர்வொர்த் ரோடு வழியாகக் குறுக்கே மண்டபங்களை எல்லாம் கடந்து காலேஜ் அடைவோம்.காலேஜில் அப்படி ஒன்றும் பிரசித்தமாக இருந்ததாக ஞாபகமில்லை. பல பேரைப் பார்த்துப்பயந்த ஞாபகம் இருக்கிறது. லைப்ரரியில் உள்ளே விடமாட்டார்கள். சீட்டு எழுதிக் கொடுக்க வேண்டும். `பார்த்திபன் கனவு’ கேட்டால் `திருச்சபை விளக்கம்' கொடுப்பார்கள். கெமிஸ்ட்ரி லாபில் மணல் சிந்தினால் கூட ஃபைன் போடுவார்கள்.

கிளாஸ் கட் அடித்துவிட்டு கெயிட்டியில் சினிமா போனால் மறுநாள் தபால்காரரைத் தேட வேண்டும். பெற்றோருக்கு அச்சடித்த கடிதம் வந்துவிடும்.

மலைக்கோட்டையில் சின்னக்கடைத் தெருவில் ஒரு கபேயில் இலைபோட்டு வீட்டுச்சாப்பாடு போடுவார்கள் (நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால்தான் அனுமதி). பெரிய கடைத் தெருவில் ஒரு கடையில் கண்ணாடிக்குள் வைத்திருந்த ஹார்மோனிக்கா இன்னும் எனக்கு ஆசை காட்டிக் கொண்டிருக்கிறது. அதே பெரிய கடைத் தெருவில் பழைய புத்தகக் கடையில் வீரமாமுனிவரின் சதுரகராதியிலிருந்து ஆப்டோன் படங்கள் அடங்கிய கொக்கோக சாஸ்திரம் வரை கிடைக்கும். பணத் தட்டுப்பாட்டுக்கு சட்டென்று புஸ்தகங்களை விற்கக் கூடிய ஸ்தலமும் இஃதே...

ராஜா தியேட்டர்தான் அப்போது ஒசத்தி. ஏஸி தியேட்டர் என்பதே கிடையாது. இங்கிலீஷ் படத்திற்கு ஜங்ஷன் அருகில் பிளாஸா ஒரு தியேட்டர்தான். பிளாஸாவுக்கு எதிராகவே ரேடியோ நிலையம். அங்கே பள்ளி நாட்களில் ஒருமுறை `மணிமலர்' நிகழ்ச்சியில் தான் இருபது பிள்ளைகளுடன் கலந்து கொண்டிருக்கிறேன். ரேடியோ அண்ணா, `யார்யார் எல்லாம் லெட்டர் எழுதியிருக்காங்க?' என்று கேட்டதற்கு, `மணச்சநல்லூர் சிறுவர் சங்கம்' என்று என்முறை வந்தபோது சொல்லியிருக்கிறேன். அதற்காக கதரில் ஒரு துண்டு கொடுத்தார்கள்.

தில்லை நகர் எல்லாம் அப்போது இல்லை. அங்கெல்லாம் வயல்தான். தெப்பக்குளத்தில் மாலை ரப்பர் செருப்பு விற்பார்கள். மெயின் கார்டு கேட்டுப் பக்கம் கைரேகை.

இப்போது பர்மா பஜார் இருக்கும் இடத்தில் கைரேகை ஜோஸ்யர்கள் இருப்பார்கள். `ப்ரொபஸர் நாத் ஏபிஏ' என்று ஒரு ஒல்லியான உயரமான ஸ்டாண்டின்மேல் தகரப் பெட்டி அமைத்து அதன்மேல் டார்ச் விளக்கும் ராட்சச கைபொம்மையுமாக ஜோஸியர் சுத்தமாகக் குளித்துவிட்டுக் காத்திருப்பார்.

காட்டினவர்களின் உள்ளங்கையை லென்ஸ் வழியாகப் பார்த்துப் புன்னகை செய்து கொள்வார். கையில் பென்சிலால் மார்க் போட்டு உதட்டுக்குள் என்னவோ கணக்குகள் போட்டுப் பார்த்து, `இந்த ஜாதகருடைய கையில் தனரேகையானது தீர்க்கமாக இருப்பதால் மலைக்கோட்டையிலிருந்து உருட்டிவிட்டது போல் பணம் பெருகும்', `பானை பிடித்தவள் பாக்கியசாலி' என்று பழமொழி எல்லாம் உபயோகித்து ஐந்து நிமிஷம் பலன் சொல்வார். எல்லோருக்கும் அடுத்த பங்குனி மாதம் நினைத்த காரியம் கைகூடும் என்பார். ஒரு ரூபாய் நோட்டுகளைத் துச்சமாக மடித்து தன்னுடைய ஸ்டாண்டில் அங்கங்கே சொருகியிருப்பார்.

Guess who wrote this article about Vintage Trichy

முருகன் தியேட்டரில் பழைய ஆங்கிலப் படங்களை `நீச்சலடி சுந்தரி' என்று மொழிபெயர்த்து மார்னிங் ஷோ போடுவார்கள். பப்ளிக் லைப்ரரியில் `ஜகன்மோகினி' இதழ்கள் கிடைக்கும். தேவர் ஹாலில் ராஜமாணிக்கம் குழுவினர் டிராமா போடுவார்கள். ராம கிருஷ்ணா போகிற வழியில் வீடு வீடாகப் பீடி சுற்றுவார்கள். ஹாட்டின் பீடி மாளிகையில் இரண்டு அலுமினிய மனிதர்கள் மீசை வைத்துக் கொண்டு திடகாத்திரமாக நிற்பார்கள். மாட்டு வண்டியில் ஒரு கிளாரினெட் கெட்டில், டிரம் சகிதமாக ``ஆட்டின் பீடி வந்து விட்டது சோதரா! நாட்டின் பீடி, நல்ல பீடி (ஆட்டின்)!" என்று பாடிக் கொண்டே செல்வார்கள்.

கிழக்கு புலிவார்டு ரோட்டில் தாரா சிங்கிற்கும் செந்தேளுக்கும் மல்யுத்தம் நடக்கும். பெண்கள் மல்யுத்தமும், வாலிபால் போட்டியும் பிரபலமாக இருக்கும். திராவிடர் கழக இயக்கங்கள் சுறுசுறுப்பான ஊர்வலங்களில் எங்கள் எல்லோரையும் திட்டிக் கொண்டே செல்வார்கள். கருணாநிதி, சாத்தாரத் தெருவில் கட்டைக் குரலில் சொற்பொழிவு செய்வார். பதினெட்டாம் பெருக்கின் போது பாலத்திலிருந்து ரயில் வரும் வரை காத்திருந்து குதிப்பார்கள். கோட்டையிலிருந்து சிலர் சொத்தென்று விழுவார்கள். காதல் தோல்வி அல்லது கடன் தொல்லையால். திருச்சி இப்போது ரொம்பப் பெரிதாகி, அடையாளம் கலந்து போய் விட்டதாகச் சொல்லவேண்டும்.

நன்றி: `பாவை'

வேறு யார்..?

`ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.' என்று இலக்கிய வாழ்க்கையைத் துவக்கி, இன்று `எலெக்ட்ரானிக்ஸ்' எழுத்தாளராகப் பரிணமித்திருக்கும் `சுஜாதா'வே தான்!

(13.06.1982 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)


source https://cinema.vikatan.com/specials/guess-who-wrote-this-article-about-vintage-trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக