Ad

செவ்வாய், 14 ஜூன், 2022

``பாஜக-வின் புல்டோசரை, அரசியலமைப்பும் அதன் சட்டமும் தடுத்து நிறுத்தும்" - அகிலேஷ் யாதவ் காட்டம்

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக, நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக்கோரி கடந்த வெள்ளிக்கிழமையன்று டெல்லி, உத்தரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டமானது உத்தரப்பிரதேசத்தில் கலவரமாக வெடித்தது. இதில், வன்முறையைத் தூண்டியதாக 60-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீஸார் கைது செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து கடந்த ஞாயிறு அன்று போராட்டத்தைத் தூண்டியதில் முக்கியமானவராக போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட ஜாவேத் முகமது-வின் வீடு முறையான அனுமதி வாங்காமல் கட்டப்பட்டதாக இடிக்கப்பட்டது. மேலும் சமூக ஆர்வலர் அஃப்ரீன் ஃபாத்திமாவின் வீடும் இடிக்கப்பட இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலானது. மேலும், வீடு இடிப்பு குறித்து தங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் வரவில்லை என்று குடும்பத்தினர் கூறியிருந்தனர். அதைத்தொடர்ந்து, ஜாவேத்தின் மனைவியின் இந்த பெயரில் வீடு இருப்பதால், இத்தகைய இடிப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, வழக்கறிஞர்கள் குழு கடிதம் எழுதியது.

அஃப்ரீன் ஃபாத்திமா

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக, உத்தரப்பிரதேசத்தின் ஆளுங்கட்சியான பா.ஜ.க மீது மாநில எதிர்கட்சித்தலைவரான அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று பேசிய அகிலேஷ் யாதவ், ``அரசியலமைப்பும் அதன் சட்டமும், பா.ஜ.க-வின் புல்டோசரை தடுத்து நிறுத்தும். அவர்கள் புல்டோசர் கொண்டு தகர்க்கப்பட்ட வீடு, வரி செலுத்தியுள்ளது. அரசாங்கம் ஏன் அந்த வரியை வசூலிக்கிறது. அதுமட்டுமல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த வீட்டின் உரிமையாளர் அல்ல என்று ஆவணங்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசாங்கம் தனது தவறை ஏற்றுக்கொள்ளுமா? அதுமட்டுமல்லாமல், வீட்டை புல்டோசர் மூலம் இடித்த அதிகாரிகள், மீண்டும் அதனை சீரமைப்பார்களா என்பதுதான் கேள்வியும் கூட" எனப் பேசினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/constitution-and-law-will-stop-bjps-bulldozer-says-akhilesh-yadav

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக