Ad

வியாழன், 16 ஜூன், 2022

ஓ.பி.எஸ் வரும் முன்னரே முடிக்கப்பட்ட கூட்டம்?! - ஜெயக்குமார் காரை முற்றுகையிட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், கடந்த சில தினங்களாகவே அ.தி.மு.க-வில் `ஒற்றைத் தலைமை' என்ற விவாதம் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. முன்னதாக நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் `ஒற்றைத் தலைமை' வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்ப, இந்த விவகாரம், அ.தி.மு.க-வில் பரபரப்பாகிவருகிறது.

இந்தச் சம்பத்துக்குப் பின்னர், ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி இருவருமே, தங்களது இல்லங்களில் தனித்தனியாகத் தங்களின் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், சென்னையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் உட்பட கட்சியின் பல தீர்மானக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து, கட்சி அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ் வருகை தரவிருப்பதாகத் தகவல்கள் வெளியானதையடுத்து, ஆலோசனைக் கூட்டத்தை வேறொரு நாளைக்கு ஒத்திவைத்து, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வளர்மதி ஆகியோர் கட்சி அலுவலகத்திலிருந்து வெளியேறிவிட்டதாகத் தகவல் வெளியானது.

எடப்பாடி - ஓ.பி.எஸ்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ``பொதுக்குழுக் கூட்டம் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் இயற்றுவது என்பது குறித்து ஏற்கெனவே நடத்திய கூட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்த 11 பேர் கொண்ட குழுவின் கூட்டம் தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானங்கள் குறித்து விவாதித்தோம். பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்" என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஜெயக்குமாரிடத்தில், ஓ.பி.எஸ் வருகைக்கு முன்னரே கூட்டம் முடிக்கப்பட்டது குறித்த பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப, ``அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. 18-ம் தேதி மீண்டும் ஒரு கூட்டம் நடைபெறவிருக்கிறது" என ஜெயக்குமார் கூறினார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதைத்தொடர்ந்து ஒற்றை தலைமை விவாதம் குறித்துப் பேசிய ஜெயக்குமார், ``மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்ட கருத்து செயல்வடிவம் பெறலாம் பெறாமலும் போகலாம். இதில் தனிப்பட்ட காரணங்கள் எதுவும் கிடையாது. கட்சிதான் எல்லாமே. அனைத்தும் சுமுகமாக முடியும்" எனப் பேசினார். பத்திரிகையாளரைச் சந்தித்துவிட்டு அலுவலகத்திலிருந்து புறப்பட்ட ஜெயக்குமாரின் காரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மறித்து கோஷமிட, அங்கு நிலைமை சற்று பரபரப்பானது.

முன்னதாக இரண்டு நாள்களுக்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்துக்குப் பின்னர் இதேபோல் பத்திரிகையாளர் சந்திப்பில், `காலத்தின் கட்டாயத்தால் அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்பது குறித்து கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது’ என ஜெயக்குமார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ops-supporters-blocked-ex-minister-jayakumar-car-in-front-of-admk-office

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக