தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வுக்குள், கடந்த ஒரு வாரகாலமாக பல அதிரடிக் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன், 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 'பொதுக்குழுவைத் தள்ளிவைக்க வேண்டும்' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இணைந்து இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியிருக்கின்றனர். அதேவேளையில், 'திட்டமிட்டபடி பொதுக்குழு நடந்தே தீரும்' என பெரும்பான்மை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்துத் தெரிவிக்க அதிமுக வட்டாரத்தில் அனல் கூடியிருக்கிறது.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவேண்டிய முடிவுகள் குறித்து விவாதிக்க, கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. அப்போது கட்சியில் ஒற்றைத் தலைமை கோரிக்கை பெருவாரியான மா.செ-க்களால் முன்வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. கூட்டம் முடிந்து, வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், `அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை எனக் கூறியிருக்கிறார்கள்' என்று கருத்துத் தெரிவித்திருந்தார். அன்று தொற்றிக்கொண்ட பரபரப்பு தற்போதுவரை தொடர்கிறது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிலும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும் அதிமுக நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பொள்ளாச்சி ஜெயராமன், எம்.ஆர், விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், நத்தம் விசுவநாதன், வளர்மதி, கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், பெஞ்சமின், தளவாய் சுந்தரம், ஆர்.காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர், வெல்லமண்டி நடராஜன், மைத்ரேயன் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொடர்ச்சியாக அலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஓ.பி.எஸ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து எடப்பாடி தரப்பில் இருந்து தம்பிதுரை, செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் மோகன் உள்ளிட்டோர் ஓ.பி.எஸ்ஸிடம் சமசரசப் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருக்கின்றனர். ஆனால், `ஒற்றைத் தலைமை என்கிற பேச்சுக்கே தற்போது இடமில்லை, இரட்டைத் தலைமையே நீடிக்கவேண்டும். இதுகுறித்து 19-ம் தேதி மாலை ஆறு மணிக்குள், எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது ஆதரவாளர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்' என ஓ.பி.எஸ் கெடு விதித்திருந்தாகத் தகவல் வெளியானது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று, பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியிருப்பதாக ஒரு கடிதத்தை வாசித்தார். அதில், `முன்னறிவிப்பு இல்லாமல் ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை குறித்து 14.6.2002 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சில மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கழக சட்ட விதிகளை உணராமலும் அறியாமலும் கருத்து தெரிவித்துள்ளனர். அத்தகைய கருத்தால் கழகத் தொண்டர்கள் கொதித்துப்போயுள்ளனர். கழக நிர்வாகிகள் மத்தியிலும், கழகத் தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அத்தகைய கருத்தால் கட்சியில் குழப்பமும், கட்சியின் நற்பெயருக்குக் களங்கமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக ஜூன் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு, செயற்குழுவைத் தள்ளிவைக்க வேண்டும். அடுத்த கூட்டத்துக்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யலாம்' என வாசித்துக் காண்பித்தார். அவரைத் தொடர்ந்து, கே.பி.முனுசாமி தலைமையில் ஒரு குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதம் பற்றிக் கேள்வியெழுப்ப, 'அப்படி எந்தக் கடிதமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஓ.பி.எஸ்ஸும் கண்டிப்பாக பொதுக்குழுவுக்கு வருவார்' எனப் பதிலளித்தார். அதேபோல, அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்குகளும் தொடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கின்றன.
இந்தநிலையில், அதிமுகவின் பொதுக்குழு நடக்குமா, நடந்தால் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசினோம்,
``நிச்சயமாக பொதுக்குழுக் கூட்டம் நடக்கும். பெருவாரியான நிர்வாகிகள் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டனர். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி ஏகோபித்த ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்படுவார். பொதுக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து, தீர்மானக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு தன்னுடைய கருத்துக்களைச் சொல்லிவிட்டு இப்போது பொதுக்குழுவைத் தள்ளிவையுங்கள் என ஓ.பி.எஸ் கடிதம் எழுதுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்பதும் அவர் ஒப்புதலுடன் எடுத்த முடிவுதான். இப்போது வந்து அவர்களையும் அழைக்க வேண்டும் என்று சொல்வதையும் ஏற்கமுடியாது. பொதுக்குழுவுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதில், திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் கட்சி உறுப்பினரே இல்லை. மற்றொரு வழக்கு பாலகிருஷ்ணன் என்பவரால் தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிற்காது'' என்கிறார்கள் நம்பிக்கையாக.
source https://www.vikatan.com/government-and-politics/politics/single-leadership-what-will-be-the-outcome-of-the-aiadmk-general-committee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக