Ad

வெள்ளி, 17 ஜூன், 2022

ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர் வீட்டில் ரெய்டு: `இது மோடியின் பழிவாங்கும் செயல்' - காங்கிரஸ்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை, ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்திய மூன்று நாள்களிலுமே, காங்கிரஸ் எம்.பி-க்கள், தொண்டர்கள் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதில் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும்விதமாக, காங்கிரஸ் எம்.பி-க்கள் உட்பட பலரை போலீஸ் கைதுசெய்தது. போலீஸின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சித்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரரான அக்ரசென் கெலாட்டின் வீட்டில் சி.பி.ஐ இன்று சோதனை நடத்திவருகிறது. மேலும் அக்ரசென் கெலாட்டின் அலுவலகத்துக்கும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனைக்குச் சென்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ்

அக்ரசென் கெலாட்டின் நிறுவனம், சட்ட விரோதமாக உர ஏற்றுமதி செய்ததாக, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அக்ரசென் கெலாட் நிறுவனம் ஏற்கெனவே, 2007 மற்றும் 2009-ல் சட்டவிரோதமாக அதிகளவில் உர ஏற்றுமதி செய்ததாக கூறப்படும் வழக்கு நிலுவையில் இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட உரங்கள், ராஜஸ்தான் விவசாயிகளுக்கானவை என்றும் அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.

இந்த நிலையில், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், சி.பி.ஐ-யின் இத்தகைய நடவடிக்கையை அரசியல் பழிவாங்கும் செயல் என்று மத்திய அரசை விமர்சித்திருக்கிறார். இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இது முற்றிலுமாக பழிவாங்கும் அரசியல். டெல்லியில் நடந்த மூன்று நாள் போராட்டத்திலும் அசோக் கெலாட் முன்னிலையிலிருந்தார். ஆனால் இந்தச் செயல், மோடி அரசின் வெட்கக்கேடான எதிர்வினை. நாங்கள் இனி அமைதியாக இருக்க மாட்டோம்" என எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/cbi-raid-on-rajasthan-cms-brother-house-and-business-office

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக