பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 23 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் சார்பாக அவரது வழக்குரைஞர்கள் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். 69 வயதான பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது பிரபல நடிகை ஏஞ்சலினா ஜூலி உட்பட பல்வேறு பெண்கள் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியூயார்க்கில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 23 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.
மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த தீர்ப்பு குறித்துதான் தற்போது மேல்முறையீடு செய்ய ஹார்வி வைன்ஸ்டீனின் தரப்பு முடிவு செய்துள்ளது.
யார் இந்த ஹார்வி வெய்ன்ஸ்டைன்?
ஹார்வி, ஹாலிவுட்டின் முடி சூடா மன்னன். அவர் நினைத்தால் அங்கு ஒரு கலைஞனை உருவாக்கி உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைக்கவும் முடியும், பகைத்தால் அவனை உருக்குலைத்து ஓரம்கட்டவும் முடியும். திரை உலகின் மிக மரியாதைக்குரிய ஆஸ்கர் விருது நிகழ்ச்சியின்போது, 1966-லிருந்து 2016 வரை, கடவுளுக்கு நிகராக ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 34 முறை விருது பெற்றவர்கள் நன்றி சொல்லியிருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வறிக்கை.
இப்படி, ஹாலிவுட்டின் தயாரிப்பாளர்களில், தவிர்க்க முடியாத ஒரு ஜாம்பவான் ஹார்வி வெய்ன்ஸ்டீன். திரை உலகம் தாண்டி, அரசியலில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முக்கியமான ஆதரவாளர், கொடையாளர். ஆக, ஹார்விக்கு அரசியல் பலமும் உண்டு. அதுவும் அதீத பலம். எனவேதான் ஹார்வி, ஹாலிவுட்டின் கடவுளாக பார்க்கப்பட்டார். ஹார்வி யாராலும் தொட முடியாத உயரத்திலிருந்தார். ஆனால், அது 2017-ம் ஆண்டு வரைதான். ஹார்வி மீது நடிகைகள் ரோஸ் மேக்கோவன், ஆஷ்லே ஜட் உட்பட பல பெண்கள், அவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகப் புகார் எழுப்ப, அது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் விரிவாக வெளியானது. அமெரிக்கத் திரையுலகின் சர்வாதிகாரி ஹார்வி வெய்ன்ஸ்டீன் சரியத் தொடங்கியது அங்கேதான்.
அமெரிக்காவின் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவு, துன்புறுத்தல், சீண்டல் உள்ளிட்ட பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை அளித்தனர் ஹார்வி மீது புகார் தெரிவித்தவர்களில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி மற்றும் ரோஸ் மெக்கோவன் உள்ளிட்ட திரை உச்சங்களும் அடங்குவர்.
இந்த குற்றச்சாட்டுகளை முதலில் மறுத்த ஹார்வி, தன் மீது குற்றஞ்சாட்டியவர்களின் ஒப்புதலோடுதான் தான் உடலுறவு கொண்டதாக கூறினார்.
ஆனால், அவர் மீதாக எழுந்த அடுக்கடுக்கான புகார்களின் காரணமாக அவர் அங்கம் வகிக்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பதவிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
ஹார்வி வைன்ஸ்டீன் மீது தொடர்ந்து பல பாலியல் தாக்குதல் குற்றசாட்டுகள் வருவதால், அவரை ஆஸ்கர் குழுவில் இருந்து வெளியேற்ற 2017 ஆம் ஆண்டு ஆஸ்கருக்கு பின்னணியில் இருந்து செயல்படும் அமைப்பு முடிவு செய்தது.
பதற வைத்த வாக்குமூலம்
ஹார்வி மீது தொடர் புகார்கள் எழுந்தாலும், நடிகை ஜெசிகா அளித்த சாட்சியம்தான் இந்த பிரச்சனையின் வீரியத்தை உலகிற்கு உணர்த்தியது. ஒட்டுமொத்த உலகையும் பதற வைத்தது.
அவர் அளித்த சாட்சியத்தை அதே வரிகளிக் தருகிறோம், “2012 இறுதியில் ஒரு பார்ட்டியில் தயாரிப்பாளர் ஹார்வியை சந்தித்தேன். திரைப்பட நாயகி ஆக வேண்டும் என்ற என் கனவை அவரிடம் பகிர்ந்தேன். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். அவர் என்னையும், ஒரு நண்பரையும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வர சொன்னார். நான் அந்த ஹோட்டல் அறைக்கு சென்றதும் என்னைப் படுக்கையில் தள்ளி வாய் வழி புணர்ச்சியில் ஈடுபட்டார். என்னை வன்புணர்வு செய்து, என் மீது ஒரு முறை சிறுநீர் கழித்தார்,” என்றார். இது சர்வதேச அளவில் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியானது.
அமெரிக்காவில் 'தி சோப்ரனோஸ்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த இத்தாலிய அமெரிக்க நடிகையான ஆனபெல்லா ஸ்கியோராவும் ஹார்வி வைன்ஸ்டீன் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை சுமத்தினார். 1992ல் நியுயார்க்கில் இருக்கும் தனது அடுக்குமாடி குடியிருப்பில் வலுக்கட்டாயமாக நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தி நியு யார்கர் நாளிதழுக்கு நடிகை பேட்டி அளித்து இருந்தார்.
வைஸ்டீன் குறித்து நிரூபிக்கப்பட்ட குற்றங்கள் என்னென்ன?
நியூயார்க்கில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஹார்வி வைன்ஸ்டீன் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அதில் இரண்டு குற்றங்கள்தான் நிரூபிக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டு தயாரிப்பு உதவியாளராக இருந்த மிரியம் ஹேலேவை பாலியல் வல்லுறவு செய்த குற்றமும், 2013ஆம் ஆண்டு நடிகை ஜெசிகா மானை பாலியல் வல்லுறவு செய்த குற்றமும்தான் நிரூபிக்கப்பட்டது.
அமெரிக்காவை பொறுத்தவரை பாலியல் வல்லுறவு குற்றத்தின் தீவிரம் என கருத்தப்பட்டு அவை வகைப்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். அந்த வகையில் ஹார்விக்கு நீண்ட காலம் சிறை தண்டனை பெற்றுத்தரக்கூடிய வாய்ப்பு இருந்த குற்றச்சட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் அவருக்கு வெறும் 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது ஹார்வி ஏதும் பேசவில்லை. ஆனால் தண்டனை வழங்கப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் மீ டூ இயக்கத்தால் தான் மிகுந்த குழப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த தீர்ப்புக்கு பின், ஹேலே, தான் தாக்கப்பட்டது “மனதளவில் தன்னை நடுங்கவைத்துவிட்டது,” என தெரிவித்தார். பெண்ணாகவோ அல்லது மனிஷியாகவோ நான் எனது மதிப்பை இழக்கவில்லை ஆனால் எனது தன்னம்பிக்கை சுக்கு நூறாக உடைந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது ஹார்வி தரப்பு வழக்கறிஞர்கள் வழங்கப்பட்ட தீர்ப்பில் பிழைகள் இருப்பத்தாக 166 பக்க மனு ஒன்றை தயார் செய்துள்ளனர். அதில் நீதிபதிகள் பாரபட்சமாக நடந்து கொண்டு தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் என்றும் ஹார்வி தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
#MeToo இயக்கம்
இப்படியான சூழலில்தான் 2017ஆம் ஆண்டு #MeToo இயக்கம் தொடங்கப்பட்டது. ஹார்வி மீதான புகார்களை மையமாக வைத்து, ஹாலிவுட் நடிகையான அலிஸ்ஸா, "பாலியல் ரீதியான தொந்தரவுக்கோ அல்லது தாக்குதலுக்கோ உள்ளான அனைத்து பெண்களும் "Me Too" என்று பதிவிட்டால், இப்பிரச்சனையின் அளவை மக்களுக்கு உணர வைக்கலாம்" என ட்வீட் செய்திருந்தார்.அதனைத் தொடர்ந்து கண்டங்கள் கடந்து, தேச எல்லைகள் தாண்டி பல்வேறு தரப்பினரும் #MeToo என்ற ஹாஷ்டேகுடன் தங்களது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்தனர்.
- திலகவதி
source https://www.vikatan.com/social-affairs/crime/harvey-weinstein-lawyers-plan-to-appeal-against-the-verdict
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக