- சுவாமி சுகபோதானந்தா
`என்ன வாழ்க்கை இது?' என்று அலுத்துக்கொள்கிறவர்களை பல முறை சந்தித்திருப்போம். ஏன், உங்களில் பலருக்கேகூட எப்போதாவது இப்படி ஒரு சலிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும்.
ஸ்கூட்டரில் பறந்து பறந்து, `ஃபுட் டெலிவரி' செய்யும் நடுத்தர வயது பெண்மணி ஒருவரின் இந்த அங்கலாய்ப்பை சமீபத்தில் கேட்க நேர்ந்தது.
``வாய்க்கு ருசியானதைக்கூட சாப்பிடாம, பிள்ளைங்க ஆசையா கேட்ட துணி மணிகளைக்கூட வாங்கிக் கொடுக்காம குருவி மாதிரி சிறுக சிறுகச் சேர்த்து வைத்த பணத்துல `எதிர்காலத்துக்கு உதவியா இருக்குமே'ன்னு தங்க நகைகள் வாங்கி வெச்சேன். இப்போ என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. ஆப்ரேஷனுக்கு பணம் புரட்ட ஆசை ஆசையா வாங்கிய தங்க நகைகளை விற்கப் போனா, கண்ணுக்கு முன்னாடியே கற்களை பெயர்த்து தூர வைச்சுட்டு, நகையை மட்டும் நெருப்புல உருக்கி, உருட்டி பார்த்துட்டு, இது 18 கேரட் தங்கம்தான். அதுவும் இல்லாம சேதாரம், அது இதுன்னு சொல்லி, `பாதிக்குப் பாதி பணம்தான் கொடுக்க முடியும்னு குண்டைத் தூக்கி போடறான். குழந்தைக்கு உடம்பு இப்படி ஆகிப்போச்சேன்னு வருத்தப்படுறதா... இல்லை இப்படி வைக்க இடம் தெரியாம வைக்கப்போர்லபோய் பணத்தை முதலீடு செய்தேனேன்னு நினைச்சு வருத்தப்படுறதா...''
மருத்துவமனைகளில் அங்கலாய்க்கும் இதுபோன்ற தாய்மார்கள் தொடங்கி, ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து ஊர், பெயர், மொழி என்று எதுவும் தெரியாமல், பாதுகாப்பில்லாத பணிச் சூழலில், பாலியல் தொல்லைகளை சகித்துக்கொண்டு வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் வடகிழக்கு மாநில பெண்கள்வரை, `என்ன வாழ்க்கை இது?' என்று விரக்தியடையும் பெண்களின் எண்ணிக்கை ஏராளம்.
காலையில் இருந்து இரவுவரை சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக இது போன்ற பெண்கள் ஏன் இப்படி பறந்து பறந்து வேலை செய்கிறார்கள். இப்படி ஈட்டும் சிறு தொகையில் வாடகையும், சாப்பாட்டுச் செலவும் போக இவர்களுக்கு எவ்வளவு மிஞ்சும்? அதில் எவ்வளவு பணத்தை ஊரில் சிரமப்படும் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்புவார்கள்? அது அவர்களுக்குப் போதுமானதாக இருக்குமா, இவர்கள் தங்கள் குடும்பத்தாரை மீண்டும் எப்போது போய் சந்திப்பார்கள்?
தொடர் வண்டியின் பெட்டிகளைப் போல கேள்விகள் வரிசையாக வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தத் தொடர் கேள்விகளின் முதல் கேள்வியாகவும், கடைசி கேள்வியுமாக இருப்பது... `உடம்பையும் மனதையும் வருத்திக்கொண்டு இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் ஏன் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்? இவர்களின் இலக்கு என்ன?
ஒரே வார்த்தையில் சொன்னால் - மகிழ்ச்சி! கடமைகள் முடிந்துவிட்டால், சிரமங்கள் நீங்கிவிடும். சிரமங்கள் நீங்கிவிட்டால், நிம்மதி கிடைத்துவிடும். நிம்மதி கிடைத்துவிட்டால், பாரம் முழுவதும் குறைந்துவிடும். அதன் பிறகு மகிழ்ச்சியை நோக்கிய அடுத்த ஓட்டத்தை ஆரம்பிக்கலாம்! ஆக, ஓட்டம் என்பது ஒரு போதும் நிற்காது.
Also Read: மூளைச்சலவை, முட்டாள் முத்திரை; இந்தச் சிறையை நீங்கள்தான் உடைக்கவேண்டும்!- பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ் 3.0
உலக சினிமா ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம், The Pursuit of Happiness. விளிம்பு நிலையில் வசிக்கும் கறுப்பர் இன அமெரிக்கராகச் சித்திரிக்கப்படும் இப்படத்தின் நாயகன், மகிழ்ச்சியான வாழ்கையைத் துரத்திக்கொண்டு ஓட... பணப்பற்றாக்குறை, பணிச்சுமை, குடும்ப சுமை ஆகியவை அவரைத் துரத்தும்.
தங்குவதற்கு வீடோ, போக்கிடமோ இல்லாமல் பொது கழிப்பறைகளிலும், பிச்சைக்கார்களுக்கான விடுதிகளிலும், இரவைக் கழிக்கும் `சிங்கிள் பேரன்ட்'டான அவர், காலையில், பத்துவயது மகனை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக ஓடுவார், அதன் பிறகு வேலைக்குப் போக பேருந்தை துரத்திக்கொண்டு ஓடுவார். வாழ்க்கையில் முன்னேறுவதற்காக இடை இடையே மேற்படிப்பு படிக்க ஓடுவார். இப்படி, ஓட்டம், ஓட்டம், ஓட்டம் என்று திரைப்படம் முழுவதும் நாயகன் தலைதெறிக்க ஓடிக்கொண்டே இருப்பார்.
`சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' ஆகிய மூன்றும் எப்படி அடிப்படை உரிமைகளாகக் காணப்படுகின்றனவோ அதைப் போல, அமெரிக்காவின் அரசியல் அமைப்பு சட்டத்தில் Life, Liberty and the Pursuit of Happiness அதாவது `வாழ்க்கை, சுதந்திரம், மகிழ்ச்சிக்கான தேடல்'... ஆகிய மூன்றும் அடிப்படை உரிமைகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதை நான் இங்கே சொல்வதற்கான காரணம் - ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும் நாம், `ஓட்டம்', என்ற சொல்லை சுயபச்சாதபமாகவும் பார்க்கலாம். நம் உரிமையாகவும் பார்க்கலாம்.
ஓட்டம் இருந்தால்தான் உயிர்ப்பு இருக்கும். அகண்ட அண்டத்தின் அதிசயமே இந்த ஓட்டமும் சுழற்சியும்தான். நிலா பூமியைச் சுற்றி ஓடிக்கொண்டே இருப்பதைப் போல, பூமி சூரியனை சுற்றி ஓடிக் கொண்டே இருப்பதைப் போல, சூரியன் பால்வெளியை சுற்றிக்கொண்டே இருப்பதைப் போல, பால்வெளி மண்டலம் - விண்வெளி மண்டலத்தைச் சுற்றிக்கொண்டே இருப்பதைப் போல, நம் உடம்பை சுற்றி ரத்தம் ஓடிக்கொண்டே இருப்பதைப் போல, மூச்சுக்குழாயில் காற்று சுற்றிக்கொண்டே இருப்பதைப் போல... மனிதராகப் பிறந்த எவரும் ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். இந்த ஓட்டம் நின்றுவிட்டால், உயிர் நின்றுவிடும்.
Also Read: உங்களை நீங்கள் முதலில் காதலிக்கிறீர்களா? - பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ் - 4
காட்டில் புலியும் ஓடுகிறது. மானும் ஓடுகிறது. புலி உணவுக்காக ஓடுகிறது. மான் உயிருக்காக ஓடுகிறது. மான் தன் ஓட்டத்தை நிறுத்தினால் இறந்துவிடும். புலி தன் ஓட்டத்தை நிறுத்தினால் பசியால் இறந்துவிடும். அதனால்தான் இந்த ஓட்டம் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கிறது.
என்னைக் கேட்டால், மகிழ்ச்சியை நோக்கி ஓடுவதைவிட, மகிழ்ச்சியாக ஓடுவதுதான் சிறந்தது என்பேன். `அது எப்படி மகிழ்ச்சியாக ஓட முடியும்?' என்கிறவர்கள் விளையாட்டு வீரர்களைக் கேட்டுப் பாருங்கள். அல்லது ஓட்டப் பயிற்சியை விரும்பிச் செய்யும் இளைஞர்களைக் கேட்டுப்பாருங்கள். ஓடுவதில் இருக்கும் சுகத்தை மட்டுமல்ல, ஓடிமுடித்த பிறகு உடம்பில் பூக்கும் வியர்வைத் துளியைக் காற்று தீண்டும்போது ஏற்படும் சுகத்தைப் பற்றி சிலாகித்துக் கூறுவார்கள்.
- சிந்திப்போம்.
source https://www.vikatan.com/lifestyle/women/how-to-pursuit-happiness-penne-relax-please
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக