ஒருகாலத்தில் திருச்சி மாவட்டத்தில் தி.மு.க-வின் அடையாளமாக வலம்வந்த ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா, சமீபகாலமாக கட்சித் தலைமையின்மீது அதிருப்தியில் இருக்கிறாராம். தவிர, மாவட்ட அமைச்சரான நேருவின்மீது அவர் கோபத்தில் இருப்பதாகவும் முணுமுணுக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.
மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், சிவாவுக்கு அமைச்சர் நேரு தரப்பு சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டைப் பலமுறை தி.மு.க தலைமையிடம் சொல்லியிருக்கிறது சிவா தரப்பு. ஆனால், கட்சித் தலைமையிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லையாம். தற்போது கூடுதலாக அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பினரும் சிவாவைப் புறக்கணிக்க ஆரம்பித்திருப்பதால், கடும் அப்செட்டில் இருக்கிறாராம் திருச்சி சிவா.
முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்த சேலம் இளங்கோவன் தொடர்புடைய 36 இடங்களில் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தியிருந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு அவரது ஆறு லாக்கர்களையும் தோண்டித் துருவியிருக்கிறார்கள் அதிகாரிகள்.
அவற்றிலிருந்து பெரிதாக எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதனால் அப்செட்டான லஞ்ச ஒழிப்புத்துறையினர், தங்களது அடுத்த அஸ்திரமாக 2015-ல் இளங்கோவன் தலைவராக இருந்த மத்திய கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை தூசுதட்டத் திட்டமிட்டிருக்கிறார்கள். விரைவில் அந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் சிலர் புகார் அளிக்கக்கூடும் என்கிறது போலீஸ் வட்டாரம்!
ஒரு மாதத்துக்கு முன்பு தஞ்சாவூரில் தங்கியிருந்தபடி தன் ஆதரவாளர்களைச் சந்தித்த சசிகலா, விரைவில் கிராமம்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார். இடையே மழை வந்துவிட்டது. இந்த நிலையில் எந்த ஊரில் தொடங்கி எந்த ஊரில் முடிப்பது என்பது உட்பட சசிகலாவின் பயணத் திட்டம் முழுமையாகப் போடப்படவில்லையாம்.
விவேக், டாக்டர் வெங்கடேஷ் இருவரிடமும்தான் பயணத் திட்டங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இருவரும் எதிரும் புதிருமாக இருப்பதால் ஆளுக்கொரு ஐடியா சொல்லி சசிகலாவைக் குழப்பிவருகிறார்களாம். இதனால் சுற்றுப்பயணம் தள்ளிப்போவதுடன் தினகரன், திவாகரனுக்குப் பிறகு அடுத்த தலைமுறை மோதல் ஆரம்பித்துவிட்டதாக அப்செட்டில் இருக்கிறாராம் சசிகலா!
`தி.மு.க-வில் இணையாவிட்டால் காவல்துறை மூலம் போதைப்பொருள் விற்பதாக வழக்குகளைப் போடுவோம்’ என்று தி.மு.க-வினர் மிரட்டுவதாக, கரூர் மாவட்ட அ.தி.மு.க-வினர் புகார் கிளப்புகிறார்கள். சமீபத்தில், இரண்டு அ.தி.மு.க மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், தி.மு.க-வுக்குத் தாவினார்கள். ``அவர்கள்மீது, போதைப்பொருள் விற்பதாக வழக்கு போட்டு மிரட்டி, தி.மு.க-வுக்கு இழுத்திருக்கிறார்கள்” என்று அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கிடையே கரூர் அ.தி.மு.க கிழக்கு ஒன்றியச் செயலாளர் மதுசூதனன், ``மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் தம்பி அசோக்குமார் ஆகியோர் தூண்டுதலின்பேரில், காவல்துறையினர் என்னை அணுகி, தி.மு.க-வில் இணையுமாறு வற்புறுத்தினார்கள்’’ என்று குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ‘என்மீது தொடர்ச்சியாகப் பொய் வழக்கு பதிவுசெய்யப்படலாம் என்று அஞ்சுகிறேன். காவல்துறையினர் என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், “செந்தில் பாலாஜி அண்ட் கோவுக்கு யார்தான் கடிவாளம் போடுவது?’’ என்று புலம்புகிறார்கள் கரூர் மாவட்ட அ.தி.மு.க-வினர்.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் 2016-க்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் இல்லாமல் இருந்தன. ஏற்கெனவே இருந்த டாஸ்மாக் கடைகள் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்ததால், அவையும் அகற்றப்பட்டன. அதன் பிறகு டாஸ்மாக் கடையை வரவிடாமல் தனியார் பார் உரிமையாளர்கள் சிலர் தடுத்துவந்ததாகக் கூறப்பட்டது.
Also Read: சென்னையின் வசூல்ராஜா வட்டங்கள் முதல் உண்மையை உடைத்த கே.எஸ்.அழகிரி வரை..! - கழுகார் அப்டேட்ஸ்
இந்த நிலையில்தான், கன்னியாகுமரி சிலுவைபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று சில நாள்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அந்தக் கடையை மூடுவதற்காகச் சில அதிகாரிகள் மூலம் தனியார் பார் தரப்பினர் சிலர் முயன்றுவருகிறார்களாம். இதனால், அப்செட் ஆன குடிமகன்கள் டாஸ்மாக் வேண்டும் என்று போராடத் தயாராகிவருகிறார்கள்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க-வின் முன்னாள் பொறுப்பாளராக இருந்த ‘பார்’ இளங்கோவன், சமீபத்தில் ராசிபுரத்தில் நடந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்புவிழாவில் உளறிக்கொட்டியது கட்சி நிர்வாகிகளைத் தலைசுற்றவைத்திருக்கிறது. பேச்சின் தொடக்கத்திலேயே சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனை, ‘சுகாதாரத்துறை அமைச்சர்’ என்று டங் ஸ்லிப் ஆனவர், அமைச்சரை புகழும் ஆர்வத்தில், ‘‘தலைவர், தளபதியே உனக்குத் தேவையில்லை.
Also Read: மிஸ்டர் கழுகு: ‘ஷூட்டிங்’ முடிவது எப்போது? - உதயநிதிக்காக காத்திருக்கும் தி.மு.க!
உன் பெற்றோரையும், உன் சமூகத்தையுமே முதலில் நீ பார்’’ என்றெல்லாம் பேசிக்கொண்டே போக, கூட்டத்திலிருந்த நிர்வாகிகள் பலரும் அரண்டுபோய்விட்டார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலையேபடாத இளங்கோவன், தொடர்ந்து அமைச்சர் புகழ் பாடிவிட்டே பேச்சை முடித்தார்!
நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்த இன்னசென்ட் திவ்யாவை தமிழக அரசு மாற்றிய பிறகு, முதல்வரைச் சந்திக்க முயன்றிருக்கிறார் திவ்யா. முதல்வரின் செயலாளர் ஒருவரிடம் இதற்கான அனுமதியைக் கேட்டுக் காத்திருந்தவருக்கு, பதிலே வரவில்லையாம். ‘இன்னசென்ட் திவ்யாவை அங்கிருந்து மாற்றியே காட்டுவேன்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட மூத்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
ஊட்டியில் படிக்கும் தன் மகனைப் பார்க்க அங்கு சென்றபோது, கலெக்டர் தனக்கு சரியான ரெஸ்பான்ஸ் தரவில்லை என்ற காட்டத்தில் அந்த மூத்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி, முதல்வர் அலுவலகத்தில் லாபி செய்து திவ்யாவை ஒன்றுமில்லாத துறைக்கு மாற்றிவிட்டார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்!
source https://www.vikatan.com/news/tamilnadu/trichy-shiva-and-sasikala-political-news-in-kazhugar-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக