Ad

திங்கள், 13 டிசம்பர், 2021

`அடித்து ஆடும் அண்ணாமலை... தடுத்து ஆடும் திமுக; வலுக்கும் மாரிதாஸ் விவகாரம்!' - பின்னணி என்ன?

இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் குன்னூர் காட்டேரி வனப்பகுதியில் எதிர்பாராதவிதமாக நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது, நாட்டு மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையொட்டி யூடியூபர் மாரிதாஸ் டிவிட்டரில் பகிர்ந்த பதிவு ஒன்று பெரும் சர்சையைக் கிளப்பியது. அதையடுத்து, சிறிது நேரத்தில் அந்த சர்ச்சை பதிவு நீக்கப்பட்டது. மாரிதாஸின் ட்விட்டர் பதிவு இந்திய ராணுவத்தை விமர்சனம் செய்வதாக அமைந்திருந்தது என்றும், அதையொட்டி அவர் கைது செய்யப்பட இருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்ததால் அதை அவர் உடனடியாக நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தவறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது, வன்முறையைத் தூண்டியது ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த மதுரை காவல்துறை, மாரிதாஸைக் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட மாரிதாஸ் தேனி உத்தமபாளையம் கிளைச் சிறையில் டிசம்பர் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு தனியார் செய்தி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் மாரிதாஸ் சிறையில் இருக்கும்போதே தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாரிதாஸ் கைது செய்யப்பட்டபோதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்தது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை காவல்துறையையும், தமிழ்நாடு அரசையும் எச்சரிக்கும் விதமாக பல்வேறு கருத்துகளைத் தொடர்ந்து பேசிவருவதாக தி.மு.க-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பா.ஜ.க-வினர் போராட்டம்

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு எதிராக வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு பா.ஜ.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, ஆளுநரைச் சந்தித்து புகாரும் அளித்திருக்கின்றனர். மாரிதாஸ் கைதையொட்டி பா.ஜ.க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், ஆளும் தி.மு.க தரப்பு, பா.ஜ.க-வின் எதிர்வினைகளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் கடந்து செல்கிறது. தி.மு.க - பா.ஜ.க-வின் இந்த செயல்களுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் பின்னணி குறித்து விசாரித்தோம்...

Also Read: மாரிதாஸ் கைதுக்கு எதிர்ப்பு: சீமான் எழுப்பும் குரலுக்குப் பின்னால் இருப்பது என்ன?

தமிழ்நாடு பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜனிடம் இது தொடர்பாக பேசினோம். ``பா.ஜ.க-வினர் மட்டுமல்ல எல்லோருமே மாரிதாஸ் பேசியதில் என்ன கருத்து மீறல் இருக்கிறது எனக் கேள்விஎழுப்பி வருகிறார்கள். ஆளுநரைச் சந்தித்ததும் மாரிதாஸுக்காக மட்டுமல்ல. ஏறத்தால பா.ஜ.க-வினர் 21 பேர் மீது சின்ன சின்ன வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் கண்டித்துத்தான் நாங்கள் போராடி வருகிறோம். தேசத்துக்கு ஆதரவாகப் பேசுபவர்கள்மீது தேசத் துரோக வழக்கு தொடர்வது, தேசத்தை, பிரதமரைக் குறை சொல்லிப் பேசுபவர்கள் மீதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது என்ற இரட்டை நிலைப்பாட்டோடு தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. முப்படைத் தலைமைத் தளபதி மரணத்தையொட்டி பல்வேறு அவதூறுப் பதிவுகள் இணையத்தில் உலாவியதைப் பார்த்தோம். ஆனால், அவர்கள் மீதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ஜ.க ஆதரவாளர்கள்மீது மட்டும் கைது நடவடிக்கைகள் பாய்கிறது. இதெல்லாம் அநியாயமில்லையா? தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்தாததை, தி.மு.க-வின் நிர்வாகத் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் எங்களை முன்னிறுத்திக் கொள்வதாக எடுத்துக் கொள்வதா? முழுக்க முழுக்க தமிழக மக்களுக்காகவும் அவர்களின் நலனுக்காகவுமே பேசுகிறது பா.ஜ.க. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க சிறிய கட்சி, மக்களிடம் ஆதரவு இருந்தாலும் ஆளும் அரசாக இல்லை என்ற எண்ணம் தி.மு.க-வினருக்கு இருக்கிறது.

கரு.நாகராஜன்

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும், கூட்டணிக் கட்சியாகவும் மத்தியில் ஆளும் அரசாகவும் இருக்கும் கட்சி பா.ஜ.க என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. அந்தப் பெருமையைச் சொல்வதைத் தவறில்லை. அதை மிரட்டலாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பா.ஜ.க-வின் எந்தச் செயலும் கட்சிக்காக இல்லை தமிழக மக்களின் நலனுக்காக மட்டுமே” என விளக்கினார்.

பா.ஜ.க-வின் செயல்பாடுகள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசனிடம் கேட்டோம். ``ஒன்றிய அமைச்சகம் நேரடியாக ஆய்வு செய்து ‘விபத்தால்தான் முப்படைத் தலைமைத் தளபதி இறந்தார்’ எனப் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த மாரிதாஸ் என்பவரின் பதிவு ஒன்றிய அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், அமைச்சர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தும் வகையிலிருக்கிறது. தமிழ்நாட்டில் அமைதியைக்குலைத்து, அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் மாரிதாஸ் போன்றவர்களின் செயல்களைத் தனிமனித, கருத்து, எழுத்து சுதந்திரம் என்ற வரையறைக்குள் அடக்குவது அபத்தம். மாரிதாஸுக்கு ஆதரவு தெரிவிப்பதன்மூலம் தானும் அவருடைய கருத்துடன் உடன்படுகின்றேன் என்கிறார் அண்ணாமலை. எனவே, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒன்றிய அரசுக்கு, தேசிய பா.ஜ.க-வுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கூட்டம் எப்போதும் குற்றவாளிகள் பக்கமே நிற்பார்கள். இது அவர்களின் ரத்தத்தில் ஊறியது. தமிழ்நாட்டு பா.ஜ.க-வினரும் அதற்கு விதிவிலக்கில்லை என்பதை நடைமுறைகள் காட்டுகின்றன. அண்ணாமலையைத் தமிழ்நாட்டு மக்கள் கண்டுகொள்ளவே இல்லை.

தமிழ் கா.அமுதரசன் - திமுக

நானும் அரசியல் கட்சியின் தலைவர்தான் என்னையும் கண்டுகொள்ளுங்கள் என்று காட்டும் வகையில் அண்ணாமலை பேசிவருகிறார். ஆனால், அதை அவர்கள் கட்சியினரே மதிக்காதபோது மக்கள் மத்தியில் எப்படி மதிப்பு இருக்கும். தமிழ்நாடு அரசு எதிர்வினை செய்யும் அளவுக்குக் கருத்துச் சொல்லும் இடத்தில் அண்ணாமலை இல்லை. அண்ணாமலையை ஒரு பொருட்டாகவே தி.மு.க எப்போதும் கருதியதில்லை. எனவே, அவருக்கும் அவர் பேச்சுக்கும் நாங்கள் எப்போதும் மதிப்பளிப்பதில்லை” என விமர்சனங்களுக்கு விளக்கமளித்தார்.

Also Read: மாரிதாஸ், மதன் ரவிச்சந்திரன், கிஷோர் கே ஸ்வாமி மீதான நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருப்பது தி.மு.கவா?



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-vs-bjp-whats-behind-the-arrest-of-youtube-maridas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக