Ad

புதன், 4 நவம்பர், 2020

ஆங்ரிபேர்ட் ஆரி vs இரிடேட்டிங் பாலா... குறும்படம் ரெடியாகுது மக்களே! பிக்பாஸ் – நாள் 31

சுச்சியம்மன் அருளாசி வழங்கியதில் இருந்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சாமியாடத் துவங்கியிருக்கிறார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 40 நிமிட வீடியோவில் ‘தான் சம்பந்தப்பட்ட பகுதி வந்தேயாக வேண்டும்’ என்கிற ஆவேசத்தில் இருக்கிறார்கள். கேமரா இல்லாத இடத்தில் கூட ‘கன்டென்ட்’ தேடுகிறார்கள்.

சர்ச்சைகளின் நாயகனான பாலாஜியுடன் கூடவே ஊட்டி உலாவினால்தான் பிழைக்க முடியும் என்கிற ரொமான்ட்டிக் உத்தி ஷிவானிக்கு நன்கு தெரிந்திருக்கிறது. பாலாஜியுடன் ஒரண்டை இழுத்துக் கொண்டேயிருந்தால்தான் சர்ச்சைகளின் நாயகியாக நீடிக்க முடியும் என்பதை சனமும் உணர்ந்திருக்கிறார்.

‘சப்ஜெக்ட் கிட்ட ஏதோ அசைவு தெரியுது’ என்பது மாதிரி சோம் கூட இப்போது பேசத் துவங்கியிருக்கிறார். ‘சும்மாயிருங்க’ என்று ஆஜித் கூட ஒரு முறை கத்திவிட்டார். ‘நின்னா ஸ்ட்ராட்டர்ஜி... நடந்தா ஸ்ட்ராட்டர்ஜி’ என்று சீன் போட்டுக் கொண்டிருந்த சுரேஷ், இப்போது சும்மா இருந்தால் வேலைக்கு ஆகாது என்று பழைய அவதாரத்தை மறுபடியும் கையில் எடுத்திருக்கிறார்.

பிக்பாஸ் – நாள் 31

குருவை மிஞ்சும் சிஷ்யனாக சுரேஷிற்கே ‘ஸ்ட்ராடடர்ஜி’ என்றால் என்ன என்று பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் பாலாஜி. ஆனால் இந்த ராஜதந்திர ஓவர் டோஸ் அவருக்கே பூமராங் போல ஒருநாள் திரும்பலாம். இன்று விவாத மன்றத்தின் வழக்கு ஒன்றில் அவரின் பக்கம் ஆதரவாளர்கள் எவருமே வரவில்லை என்பது ஒரு எச்சரிக்கை மணி.

கடுமையான விவாதத்திலும் கூட தனது ‘குளுமையை’ இழக்காமல் இருப்பது ரம்யாவிற்கு ஒரு ப்ளஸ் பாயின்ட். ‘அட்வைஸ்’ ஆரி கூட இப்போது தியான அமைதியை கை விட்டுவிட்டு ‘மனோகரா’ சிவாஜி மாதிரி நரம்பு புடைக்க வசனம் பேச ஆரம்பித்திருக்கிறார். அமைதிப்புறாவாக இருந்த சம்யுக்தா ஆரியுடன் ஹைடெஸிபலில் மல்லுக்கட்டுகிறார்.

இப்படி ஆளாளுக்கு ஸ்கோர் செய்வதற்காக ஒருவரையொருபவர் பிராண்டி கொண்டிருக்கும்போது இரண்டு உருவங்கள் மட்டும் ஷிவானியின் கையிலிருந்த மிக்ஸர் பாக்கெட்டை வாங்கி தம் கையில் வைத்திருக்கின்றன.

ஆம்... அது ரமேஷூம், நிஷாவும். ரமேஷ் வந்த நாள் முதலே அப்படித்தான் இருக்கிறார் என்பதால் அது நமக்கு ஆச்சர்யமில்லை. ஆனால், அவ்வப்போது பிரகாசித்துக் கொண்டிருந்த நிஷா, இப்போது ஓவராக ஓய்ந்து போய் அமர்ந்து ரணகளமான சண்டைக்கு இடையிலும் தட்டில் இருக்கும் ஆப்பிளை சைலன்ட்டாக மொக்கிக் கொண்டிருக்கும் ஜென் நிலைக்குச் சென்றதன் காரணம் தெரியவில்லை.

31-ம் நாளில் என்ன நடந்தது என்ன?!

பிக்பாஸ் – நாள் 31

மார்னிங் டாஸ்க். சுரேஷ் ஜோசியம் சொல்ல வேண்டுமாம். ‘எனக்கு இதில் நம்பிக்கையில்லை. இருந்தாலும் கடமையைச் செய்கிறேன்’ என்று ஆரம்பித்தார் சுரேஷ். இவர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் ‘டாஸ்க்’ என்று வந்துவிட்டால் அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள முயல்கிறார் சுரேஷ். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால் சமயங்களில் இது ஓவர் ஆக்ட்டும் ஆகி விடுகிறது.

சுரேஷின் ஜோசியம் கிண்டலான வார்த்தைகளுடன் இருந்தாலும் உள்ளே விஷயமும் இருந்தது. சோம் இந்த வாரம் எவிக்ஷன் ஆகலாம் என்கிற நோக்கில் ‘இந்த வாரம் நீ புட்டுக்கலாம்’ என்று சுரேஷ் ஆரூடம் சொன்ன போது சோமின் முகம் மாறியது. ‘அய்யாங்... என்று தயங்கிக் கொண்டே வந்த அனிதாவிடம் “கலையம்சம் இருக்கிற தேவதை நீ... ஏன் சில்ற தெய்வத்துக்கு பக்கம் போறே. நீயே ஒரு பெரிய தெய்வம்" என்று அனிதாவை ஏற்றிவிட்டு அனுப்பினார். ரம்யாவிற்கு சொன்னதுதான் சிறப்பு. "உன்னை நம்பவே முடியாது. நீ ஒரு டேஞ்சர் பார்ட்டி. ஆனா நல்ல டேஞ்சர். மத்தவங்களைக் கொல்லாது. வெளிலதான் அனுப்பும்" என்று சொன்னதும் சபை கலகலத்தது. ரம்யாவின் புன்னகைக்கு பின்னால் இருக்கும் ஆயுதங்கள் அப்படி!

**

மீண்டும் வெட்டி மன்றம் ஆரம்பித்தது. வழக்கு எண். XVI2347/04.11.2020 – பாலாஜி வெர்சஸ் சோம்.

“என்னை இவர் puppet-ன்னு சொன்னாரு. ஈஸியா இன்ஃப்ளூயன்ஸ் ஆயிடுவேன்னு சொன்னாரு. குரூப்பிஸம்-ன்னு சொன்னாரு. ஆனா இதுவரை என் கிட்ட சரியா விளக்கம் தரலை" என்று பாலாஜியின் மீது பிராது கொடுத்தார் சோம்.

“நான் நாமினேட் பண்றதுக்காக தனியா சொன்ன காரணத்தை கமல் சார் கேட்டதால சபையில் அழுத்திச் சொன்னேன். அந்த வார்த்தை தப்புன்னா கமல் சாரும் ஆட்சேபம் சொல்லியிருப்பாரு. ‘மக்களும் அப்படித்தான் நெனக்கறாங்க’ன்னு அவர் சொன்னாரு. Puppet-ன்ற வார்த்தையை நான் எதிர்மறையா பயன்படுத்தலை. ஷோகேஸ் பொம்மை-ன்றதை மட்டும் சோம் ஏத்துக்கிட்டாரே..." என்று விளக்கம் அளித்தார் பாலாஜி.

"குரூப்பிஸம் இருக்குன்னு மக்களைப் பார்த்து கமல் சொல்லவில்லை. அது பொய்" என்று நிஷா ஆட்சேபிக்க ‘இல்லை.. சொன்னார்’ என்று சம்யுக்தா உள்ளிட்டவர்கள் சொன்னார்கள். (ஆனால் சம்பந்தப்பட்ட நாளின் எடிட்டட் வெர்ஷனில் கமல் அப்படிச் சொன்னது போல் தெரியவில்லை).

பிக்பாஸ் – நாள் 31
பாலாஜியின் ஆதரவாளர்களாக எவரும் வந்து நிற்கவில்லை. அவர் தனது தனிப்பட்ட ‘கேமிற்காக’ மாற்றிப் மாற்றி பேசுவதும் நடந்து கொள்வதும் இதர போட்டியாளர்களை எரிச்சலடைய வைத்திருக்கலாம். அதனால் எவரும் ஆதரவாக வந்து நிற்கவில்லை போல.

இந்த வாக்குவாதத்தின் இடையில் ‘Puppet’ என்கிற வார்த்தையின் தெளிவான பொருள் விளக்கத்தை சுரேஷ் தமிழில் சொன்னது சிறப்பு. “நான் ஒரே ஒரு முறை வார்த்தையா சொன்னதை விடவும் எதிர்தரப்பு ஆயிரம் முறை சொல்லிட்டு அதற்கு நிறைய விளக்கம் தர்றதுதான் சோமிற்கு உண்மையான அசிங்கம்" என்பது போல் பாலாஜி இதை எதிர்கொண்டார்.

“குழந்தை-ன்னு சொல்லப்பட்டதுக்காக அப்படி கோபப்பட்ட பாலாஜி... இன்னொருத்தரை puppet-ன்னு சொல்லலாமா?" என்று ரியோ ஒரு வலுவான பாயின்ட்டைப் பிடிக்க சோமின் தரப்பு கைத்தட்டியது. (அழுத்தம் தந்து சொன்னால்தான் அது puppet என்பதாக ஒலிக்கும். ரியோ அழுத்தாமல் சொன்ன விதம் – பப்பட்- அப்பளம் - என்பதாக இருந்தது).

இதற்கிடையில், ‘எனக்கு பேச வாய்ப்பு கொடுங்க’ என்று சனம் முன்வைத்த கோரிக்கை நீதிபதியால் வன்மையாக மறுக்கப்பட்டது. “ஆரிக்கு மட்டும் பேச வாய்ப்பு கொடுத்தீங்க... ஏன் சனத்திற்கு மறுக்கறீங்க?” என்று நிஷாவும் ரம்யாவும் நீதிபதியிடம் கேள்வி எழுப்பினார்கள்.

பிக்பாஸ் – நாள் 31
‘Puppet’ என்கிற வார்த்தை வெறுமனே சொல்லப்பட்டதா, அல்லது உள்நோக்கத்துடன் கடுமையானப் பொருளில் சொல்லப்பட்டதா என்று நீதிபதி வாக்கெடுப்பு நடத்த எண்ணிக்கை சோமிற்கு ஆதரவாக வந்தது.

சோமின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக நின்றார்கள் என்பதை விடவும் ‘அந்த வீட்டில் குரூப்பிஸம் இருக்கு’ என்று சொன்னதற்காக பாலாஜிக்கு எதிராக நின்றார்கள் என்றே சோமின் வெற்றியை அர்த்தம் கொள்ள வேண்டும். பாலாஜியை தனிப்பட்ட வகையில் பிடிக்காத ஆரி போன்றவர்களும் இதில் இணைந்து கொண்டார்கள். எனவே சோமிற்கு இந்த வெற்றி கிடைத்தது.

ஆனால் - சோம் ஒரு குரூப்பின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்பதை நிரூபிக்க இத்தனை போராட வேண்டிய அவசியமேயில்லை. இதுவரையான காட்சிகளை பார்த்தாலே தெரிந்துவிடும். சோமின் தனித்தன்மை வெளிப்பட்ட காட்சி என்று எதுவுமே இதுவரை இல்லை. ஊரே அறிந்த ரகசியத்தை நிரூபிக்க ஏன் இத்தனை போராட்டம்?

கோர்ட்டில் தனியாக நின்று மல்லுக்கட்டி தோல்வியடைந்தாலும் ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என்று அப்போதும் மற்றவர்களை அசிங்கப்படுத்தி விட்டு சிரித்துக் கொண்டே சென்றார் பாலா.

“கூடி வர்ற நேரத்துல வெடிகுண்டை போட்டு குழப்பிடாத. பொறுமையா இரும்மா” என்று சனத்திற்கு ஆலோசனை தந்து கொண்டிருந்தார் அர்ச்சனா.

**

அடுத்த வழக்கு. எண். XVI2348/04.11.2020 – சம்யுக்தா வெர்ஸஸ் ஆரி.

“ஆரி இந்த வீட்டில் கார்னர் செய்யப்படுவதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை" என்பது சம்யுக்தாவின் குற்றச்சாட்டு. "நான் பொய் சொன்னதா ஆரி சொன்னாரு. அது மிகப்பெரிய குற்றச்சாட்டு. என்னை கேப்டன் ஆக்கினதுக்காக பாலாஜிக்கு நான் சப்போர்ட் பண்றேன்னு சொன்னாரு... பாலாஜிக்கு நான் என்ன சப்போர்ட் பண்ணியிருக்கேன்? சனத்திற்கும் பாலாஜிக்கும் நடந்த சண்டைல என்ன ஏதுன்னே விசாரிக்காம... ஒரு பொண்ணு கிட்ட மரியாதை இல்லாம பேசலாமான்னு பாலாஜியைத்தான் அவர் கார்னர் பண்ணாரு” என்றெல்லாம் சாம் பொங்கிக் கொண்டே போனார்.

இதற்கு பதில் சொல்லும் விதமாக ஆரி ஆவேசமாக வந்தபோது 'பராசக்தி' சிவாஜி, 'எரிசக்தி' விஜயகாந்த் ஆகிய படங்களின் கலவை போல, கண்கள் சிவக்க, தொண்டை நரம்பு புடைக்க ‘வெறித்தனமாக’ பேசினார்.

பிக்பாஸ் – நாள் 31

“ஒரு கேப்டனோட பொறுப்பு சம்யுக்தாவிற்கு தெரியல. டைனிங் டேபிளில் அத்தனை பேர் இருக்கும் போது என்னை மட்டும் ‘நீங்கதான் வொர்க்அவுட் பண்ணிட்டு லேட்டா வர்றீங்கன்னு’ சொல்றாங்க” என்று ஆரி கோபப்பட்டார். ஆனால் அந்த நாளில் ‘டைமுக்கு வந்து சாப்பிடுங்க’ என்று சாம் ஒரு பொது அறிவிப்பை வெளியிடும் போது ‘நான் லேட்டாதான் வருவேன்’ என்று டாப்பிக்கை ஆரம்பித்ததே ஆரிதான்.

"பழைய பெருக்கற டீம் கிட்ட வேலை வாங்கத் தெரியாம என் கிட்ட வந்து ஒப்படைக்கிறாங்க” என்கிற ஆரியின் அடுத்த குற்றச்சாட்டு சரியானது. (உண்மையில் இது விஷயமாக சாம், ஆரியிடம் நேராக வந்து பேசியிருக்கத் தேவையில்லை. ஹவுஸ் கீப்பிங் கேப்டனாக இருந்த வேல்முருகன் வெளியேறி விட்டதால் அந்த அணியில் இருந்தவர்களை அனுப்பி ஆரியிடம் பேசச் சொல்லியிருக்கலாம். முன்பு அர்ச்சனாவும் இப்படித்தான் சூசகமாக கையாண்டார். சாம் இதைக் கையாண்டது பாரபட்சமாக இருந்தது).

கடந்த சீஸனில் சேரனோடு ஜாடையாக சண்டையிடும் போது சரவணன் சில ஆட்சேபகரமான வார்த்தைகளைச் சொல்லி விட்டு "இப்படியெல்லாம் நான் சொல்லிடப்போறேன்” என்று சமாளித்து விட்டார்.

இதைப் போலவே ‘தறுதலை’ என்கிற வார்த்தையை சாமை நோக்கி சிலமுறை ஆவேசமாக சொன்ன ஆரி, "சொல்லும் முறையில் வார்த்தையின் அர்த்தம் வேறுபடும். தறுதலை-ன்றது மோசமான வார்த்தை. இளம் பார்வையாளர்கள் பாதிக்கப்படலாம்" என்று ஆவேசத்தை தொடர, பார்வையாளர்களின் வரிசையில் இருந்த பாலாஜி எதையோ முணுமுணுக்க இன்னமும் வெறியானார் ஆரி. சிறுபிள்ளைகள் பதிலுக்குப் பதில் பேசுவது போன்ற தன் வழக்கமான பாணியில் இதை எதிர்கொண்டார் பாலாஜி.

சம்யுக்தாவிற்கு ஆதரவாக வந்த பாலாஜி, ஆரி கையாண்ட அதே ‘சரவணன்’ பாணியை உபயோகப்படுத்தி, "ஒரு பொண்ணு... ‘டேய் முட்டாப்பயலே’ன்னு சொன்னா (கை ஆரியை நோக்கி இருந்தது) பதிலுக்கு நானும் போடி-ன்னுதான் சொல்லுவேன். ஆணும் பெண்ணும் சமம்-ன்னுதான் நான் பார்க்கறேன்” என்றார். ஆனால், ‘பெண்களை மரியாதைப்படுத்தி பேச வேண்டும்’ என்கிற டாஸ்க்கில் ‘பெண்ணை சமமாத்தான் பார்க்கணும். ஆனா என்னால் அது முடியலை. மேம்படுத்திக் கொள்கிறேன்’ என்று இதே பாலாஜிதான் அப்போது சொன்னார்.

பிக்பாஸ் – நாள் 31

“ஒரு பொண்ணால ஃபிஸிக்கல் டாஸ்க் செய்யறது கஷ்டம். அதனாலதான் பாலாஜியின் உதவியை சாம் ஏற்றுக் கொண்டார்" என்பது போன்ற விவகாரமான திரியை சனம் கொளுத்திப் போட பாலாஜிக்கும் சனத்திற்கும் இடையில் மறுபடியும் சண்டை பற்றிக் கொண்டது.

ஆரிக்கு ஆதரவாளராக பேச வந்த அனிதா, "பாலாஜி தன் தனிப்பட்ட விவகாரத்தைப் பேசத்தான் இந்தத் தருணத்தை பயன்படுத்திக் கொள்கிறார். சாமிற்கு ஆதரவாக அல்ல" என்றதும் சபையில் பலத்த கைத்தட்டல்.

‘நான் நெத்தில அடிச்ச மாதிரி சொல்வேன்’ என்பதை ஆரி ‘வார்னிங்’ டோனில் சொல்லவில்லை என்பதும் அனிதாவின் வாதம். (ஆரியும் இதை அப்போதே தெளிவுப்படுத்திவிட்டார். என்றாலும் பாலாஜி சமயம் பார்த்து இதை வேண்டுமென்றே எதிராக பயன்படுத்துகிறார்).

'ஆரி கார்னர் செய்யப்படுகிறாரா, இல்லையா’ என்கிற வாக்கெடுப்பில் ‘செய்யப்படவில்லை’ என்பதற்கே அதிக வாக்குகள் விழ சம்யுக்தாவிற்கு வெற்றி கிடைத்தது.
“அவர் ஒரு பொண்ணு முன்னாடி கை நீட்டி ‘தறுதலை. தறுதலை...ன்னு சொன்னப்ப எனக்கு எரிச்சலா வந்தது. அதனாலதான் அவர் பக்கம் போகலை" என்று சம்யுக்தாவிடம் சொல்லிக் கொண்டே வந்தார் ரம்யா. ஆரி ரம்யாவின் ஆதரவை இழந்ததற்கான காரணம் இது.

ஒருவன் எத்தனை நல்லவனாகவும் பொறுமைசாலியாகவும் இருந்தாலும் ஒரே ஒருமுறை நிதானம் தவறிவிட்டால் உலகம் அவனுக்கு எதிராக திரும்பி விடும் என்பதே இதிலுள்ள நீதி. ‘அவன் அப்படித்தாம்ப்பா..,’ என்று கெட்டவனைக் கூட விட்டு விடும். ஆனால் ஒரு நல்லவன் நிதானம் தவறினால் "நீயாப்பா இப்படி?” என்று குத்திக் காட்டியே சாகடிப்பார்கள்.

**

‘கோர்ட்டில் என் மேல் தனிப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆரி வைத்தார். அதை சரி செய்து கொள்ள விரும்புகிறேன். யாராவது மத்தியஸ்தம் செய்யுங்கள்’ என்று கேப்டன் சம்யுக்தா பிறகு ஊரைக் கூட்டினார். ஆனால் இது சம்யுக்தாவிற்கும் ஆரிக்குமான உரையாடலாக அல்லாமல் வண்டி பாலாஜி பக்கம் திரும்பியது.

பிக்பாஸ் – நாள் 31

உரையாடலை சம்யுக்தா தொடர்பாக நிகழ்த்தாமல், '‘நான் வார்னிங் தந்தேன் என்று பாலாஜி மீண்டும் மீண்டும் தவறாக கூறினார். இதெல்லாம் நல்லால்லை’' என்று ஆரி கோபமாக கூற... ‘'நான் அப்படிச் சொல்லவேயில்லை. நீதான் என்னை பிராண்ட் பண்றே'’ என்று பாலாஜி வலுவாக மறுத்துக் கொண்டிருந்தார்.

(கோர்ட் ரூமில், ‘ஆரி எங்களை வார்ன் செய்தார்... இது பிக்பாஸ் ரூல்ஸ்ஸிற்கு எதிரானது’ என்று சொன்னவர் பாலாஜிதான். வசதியாக மறந்துவிட்டார் போலிருக்கிறது.)

‘நீதான் பிராண்ட் பண்றே’ என்று பரஸ்பரம் இருவரும் அடித்துக் கொண்டார்கள். ''உங்களை ‘அட்வைஸ் ஆரி’ன்னு பிராண்ட் மொதல்ல பண்ணதே நான்தான்" என்று முன்பு சிரித்துக் கொண்டே பாலாஜி சொன்னது நினைவிருக்கலாம். அதை மிகச்சரியாக ஆரி இப்போது நினைவுப்படுத்தினார்.

நட்பு மனநிலையில் விளையாட்டாக ஒப்புக் கொள்ளும் ஒரு வாக்குமூலம் பிற்சமயத்தில் நமக்கே பூமராங்காக திரும்பும் என்பதே இதிலுள்ள நீதி.

**

‘ஆரிக்கும் பாலாஜிக்கும் மோதல் உக்கிரமாகப் போகிறது’ என்று ஆவலுடன் காத்திருந்த பிக்பாஸ், பாலாஜி அங்கிருந்து விலகிச் சென்றவுடன் ‘போச்சா... சரி கெடச்ச வரைக்கும் லாபம். அடுத்த பஞ்சாயத்தைப் பார்ப்போம்’ என்று ‘வெட்டி மன்றத்தை’ மீண்டும் கூட்டினார். அதுவரை எவரும் பெரிதாக எதிர்க்கத் துணிந்திராத பாலாஜியை இன்று ஆரி ரவுண்டு கட்டி அடித்தது சிறப்பு. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

பிக்பாஸ் அத்தனை செலவு செய்து ஏராளமான கேமராக்கள் வைத்திருந்தும் ‘என்கிட்ட எல்லாத்துக்கும் எவிடென்ஸ் இருக்கு’ என்று ஆரி சொன்னது எதற்கு, அவரும் தனிப்பட்ட முறையில் ஒரு கேமரா வைத்திருக்கிறாரா?

‘கேப்டன் பொசிஷனுக்கு ஐஏஎஸ் படிச்சிருக்கணும்னு அவசியமில்லை’ என்று சம்யுக்தா குத்தலாக சொன்னதுக்கு மக்கள் கைத்தட்டினார்கள். இதற்கும் அநாவசியமாக ஆரி கோபித்துக் கொண்டார்.

**

பிக்பாஸ் – நாள் 31

அடுத்த வழக்கு சீரியஸாக இல்லாமல் காமெடியாக போனது. இது தாத்தா மீது கேப்ரியல்லா தொடுத்த வழக்கு. ‘கொளுத்திப் போடுவதின் மூலம் மற்றவர்களி்டம் செல்வாக்கு செலுத்துகிறார், பலவற்றிற்கு ஓவர் ரியாக்ட் செய்கிறார்’ என்பது கேப்ரியல்லாவின் குற்றச்சாட்டுகள்.

சோம் ஒரு பொம்மை என்பது வெளிப்படையான உண்மை என்பதைப் போலவே சுரேஷின் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்களும் வெளிப்படையான உண்மைகள்தான்.

‘சுமங்கலி’ விவகாரம் நிகழ்ந்த நாளன்று சுரேஷ் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தார். அவரைச் சமாதானப்படுத்தி அமர வைத்த கேபியிடம் பயங்கரமாக கோபித்துக் கொண்டு பின்பு 'சாரி' சொன்னார். ஆனால் என்னதான் மன்னிப்பு கேட்டாலும் கேபியின் மனம் முதலில் புண்பட்டது புண்பட்டதுதான். யார் மீதோ உள்ள கோபத்தை தன்னிடம் ஏன் காட்ட வேண்டும் என்கிற கேப்ரியல்லாவின் ஆதங்கத்தில் நியாயமுள்ளது. அதைத்தான் மனுவாக எழுதியிருக்கிறார்.

சுரேஷ் தன் வாதத்தை தொடர்ந்த போது, "இந்த விவகாரத்துல ஏன் என் கையைப் பிடிச்சு இழுக்கணும்?” என்று அனிதா ஆட்சேபித்தார். ‘வயத்து வலி வந்தா அதுக்கு காரணமா இருந்தவங்ககிட்ட பேச வேண்டியதானே. சும்மா இருந்த கேபி கிட்ட ஏன் காட்டணும்?’' என்று பிறகு ரியோ கேட்டது நியாயமானது.

இந்த வழக்கின் தீர்ப்பு வரப் போகிற சமயத்தில் இதில் ஒரு கூடுதல் பரிமாணத்தை இணைத்தார் சம்யுக்தா. ''தாத்தா செய்யற குசும்புன்னும் ஒரு வாக்கெடுப்பு நடத்தறீங்களா?'' என்று விளையாட்டாக கேட்க, மங்குனி நீதிபதியும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

" குசும்பு என்கிற வார்த்தை தன்னை பொதுவெளியில் தவறாகச் சித்திரிக்கும். சம்யுக்தா கடைசி நேரத்தில் இதை இணைத்தது தவறானது. இதற்கு காரணம் யாரென்று எனக்குத் தெரியும்...” என்று பொங்கிக் கொண்டிருந்தார் சுரேஷ். ஆனால் ‘'குசும்பு என்பதை எதிர்மறையான பொருளில் நாங்கள் சொல்லவில்லை’' என்று ரியோ சமாதானம் செய்தார். தீர்ப்பு கேப்ரியல்லாவிற்கு சாதகமாக வந்தது.

பிக்பாஸ் – நாள் 31

விவாத மன்றம் முடிந்ததும் அனிதா, கேபி போன்றோர் சுரேஷிடம் வருத்தம் தெரிவிக்க முயல ‘ஒருத்தர் கோபமா இருக்கும் போது விட்டுருங்க... அப்ப நீங்க ஏதாவது சொல்லி நானும் பதிலுக்கு கோபப்பட்டு பிரச்னையாயிடுது” என்று சுரேஷ் செய்தது ‘ஓவர் ரியாக்ஷன்!’

ஊரே பற்றி எரியும் போது நீரோ மன்னன் பீப்பி வாசித்துக் கொண்டிருந்தானாம். அது போல ரணகளமான இந்தச் சூழலிலும் பாலாஜி – ஷிவானியின் ரொமான்ட்டிக் எபிஸோட் உக்கிரமாக முன்னேறிக் கொண்டிருந்தது. தன்னிடம் இருந்த கேசரியை, ''மாமா... சாப்பிடறீங்களா?'’ என்பது போல் ஷிவானி கேட்க பாலாஜியும் அதற்கு உடன்பட்டார்.

இதை தூரத்தில் இருந்து காண்டுடன் பார்த்துக் கொண்டிருந்த கேப்ரியல்லா, ‘'என்னவே நடக்குது இங்க?’' என்று பொருமிக் கொண்டிருந்தார். பிறகு, அவர் ஆஜித் தன் கண்களில் தவறாக இடித்துவிட்டதால் அழுதாரா அல்லது பாலாஜி – ஷிவானி எபிஸோடை பொறுக்க முடியாத எரிச்சலில் அழுதாரா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியது. "இரு... நான் போய் அவங்க ஆட்டத்தைக் கலைக்கறேன்” என்று சிவன் பூஜை கரடியாக ஆஜித் அங்கு சென்று அமர்ந்தது ஹைலைட் தருணங்களில் ஒன்று.

''நீதிபதியும் சரியில்ல... கேப்டனும் சரியில்ல... கேபியும் சரியில்ல. எந்தப் பாபியும் சரியில்ல’' என்பது போல் கேமராவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் சுரேஷ். பாலாஜிதான் இதன் பின்னணியில் செயல்படுகிறார் என்பது அவரின் கோபத்திற்கு காரணம். எனவே பாலாஜி vs சுரேஷ் வழக்காடு மன்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.

அனிதாவின் மீதுள்ள கோபத்தை முன்பு கேப்ரியல்லா மீது காட்டிய அதே தவறை இப்போதும் செய்தார் சுரேஷ்.

பிக்பாஸ் – நாள் 31

‘நான் அப்பவே சாரி கேட்டுட்டேன். நீயும் அப்பவே விட்டிருக்கணும். ஆனா... நீ மறக்காம இப்ப மனு கொடுத்திருக்க! அப்படின்னா... இனிமே என்கூட பேசாத. கிட்ட வராதே. நான் வந்தேன்னா... கால்ல இருக்கறதை எடுத்து அடி" என்றெல்லாம் ஒரு சின்னப் பெண்ணிடம் எங்கோ இருக்கும் கோபத்தைக் காட்டினார் சுரேஷ்.

‘ஓவர் ரியாக்ஷன்’ என்கிற புகாருக்கு கோபித்துக் கொள்ளும் சுரேஷ், இப்போது செய்து கொண்டிருப்பதும் அதுதான். ''தாத்தா... பர்சனலா எடுத்துக்காதீங்க'’ என்று கோர்ட் ரூமில் கேபி சொன்ன போது ‘ச்ச்சீ... அதெல்லாம் இல்ல’ என்று தலையாட்டி விட்டு பிறகு கோபித்துக் கொள்கிறார் என்றால் என்ன பொருள்? அவரின் பிரதான கோபம் கேப்ரியல்லா மீது இல்லை. பாலாஜி மற்றும் சம்யுக்தாவின் மீது. ஆனால் பின்னாலேயே வருத்தத்துடன் வருகிற சிறிய பெண்ணை இதற்காக பலி போடுகிறார்.

'நான் உக்காந்த சேரை எட்டி உதைச்சாங்க’ என்பதும் சுரேஷ் சொல்கிற குற்றச்சாட்டு. இது அனிதா தொடர்பானது. ஆனால் எப்போதும் பெயர்க்குழப்பம் ஏற்படும் சுரேஷ், இப்போது ‘அர்ச்சனா’ என்று தவறாக சொல்ல விட்டார்.

விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சி நாளின் நிறைவுச் சமயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ‘நான் உக்காரப் போன சேரை உதைச்சாங்க’ என்று அப்போதும் சுரேஷ் சொன்னது யாருக்கும் சரியாகப் புரியவில்லை.

நான் சம்பந்தப்பட்ட நாளின் வீடியோவை பார்த்தேன். என்ன நடந்தது என்றால்…

பிக்பாஸ் – நாள் 31

சைகையின் மூலம் பாடல் வரிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற விளையாட்டிற்கான அழைப்பு வந்தது. அனைவரும் வந்து உட்கார்கிறார்கள். அப்போது அங்கு வரும் அனிதா, தரையில் தான் உட்கார இடம் செய்வதற்காக அருகிலிருக்கும் சிறிய நாற்காலியை காலால் தள்ளி விட்டு உட்கார்கிறார். இந்த இயல்பான விஷயத்தை சுரேஷ் உலக சதி போல் புரிந்து கொள்வது வயதானவர்களுக்கேயுரிய வீண் பிடிவாதம் என்றுதான் எடுத்துக் கொள்ள முடிகிறது.

சம்யுக்தாவின் மகன் (சர்க்கரை) பிறந்த நாள் வீடியோ திடீரென்று வீடியோவில் ஒளிபரப்பாக, உணர்ச்சிமிகுதியில் அழுதார் சாம். இத்தோடு இன்றைய நாள் முடிந்தது.

‘வெட்டி மன்றம்’ என்கிற பெயரில் நிகழும் சந்தைக்கடை கூச்சல் வரும் நாட்களிலும் தொடரும் என்பதை நினைத்தால்தான் பீதியாக இருக்கிறது.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/aari-vs-balaji-courtroom-drama-continues-bigg-boss-tamil-season-4-day-31-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக