Ad

புதன், 4 நவம்பர், 2020

தேனி: 9 அடிக் குழியில் இறங்கிய அகோரி! - ஜீவசமாதி தகவலால் பதறிய காவல்துறை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது மொட்டனூத்து கிராமம். இங்கு வசிக்கும் ராஜேந்திரன் என்பவரது மகன் அசோக் என்கிற சொக்கநாதன் 13 வயதில் ஊரை விட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சொக்கநாதன் நான்தான் எனக் கூறி, காசியில் இருந்து சாமியார் ஒருவர் மொட்டனூத்து கிராமத்திற்கு வந்துள்ளார். அவரிடம் பேசிய கிராமத்தினரிடம், ``25 வருடமாக, காசியில் தவம் இருந்தேன். இப்போது நான் அகோரியாக இருக்கிறேன். உலகம் அழியும் முன்னர், நான் பூமி பூஜை மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடு செய்யுங்கள்” என கூறியிருக்கிறார்.

அகோரி சாமியார்

அதனைக் கேட்ட கிராமத்தினர், அகோரி சாமியாரால், கிராமத்தில் ஏதாவது பிரச்னை உருவாகிவிடுமோ என்று அஞ்சி, அவருக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமாகினர்.

Also Read: `வெடிவாழை நோய்க்கு ஹோமியோபதி மருந்து!' விவசாயிகளுக்கு தெம்பூட்டும் தேனி மருத்துவர்

அந்த வகையில், மொட்டனூத்து கிராமத்தில் உள்ள தோப்பு ஒன்றில், 9 அடி ஆழ குழிவெட்டி அதன் உள்ளே அகோரி சாமியார் பூமி பூஜை செய்ய ஏற்பாடு செய்தனர் கிராம மக்கள். நேற்று (04.11.2020) காலை, அந்த குழிக்குள் இறங்கிய அகோரி சாமியார், 9 நாள்கள் உள்ளே அமர்ந்து பூமி பூஜை செய்ய இருப்பதாகவும், குழியை சிமெண்ட் கற்களால் மூடிவிடும்படி கூறியுள்ளார். இதனைக் கேட்ட அங்கிருந்த சிலர், சாமியார் ஜீவ சமாதி அடைய இருப்பதாக ராஜதானி காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

அகோரி சாமியார்

Also Read: தேனி: `ரூ.60 செல்போன் கவரை 20 ரூபாய்க்குக் கொடுங்க!’- பேரத்தால் கடைக்காரருக்கு நேர்ந்த சோகம்

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், குழிக்குள் அமர்ந்திருந்த அகோரி சாமியாரிடம் பேசினர். ``25 வருடமாக நான் உணவு சாப்பிட்டது இல்லை. தண்ணீர் கூட குடிக்க மாட்டேன். புகைப்பது மட்டுமே எனக்கு சாப்பாடு” என்றெல்லாம் அவர் பேசவே, அச்சமடைந்த போலீஸார், ஒருவழியாக அகோரி சாமியாரை குழியில் இருந்து வெளியே வரவைத்து சமாதானம் பேசினர். மேலும், அரசு அனுமதி இல்லாமல் இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது என தெரிவித்து, அங்கே தோண்டப்பட்டிருந்த குழியை மூடிவிட்டுச் சென்றனர். இச்சம்பவம் மொட்டனூத்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.



source https://www.vikatan.com/news/tamilnadu/police-rushes-to-theni-village-after-agoris-jeeva-samathi-announcement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக