சமீபத்தில் அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பு வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைத்துள்ளார். 13 பேர் கொண்ட அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பில் 3 பேர் உள்ளனர். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெற்றுள்ள நிலையில், ஈரோட்டை பூர்விகமாகக் கொண்ட மருத்துவர் செலின் கவுண்டரும் அந்தக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியல் படித்த செலின், தொற்றுநோயியல் துறையில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்கிறார். பிறகு வாஷிங்டன் யுனிவர்சிட்டியில் எம்.டி படிப்பு, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டியில் தொற்றுநோயியல் முனைவர் பட்டம் போன்றவற்றையும் பெற்றிருக்கிறார். அமெரிக்க நாட்டின் காசநோய்த் தடுப்புப் பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய செலின், தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இப்படி அமெரிக்காவின் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு, இன்றைக்கு அமெரிக்க அதிபரின் சிறப்பு கொரோனா வழிகாட்டும் குழுவில் இடம்பெற்றுள்ள செலினின் பூர்விகம், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் என்பது தமிழகத்தைப் பெருமைகொள்ளச் செய்திருக்கிறது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பெருமாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருமலை - சின்னம்மாள் தம்பதி. இவர்களுக்கு செங்கோட்டையன், சுப்பையன், சின்னப்பையன், நடராஜன் என 4 மகன்கள். இதில் கடைசி மகனான நடராஜன் (எ) ராஜ் கவுண்டரின் மகள்தான் செலின்.
ராஜ் கவுண்டர் ஈரோட்டில் பள்ளிப்படிப்பு, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு, பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் மாஸ்டர் டிகிரி எனப் படிப்பில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அதன்பிறகு அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள போயிங் விமான நிறுவனத்தில் பணியாற்றி, அந்நிறுவன இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். அமெரிக்கப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டவருக்கு 3 பெண் பிள்ளைகள். அதில் மூத்த பெண்தான் செலின்.
செலினின் பூர்விகம் ஈரோடு என்றாலும், அவர் பிறந்தது - படித்தது - வளர்ந்தது என எல்லாமும் அமெரிக்காவில்தான்.
செலின் குறித்து அவரின் பெரியப்பா மகன் தங்கவேலிடம் பேசினோம். இவர் ஓய்வுபெற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர். ``செலின் அமெரிக்க அதிபரின் சிறப்பு வழிகாட்டும் குழுவில் இடம்பெற்றுள்ள தகவல் தெரிந்ததும், பெருமாபாளையம் கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். செலினின் அப்பா, ராஜ் கவுண்டர் ஒரு சாதாரண கிராமத்தில் படித்திருந்தாலும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென தீவிரமாகப் படித்து அமெரிக்காவில் செட்டில் ஆனவர்.
1966-ம் ஆண்டே ராஜ் கவுண்டர் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். அவரைப் போலவே அவரின் மகள் செலினும் கல்வி, மருத்துவம், சமூக சேவை போன்றவற்றில் தேர்ந்தவர். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென காசநோய் போன்ற தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் `தொற்றுநோயியல்’ துறையைக் கையிலெடுத்தார். 1998 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், ஹெச்.ஐ.வி தொடர்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``செலின் இதுவரை 4 முறை அவரது பூர்விகமான ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு வந்துள்ளார். அவருடைய அப்பா பெயரில் `ராஜ் ஃபவுண்டேஷன்’ என்ற ஒன்றை அமைத்து, மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேம்பாட்டுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். இதுவரை அந்தப் பள்ளிக்கு 5 லட்சத்துக்கு மேல் உதவி செய்துள்ளார். கடைசியாக 2018-ம் ஆண்டு பூர்விக கிராமத்துக்கு வந்தவர், மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். அப்போது ஸ்மார்ட் கிளாஸ் ரூம்க்காக ஒன்றரை லட்ச ரூபாயைக் கொடுத்து உதவினார்.
செலின் பூர்விக கிராமத்திற்கு வரும்போதெல்லாம் உறவினர்கள் வீடு, கோயில், விவசாய நிலங்கள் போன்ற இடங்களுக்கு விசிட் அடிப்பார். உறவினர்களிடம் பாசமாகப் பேசுவார். இட்லி, தோசை போன்ற இந்திய உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார். அமெரிக்காவுக்குச் சென்றாலும், பூர்விக கிராமத்தின் மீதும் இந்தியாவின் மீதும் அவருக்குப் பெரும் பாசம் இருக்கிறது” என்றார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் சிறப்புக் குழுவில் செலின் இடம்பெற்றதையடுத்து பலரும் செலினுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். கூடவே, செலின் ராஜ் கவுண்டர் என தன் சாதிப்பெயரை ஏன் இன்னும் வைத்திருக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துவருகின்றன. இதற்கு தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள செலின், ``ஏன் நான் என் பெயரின் பின்பு (Last name) என் சாதிப் பெயரை குறிப்பிடுகிறேன் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். என் அப்பா அமெரிக்காவுக்கு 1960-களில் குடிபெயர்ந்தார். `நடராஜன்' என்பதை உச்சரிப்பது அமெரிக்கர்களுக்கு சிரமமாக இருந்தது. `கவுண்டர்' என்பது அவர்கள் சொல்ல எளிமையாக இருந்தது. எனவே 1970-களில், அதாவது நான் பிறக்கும் முன்பே அவரது பெயரை கவுண்டர் என மாற்றிக்கொண்டார். கொஞ்சம் வலிமிகுந்ததாகவே இருந்தாலும், அது என் வரலாற்றுடனும் அடையாளத்துடனும் தொடர்புடையதும் கூட. என் பெயர் என்பது என்னுடையது. அதை நான் திருமணத்தின் போதும் மாற்றவில்லை. இப்போதும் மாற்றமாட்டேன்" என விளக்கம் அளித்திருக்கிறார்.
source https://www.vikatan.com/health/international/story-of-dr-celine-gounder-who-is-part-of-joe-bidens-covid-19-taskforce
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக