Ad

செவ்வாய், 10 நவம்பர், 2020

பீகார்: `பெரிய கட்சிகள் எங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தினர்!’ - அசாதுதீன் ஒவைசி

``பீகார் மக்கள் எங்களுக்கு வாக்களித்து அவர்களின் ஆசீர்வாதங்களை எங்களுக்கு வழங்கியுள்ளனர்" என்றார் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லீமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி.

கடந்த 2015-ம் ஆண்டு பீகாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முதலாக போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசி (Asaduddin owaisi) தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லீமின் கட்சி (AIMIM) போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்து டெபாசிட் இழந்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.

அண்மையில், 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று அதிகாலை வரை நீடித்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் ஆட்சி அமைக்க, பெரும்பான்மையாக 122 இடங்கள் தேவை என்ற நிலையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களையும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியான மெகா கூட்டணி 110 இடங்களையும் வென்றது. லோக் ஜனசக்தி கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

ஓவைசி யின் ஏ.ஐ.எம்.ஐ.எம், பகுஜன்சமாஜ், முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் சமதா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மொத்தம் 24 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இதில், ஏ.ஐ.எம்.ஐ.எம் மட்டும் சீமாஞ்சல் பிராந்தியத்தில் 14 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

தேர்தல் வெற்றி குறித்து ஓவைசி பேசியதாவது, "அரசியலில் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். மஜ்லிஸ் கட்சியின் பீகார் தலைவர் ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். ஆனால், எந்த ஒரு கட்சியும் எங்களை மதிக்கவில்லை. பெரிய கட்சிகள் அனைத்தும் எங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தினர். ஒவ்வொரு முஸ்லீம் தலைவர்களையும் சந்தித்தோம். ஆனால், எதுவும் கைகொடுக்கவில்லை, அதற்கான காரணங்கள் விவரிக்க முடியாதவை" என்றார்.

அசாதுதீன் ஓவைசி

மேலும், எங்கள் அரசியல் கட்சிக்கு இது ஒரு நல்ல நாள். பீகார் மக்கள் எங்களுக்கு வாக்களித்து அவர்களின் ஆசீர்வாதங்களை எங்களுக்கு வழங்கியுள்ளனர். நாங்கள் மக்களுக்காக உழைப்போம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்துவோம். தொற்றுநோயையும் மீறி வெளியே வந்து எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்றார் அசாதுதீன் ஒவைசி.

மூன்றாம் கட்ட வாக்களிப்புக்கு முன்னதாக, ஒவைசி'யின் மஜ்லீஸ் கட்சி., பாஜகவின் "பி அணி" என்று குற்றம்சாட்டியது காங்கிரஸ்.

இதையடுத்து, என்.டி.டி.வி. க்கு பேட்டியளித்த ஓவைசி, "காங்கிரஸ் தங்கள் விரக்தியை மறைக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்டதால் அவர்கள் ஒவைசியைக் குறை கூறுகிறார்கள். நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பீகார் பயணத்தைத் தொடங்கினோம். சீமஞ்சலின் வளர்ச்சிக்காக நாங்கள் பணியாற்றியுள்ளோம்" என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/politics/asaduddin-owaisi-talks-after-bihar-election-results

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக