Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

அழுகை எனும் அருவியில்... ஆனா கெத்தை விடாதீங்க கோலியன்ஸ்! #RCBvSRH

இதுவரை ப்ளே ஆஃப்புக்குள் நுழையும் வெறியில் ஸாம்பிக்களாக சுற்றிக்கொண்டிருந்த பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய நான்கு அணிகளும், மீதமிருந்த நான்கு அணிகளில் பெங்களூரையும் டெல்லியையும் கடித்து வைக்க, அவையும் ஸாம்பிக்களாக மாறிவிட்டன. இனி, அரபு அமீரகத்தில் குழாயைத் திறந்தால் தண்ணீர் வராது, ரத்தம்தான் வரும் எனும் அளவிற்கு வெறிகொண்டு மல்லுக்கட்டி வருகிறார்கள். அடிச்சுகிடாதீகப்பா... அடிச்சுகிடாதீக..!

நேற்று ஷார்ஜாவில் நடந்த 2020 ஐபிஎல்-ன் 52வது போட்டியில், சன்ரைசர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ர்ஸ் அணிகள் போட்டி போட்டன. ஆர்சிபி அணியில் செவனேனு கிடந்த ஷிவம் துபேவுக்கு பதிலாக அணியில் மீண்டும் இணைந்தார் நவ்தீப் சைனி. ஹிப்பி ஸ்டெய்னுக்கு பதிலாக இசுரு உடானா உள்ளே வந்தார். ஹைதராபாத் அணியில், விஜய் ஷங்கர் காயம் காரணமாக ஓய்வில் இருக்க, அபிஷேக் அணிக்குள் வந்தார். டாஸ் வென்ற டேவிட் வார்னர், பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார். `அவசரப்பட்டுட்டியே வார்னரு' என ஹைதராபாத் ரசிகர்களே தலையில் கை வைத்தார்கள்.

#RCBvSRH

ஃபிலிப்பும் படிக்கல்லும் ஆர்சிபி இன்னிங்ஸை ஒப்பன் செய்ய, முதல் ஓவரை வீசவந்தார் சந்தீப் ஷர்மா. அதில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஹோல்டர் வீசிய 2வது ஓவரில், ஷோல்டரை நிமித்தி ஒரு பவுண்டரியைத் தட்டினார் படிக்கல். மீண்டும் வந்தார் ஐபிஎல்-ல் நூறு விக்கெட்களைக் கடந்த அபூர்வ சந்தீப். 3-வது பந்து, ஃபிலிப்பின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு பறந்தது. 5-வது பந்து, ஸ்டெம்ப்பில் பட்டு பைஸ் தெரித்தது. படிக்கல்லின் விக்கெட்டைக் கழட்டினார் சந்தீப். கிங் கோலி உள்ளே வந்தார். ஹோல்டர் வீசிய 4-வது ஓவரில், ஃபிலிப் இன்னொரு பவுண்டரியை மிட் ஆஃப் திசையில் விரட்டினார். மீண்டும் வந்தார் சந்தீப். ஐபிஎல் வரலாற்றில், 7-வது முறையாக கோலியின் விக்கெட்டைத் தூக்கினார். ரெக்கார்டு ப்ரோ, ரெக்கார்டு! 7 பந்துகளில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்து, வில்லியம்ஸின் கைகளில் கேட்சைக் கொடுத்து, பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

இன்னிங்ஸின் முக்கியமான 6-வது ஓவரை வீச வந்தார் யார்க்கர் நட்டு. அற்புதமாக பந்து வீசி, ஒரே ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பவர்ப்ளேயின் முடிவில், 30/2 என அழுகை எனும் அருவியில் முங்கு நீச்சல் அடித்துக்கொண்டிருந்தது ஆர்சிபி. 7-வது ஓவரை வீச நவ்தீப் வந்தார். ஷார்ட் ஃபைன் லெக் திசையில் ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார் ஃபிலிப். ஏற்கெனவே, ரணகளமாய் போய்க்கொண்டிருந்த ராயல் சேலஞ்சர்ஸின் இன்னிங்ஸை இன்னும் ரணமாக்க ரஷீத்கானை இறக்கினார் வார்னர். 8-வது ஓவரை வீசிய ரஷீத், 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். நதீம் வீசிய 9-வது ஓவரில், லாங் ஆன் திசையில் ஃபிலிப் இன்னொரு பவுண்டரியை விளாசினார். ரஷீத் வீசிய 10-வது ஓவரில், டிவில்லியர்ஸ் ஒரு பவுண்டரியைப் போட்டார். 10 ஓவர் முடிவில், 61/2 என பலவீனமான நிலையில் இருந்தது ஆர்சிபி.

#RCBvSRH

`நாம திருப்பி அடிக்கலைனா, நம்மள அடிச்சு ஒடவிட்டுனே இருப்பானுங்க' என திடீரென வெறியான டி வில்லியர்ஸ், திடுமென நதீம் பந்தை சிக்ஸருக்கு தூக்கினார். `முதல்முறை வாழ பிடிக்குதே, முதல்முறை வெளிச்சம் பிறக்குதே' என ஆர்சிபி ரசிகர்கள் பூரிப்பாக, அடுத்த 4-வது பந்தில் பூரிக்கட்டையை வைத்துப் போட்டார் நதீம். டி வில்லியர்ஸ் காலி! டீப் பாயின்ட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.`சரி, இருக்கவே இருக்கார் நம்ம ஃபிலிப்' என ஆறுதல் அடைய, ஃபிலிப்பும் அடுத்த ஓவரில் புளிப்பு காட்டினார். ரஷீத் கானின் சுழலில் அவரும் அவுட். அடுத்து வாஷிங்டன் சுந்தரும் குர்கீரத்தும் பார்ட்னர்ஷிப் போட்டார்கள். 15-வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் வாஷி. அந்த ஓவரின் முடிவில், 93/4 என கிணற்றுக்கு அடியில் கிடந்தது ஆர்சிபி! மீண்டும் வந்தார் ரஷீ, எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியை விரட்டினார் வாஷி.

17-வது ஓவரை வீசிய சந்தீப், 4-0-20-2 என ஸ்பெல்லை செழிப்பாக முடித்துக்கொண்டார். 18-வது ஓவரில், ஐபிஎல்-க்குள் ஒரு டி.என்.பி.எல் அரங்கேறியது. நடராஜன் வீசிய பந்தை, அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் வாஷிங்டன் சுந்தர். அந்த ஓவரில், குர்கீரத் யாருக்கும் தெரியாமல் ஒரு பவுண்டரியையும் தட்டியிருந்தார். 19வது ஓவரை வீச வந்த ஹோல்டர், மோரிஸின் விக்கெடைக் கழட்டினார். அதே ஓவரில், உடானாவும் வந்த உடனே கிளம்பினார். நடராஜன் வீசிய கடைசி ஓவரிலும், ஆர்.சி.பிக்கு 4 ரன்கள் மட்டுமே கிடைக்க, 120 பந்துகள் ஆடி 120/7 என இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. `ஆர்.சி.பிக்கு கப்பு. ஆசைப்பட்டதே தப்பு' என நொந்துப்போனார்கள் ரசிகர்கள். இந்தப் பக்கம், 'அந்த 120 ரன்னையே அடிக்கமுடியாமல் அவுட்டாகும் குரூப்தான் இது' என ஹைதராபாத் ரசிகர்களும் பீதியில் இருந்தார்கள்.

14.3 ஓவர் வரையிலும் மேட்சை இழுத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை விடவும், 13.5 ஓவர் வரையிலும் இழுத்தால் டெல்லி கேப்பிட்டல்ஸை விடவும் நெட் ரன் ரேட்டில் முன்னணியில் இருக்கலாம் என கால்குலேட்டரில் கணக்குப் போட்டார்கள் ஆர்.சி.பி ரசிகர்கள். அப்படியே ஒரு நப்பாசையில், இந்த மேட்ச் ஜெயிக்க வாய்ப்பிருக்கா என கால்குலேட்டரில் கூட்டி, கழித்துப் பார்த்ததில் கால்குலேட்டர் புகைந்துப்போனது.
#RCBvSRH

வார்னர் மற்றும் சாஹா, ஐதராபாத்தின் இன்னிங்ஸைத் துவங்க முதல் ஓவரை வீசவந்தார் மோரிஸ். வெறும் 4 ரன்கள் மட்டுமே. வாஷிங்டன் வீசிய 2வது ஓவரின் முதல் பந்தையே, காலில் சுடுதண்ணியை ஊற்றியதுபோல் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் வார்னர். அடுத்த பந்தில், சுடுதண்ணியை வாஷிங்டன்னே ஊற்றிவிட்டார். வார்னர் அவுட்! ஆர்.சி.பி ரசிகர்கள் மெல்லிதாக புன்னகைத்தார்கள். சைனி வந்தார். ஒரு சிக்ஸரையும் ஒரு பவுண்டரியையும் தூக்குவாளியில் போட்டு கொடுத்து அணுப்பினார் மனீஷ்.

வாஷி வீசிய 4வது ஓவரில், ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரியைப் போட்டார் சாஹா. மோரிஸ் வீசிய அடுத்த ஓவரில், மிட் விக்கெட் திசையில் ஒரு பவுண்டரியும் இன்சைட் எட்ஜில் ஒரு பவுண்டரியும் கிட்டியது மனீஷுக்கு. சிராஜ் வந்தார். மிட் ஆன் திசையில் ஒரு பவுண்டரியும், லாங் லெக் திசையில் ஒரு சிக்ஸரும் விளாசினார் சாஹா. கூரையைத் தாண்டி பறந்துப்போன சிக்ஸரை, ஆர்.சி.பி அணி மொத்தமும் `ஆ'வென பார்த்துக்கொண்டிருந்தது. 6 ஓவர் முடிவில், 58/1 என அரட்டிவிட்டது ஐதராபாத். 7வது ஓவரை வீச, சாஹல் வந்தார். 2 ரன் மட்டுமே கொடுத்து மனீஷின் விக்கெட்டையும் கழட்டினார். உடானா வீசிய 8வது ஓவரிலும், 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. சாஹல் வீசிய 9வது ஓவரில், 3 ரன்கள். கடைசியாக, உடானா வீசிய 10வது ஓவரில் ஒரு பவுண்டரியை அடித்தார் சாஹா.

#RCBvSRH

சஹால் வீசிய 11வது ஓவரின் முதல் பந்தை, மிட் விக்கெட் திசையிலுள்ள பவுண்டரிக்கு அணுப்பினார் சாஹா. கடைசி பந்தில், சாஹாவை பெவிலியனுக்கே அனுப்பினார் சஹால். 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் விருத்தி, விருத்தி, விருத்திமான். உடானா வீசிய 13வது ஓவரில், வில்லியம்சனும் அவுட். `ஆகா, இவிய்ங்க வேலையைக் காட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்களே' என பதற்றமானார்கள் ஐதராபாத் ரசிகர்கள். 14வது ஓவரை வீச சைனி வந்தார். இந்தப் பக்கம் ஹோல்டர் வந்தார். ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸர், ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரியைப் பொளந்தார். `மாப்ள, நான் ஒருவாட்டி' என அபிஷேக் ஷர்மாவும் அவர் பங்குக்கு ஒரு சிக்ஸரை அனுப்பிவைத்தார்.

Also Read: கோலியின் பெங்களூரு இந்த முறையும் ப்ளே ஆஃப் போகாதா... 3 இடங்களுக்கு 6 அணிகள் மோதினால்?! #IPL2020

கடுப்பான சைனி, அடுத்த பந்திலேயே அபிஷேக்கின் விக்கெட்டைக் கழட்டினார். 36 பந்துகளில் 6 ரன்கள் தேவை எனும் நிலை. 13.5-தான் மிஸ்ஸாகிப்போச்சு, 14.3-ல முடிச்சுவிடுவோம் என சாஹலை மீண்டும் அணுப்ப, முதல் பந்தையே ஹோல்டர் சிக்ஸருக்கு அனுப்பினார். 121/5 என 14.1 வது ஓவரில் மேட்சை முடித்தது ஐதராபாத். 'ஈ சாலா கப்பு' என ஆரவாரமாக இருந்தவர்களின் முகங்களில் ஈ ஆடின.

#RCBvSRH

"140 ரன் அடிச்சுருந்தால் கூட நிப்பாட்டிருக்கலாம். நாங்க ரொம்ப பயந்துபோய் பேட்டிங் ஆடினோம். அவங்க நல்லா தைரியமா ஆடினாங்க. நல்ல ஏரியாவுல பந்துகள் போட்டாங்க. அடுத்த மேட்ச்ல பார்த்துகலாம். நிஜத்துல நான் டெல்லிக்காரனா இருக்கலாம். ஐபிஎல்-னு வந்துட்டா நானும் பெங்களூர்காரன்தான்டா" என பன்ச் அடித்தார் கோலி. இது பஞ்சர் ஆகிக் கிடந்த பெங்களூர் ரசிகர்களுக்கு டிஞ்சர் போட்டது போலிருந்தது. "அடுத்த மேட்சும் ஜெயிப்போம். ஐபிஎல் கப் அடிப்போம். சிறப்பான பேட்டிங், மிக சிறப்பான பெளலிங், இயற்கை. வேறென்ன வேணும்?" என்றார் வார்னர்.

சந்தீப் ஷர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-royal-challengers-bangalore-vs-sunrisers-hyderabad-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக