Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

`உ.பி-யில் இரண்டு இளவரசர்களுக்கு நடந்ததுதான் பீகாரிலும் நடக்கும்!’ - மோடி பேச்சு

பீகாரில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. கொரோனா காலத்தின் முதல் தேர்தலைச் சந்திக்கும் பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.

முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் நிலையில், முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி கூட்டணியமைத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லாலுபிராசத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பீகாரில் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் முதல்வர் நிதிஷ் குமார், அவருக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டு பேசிவருகிறார்.

அந்த வகையில் பீகாரின் சப்ரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட முயன்ற எதிர்க்கட்சிகளின் முகமூடி கழன்று விழுந்துள்ளதாகக் கடுமையாக விமர்சித்தார். மேலும், உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாடிக் கட்சிகளின் தோல்வியைச் சுட்டிக்காட்டிய அவர், அதேபோல் பீகாரிலும் மக்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள் என்றார். காட்டாட்சியின் இளவரசர் என தேஜஸ்வி யாதவை பிரதமர் மோடி ஏற்கெனவே விமர்சித்திருந்தார்.

Also Read: புல்வாமா தாக்குதல்: `நாடே துக்கத்தில் இருந்தபோது..!’ - எதிர்க்கட்சிகளைச் சாடிய பிரதமர் மோடி

அவர் பேசுகையில், ``மூன்று, நான்காண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் இரண்டு இளவரசர்கள் (ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்) பேருந்திலிருந்து கொண்டு மக்களுடன் கைகுலுக்கினர். உத்தரப்பிரதேச மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பீகாரின் காட்டாட்சி இளவரசருடன் மற்றொரு இளவரசர் இப்போது கைகோத்திருக்கிறார். உத்தரப்பிரதேசத்தைப் போலவே இந்த இளவரசர்களும் மண்ணைக் கவ்வுவார்கள்.

மோடி

பீகாரில் இன்று இரண்டு என்ஜின்கள் கொண்ட அரசு ஆட்சியிலிருக்கிறது. மக்கள் நலத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம், இரண்டு இளவரசர்கள் தங்களது மணிமகுடத்தைக் காப்பாற்றிக்கொள்ள களமாடுகிறார்கள்’’ என்று பிரதமர் மோடி பேசினார். சப்ரா பகுதி லாலுபிராசத் சொந்த கிராமத்தை உள்ளடக்கியதாகும்.



source https://www.vikatan.com/news/politics/pm-modi-slams-rahul-tejaswi-in-bihar-election-rally

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக