Ad

திங்கள், 2 நவம்பர், 2020

IPL 2020: வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது பேட்ஸ்மேன்களோ, பெளலர்களோ அல்ல... எல்லாமே Dewதான்! #DCvRCB

Dew... அபுதாபி, துபாய், ஷார்ஜா என ஐக்கிய அரபு மைதானங்களில் இரவில் பெய்யும் பனி 2020 ஐபிஎல்-ன் சுவாரஸ்யத்தை முழுவதுமாகக் குறைத்துவிட்டது. டாஸ் வெல்லும் அணி முதலில் பெளலிங்கைத் தேர்வுசெய்துவிட்டு, எதிர் அணி 180 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அதைப் பனியின் துணையோடு சேஸ் செய்து வெற்றிபெறும் வழக்கம் தொடர்வது, 'இதுக்கு எதுக்கு பந்தை உருட்டிக்கிட்டு' என்கிற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.

இரண்டாவது பெளலிங்போடும் அணியினரின் நிலைமை பரிதாபம். பனியால் அவர்களால் எந்த வேரியஷன்களையுமே காட்டமுடியவில்லை. பேட்ஸ்மேன்கள் அபத்தமான தவறுகள் செய்தால் ஓழிய விக்கெட் விழ வாய்ப்பேயில்லை எனும்போது பந்துவீசி என்ன ஆகப்போகிறது என்கிற விரக்தியான மனநிலையிலேயே அவர்கள் பந்துவீச வேண்டியிருக்கிறது.

#DCvRCB

டெல்லிக்கும், பெங்களூருவுக்கும் இடையே நடந்த போட்டியில் டெல்லி வெற்றிபெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் இரண்டு அணிகளுமே ப்ளே ஆஃபுக்குத் தகுதிபெற்றுவிட்டன. இன்று இரவு நடைபெற இருக்கும் ஹைதராபாத் வெர்சஸ் மும்பை போட்டியில், ஹைதராபாத் வெற்றிபெற்றால் அந்த அணி ப்ளேஆஃபுக்குத் தகுதிபெற்றுவிடும். ஒருவேளை ஹைதராபாத் தோல்வியடைந்தால், கொல்கத்தா ப்ளே ஆஃபுக்குத் தகுதிபெறும். அதனால் இனி கால்குலேட்டர்களுக்கு அவசியம் இல்லை.

அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பெளலிங்கைத் தேர்தெடுத்தார். டாஸ் வென்றவுடனேயே அவர் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியும், கோலியின் முகத்தில் எழுந்த அதிர்ச்சியுமே போட்டிக்கான ரிசல்ட்டை சொல்லிவிட்டன. டெல்லியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கடந்த போட்டியில் விளையாடிய ஹெட்மெயர், ஷர்ஷால் பட்டேல், பிரவின் துபே ஆகியோருக்கு பதிலாக ரஹானே, அக்ஸர் பட்டேல், டேனியல் சாம்ஸ் ஆகியோர் அணியில் இடம்பிடித்தார்கள். பெங்களூருவில் குர்கீரத்துக்கு பதிலாக ஷிவம் துபேவும், சைனிக்குப் பதிலாக ஸ்பின்னர் ஷபாஸ் நதீமும் அணியில் இடம்பெற்றனர்.

#DCvRCB

இந்த 2020 ஐபிஎல் சீசனின் ஓப்பனிங் சூப்பர் ஸ்டாரான தேவ்தத் படிக்கல் நேற்றும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இடது கை பேட்ஸ்மேனான தேவ்தத்தின் பேட்டிங் ஸ்டைலும், அவர் ஷாட்களைத் தேர்ந்தெடுக்கும் விதமும் இந்தியாவுக்கான சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இவர் இருப்பார் என்பதை உறுதிசெய்கிறது. நல்ல ஸ்டார்ட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ் ஃபிலிப் 12 ரன்களில் ரபாடாவின் பெளலிங்கில் அவுட் ஆனார். கேப்டன் கோலி வந்தார். பவர்ப்ளேவின் முடிவில் 40 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது பெங்களூரு.

சிங்கிளாகவே தட்டி விளையாடிக்கொண்டிருந்த கோலி 10-வது ஓவரில் இருந்து அடித்து ஆட ஆசைப்பட்டார். அதற்கு அவர் முதலில் தேர்ந்தெடுத்த பெளலர் அக்ஸர் பட்டேல். ஆனால், இந்த ஓவரிலேயே கோலியின் கேட்ச்சை டிராப் செய்தார் நார்க்கியா. அடுத்து அக்ஸரின் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த கோலி, அஷ்வினின் கடைசி ஓவரில் சிக்ஸர்கள் அடித்தே தீர்வது என முன்னரே முடிவெடுத்து ஆட, பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கோலியின் ஸ்கோர் 24 பந்துகளில் 29 ரன்கள். ஏபிடி வந்தார். படிக்கல் இந்த சீசனின் ஐந்தாவது அரை சதம் அடித்தார். 40 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருந்த படிக்கலின் விக்கெட்டை நார்க்கியா தூக்கினார். இந்த ஓவரிலேயே இன்னொரு விக்கெட்... கிறிஸ் மாரிஸ் அவுட்.

Also Read: கால்குலேட்டரோட ரெடியாகுங்க மக்களே... கொல்கத்தா ஏன் இப்படி ஆடினாங்க?! #KKRvRR

துபேவும், டிவில்லியர்ஸும் சில சிக்ஸர்கள் அடிக்க 150 ரன்களைத் தட்டுத்தடுமாறிக்கடந்து 153 ரன்களை டார்கெட்டாக கொடுத்தது பெங்களூரு. நார்க்கியா 33 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை எடுத்தார். ரபாடா 2 விக்கெட்கள் எடுத்தார்.

டியூ காரணமாக பெரிதாக பெளலிங் எடுபடாது என்பதோடு, டார்கெட்டும் மிகவும் குறைவு என்பதால் தைரியமாக சேஸிங்கைத் தொடங்கியது டெல்லி. பிட்ச்சின் தன்மையை எல்லாம் புரிந்துகொள்ளாமல் 'எனக்கு இப்படித்தான் ஆடத்தெரியும் 'என ஷாகித் அஃப்ரிடியைப் போல பேட்டை சுழற்றும் பிரித்வி ஷா, இரண்டு பவுண்டரிகள் அடித்துவிட்டு 9 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ரஹானேவும், தவானும் தங்களின் அனுபவத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அபுதாபி பிட்சில் சிறப்பாக விளையாடும் தவான் 41 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அவுட் ஆக, ரஹானே 46 பந்துகளில் 60 ரன்கள் அடித்து டெல்லியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டுப்போனார். இவர்களின் 88 ரன் பார்ட்னர்ஷிப்பை உடைக்க கோலி பல முயற்சிகள் எடுத்தும், டியூ காரணமாக பெளலர்களால் எந்த அதிசயத்தையும் நிகழ்த்த முடியவில்லை. சஹாலைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. 19வது ஓவரின் இறுதிப்பந்தில் டார்கெட்டை முடித்தது டெல்லி.

#DCvRCB

19-வது ஓவர் வரை டெல்லியின் சேஸிங் சென்றதால், தோல்வியடைந்திருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூருவும் ப்ளே ஆஃபுக்குத் தகுதிபெற்றது. 2016 சீசனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து ப்ளே ஆஃபுக்குள் இடம்பிடித்திருக்கிறது பெங்களூரு.

இந்த வெற்றியின் மூலம் முதல் ப்ளே ஆஃபில் மும்பையுடன் மோத இருக்கிறது டெல்லி. எலிமினேட்டரில் பெங்களூருவுடன் ஆடப்போவது ஹைதராபாத்தா அல்லது கொல்கத்தாவா என்பது இன்றைய போட்டியில் டாஸ் போடும்போது தெரிந்துவிடும். அதனால் டாஸ் போடும்வரை பொறுமை காப்போம்!


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-delhi-beats-bangalore-both-teams-qualified-for-playoffs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக