சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில், நடராஜர் சிலையின்மீது மட்டும் மழை விழுவது போல எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. இந்த வீடியோ பல்வேறு வலைதளப் பக்கங்களில் பதியப்பட்டு, பல லட்சம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. வாட்ஸஅப் ஸ்டேட்டஸ்களிலும் இந்த வீடியோவை காண முடிகிறது.
சிதம்பரம் கோயிலில் நடராஜர் சிலைமீது மட்டும்தான் மழை பெய்ததா?... உண்மை என்ன?

Also Read: அமைச்சர் வேலுமணியின் ரூ.200 கோடி பங்களா... வைரலாகும் வீடியோ! - உண்மை என்ன? #VikatanFactCheck
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவரால் பகிரப்பட்ட இந்த வீடியோவை, நவம்பர் 17-ம் தேதியன்று `சிதம்பரம் மீம்ஸ்' என்கிற ஃபேஸ்புக் பக்கம்தான் முதலில் பகிர்ந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2 நாள்களாகப் பலரும் இதனைப் பகிரவே மிகப் பெரிய வைரலானது இந்த வீடியோ. சில தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில்கூட இது குறித்த செய்தி வெளியிடப்பட்டதால், மக்கள் பலரும் இதனைப் பகிரத் தொடங்கினர்.
வீடியோவில் என்ன இருக்கிறது?
34 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில், கோபுரம் அமைந்திருக்கும் தளத்திற்கு முன் பகுதியில் அமைந்துள்ள சிவன் சிலைமீது மழை பெய்வதாகத் தெரிகிறது. அந்த சிவன் சிலைக்கு ஃபோக்கஸ் லைட் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவின் 14-வது விநாடியில் கேமரா இடது திசை நோக்கி நகர்த்தப்படுகிறது. அங்கு ஃபோக்கஸ் லைட்டுக்கு கீழ் அமைந்துள்ள மேலும் இரண்டு சிலைகமீது மழை பொழிவது தெரியவில்லை. பின்னர் மீண்டும் சிவன் சிலைமீது பொழியும் மழை காட்டப்படுவதோடு இந்த வீடியோ முடிவடைகிறது.
Also Read: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் - மழையிலும் குவிந்த பக்தர்கள்
உண்மை என்ன?
இந்த வீடியோவில், கேமரா கோணம், ஃபோக்கஸ் லைட்டின் கோணம், மழை பொழியும் திசை ஆகியவற்றின் காரணமாகத்தான் சிவன் சிலைமீது மட்டும் மழை பொழிவதாகத் தெரிகிறது. இடது திசையில் இருக்கும் சிலையின் மீது மழை பொழிவது தெரியாததற்குக் காரணம், அந்த சிலையின்மீது மழை விழும் திசை, விளக்கு மற்றும் கேமரா கோணம் ஆகியவை வேறு மாதிரியாக இருப்பதுதான். வேறு இரண்டு சிலைகள் காட்டப்படும் இடத்திலும் உற்று கவனித்தால் சிறிய சாரல் துளிகள் தெரியத்தான் செய்கின்றன. எனவே, அந்தப் பகுதி முழுவதுமே மழை பொழிந்திருக்கிறது என்று தெரிகிறது. ஜூம் செய்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஃபோக்கஸ் லைட்டின் ஒளி காரணமாகச் சிவன் சிலைமீது பொழியும் மழைத் துளிகள் மட்டும் தனியாகத் தெரிகின்றன.
மேலும், இந்த வீடியோ எடுக்கப்பட்ட தினத்தன்று, மாலை நேரத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்திருக்கும் பகுதி உள்படப் பல பகுதிகளிலும் மழை பெய்தது என்பதை உள்ளூர் வாசிகள் அனைவரும் உறுதிப்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த வீடியோவை முதலில் பகிர்ந்து `சிதம்பரம் மீம்ஸ்' ஃபேஸ்புக் பக்கத்தில், `ஃபோக்கஸ் லைட்டின் கோணம் காரணமாகத்தான் அப்படித் தெரிந்தது' என்று அடுத்த நாளே பதிவிட்டிருந்தனர்.
இது குறித்து அறிவியலாளர்கள் சிலர், ``இரவு நேரங்களில் மழை பொழியும் போது உங்கள் செல்போனை எடுத்து தெருவிளக்குகளுக்கு நேராக வைத்து, ஜூம் செய்து வீடியோ எடுத்துப் பார்த்தால் நன்றாக மழை பொழிவது தெரியும். அதுவே விளக்கின் வெளிச்சம் குறையக் குறைய மழை பொழிவது அவ்வளவாக செல்போன் கேமராக்களில் பதிவாகாது. இதில், மழை பொழியும் கோணமும், கேமரா திசையும் முக்கியம். இது அடிப்படை அறிவியல். இதனைப் பயன்படுத்தி, இப்போதல்ல... பல காலங்களாகவே இதுபோன்ற வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன'' என்கிறார்கள்.
source https://www.vikatan.com/spiritual/miscellaneous/is-the-viral-video-claiming-that-rain-drops-falls-only-on-shivan-statue-on-chidambaram-temple-true
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக