Ad

திங்கள், 2 நவம்பர், 2020

கறிக்கோழி பண்ணையாளர்கள் போராட்டம்… சிக்கனுக்கு விரைவில் தட்டுப்பாடு?!

தனியார் கறிக்கோழி விற்பனை நிறுவனங்கள், விவசாயிகளை சந்தித்துப் பேசி, கறிக்கோழி வளர்ப்பு குறித்து ஒப்பந்தம் மேற்கொள்வர். அதன்படி, நிறுவனத்தினர் கோழிக்குஞ்சுகள், தீவனம் போன்றவற்றைக் கொடுப்பார்கள். கோழி வளர்க்கத் தேவையான இடம் மற்றும் வேலையாட்கள் உட்பட அனைத்து செலவுகளும் பண்ணையாளர்களின் பொறுப்பு.

கறிக்கோழி பண்ணை

40 முதல் 42 நாள்கள் கோழிக்குஞ்சுகளைத் தீவனம் கொடுத்துப் பாதுகாத்து வளர்த்து, தனியார் கறிக்கோழி விற்பனை நிறுவனங்களிடம் கொடுத்தால், கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ. 6 வரை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் பண்ணையாளர்களுக்குக் கொடுக்கும். அந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும், கிலோவுக்கு ரூ. 12 க்கு மேல் கொடுக்க வேண்டும் எனவும் கூறி தற்போது கறிக்கோழி பண்ணையாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட கறிக்கோழி பண்ணையாளர்கள் நலச்சங்க மாவட்டச் செயலாளர் ரபீக்கிடம் பேசிய போது, ``திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 800-க்கும் அதிகமான கறிக்கோழி பண்ணையாளர்கள் உள்ளனர். ஆள் கூலி, மின்சாரம், தண்ணீர், 24 மணி நேர கண்காணிப்பு, நோய் வராமல் பாதுகாப்பு என எங்களின் செலவு என்பது மிக அதிகம். ஆனால், நிறுவனமோ, ரூ.4 முதல் ரூ.6 வரை மட்டுமே கொடுக்கின்றனர். பல முறை சொல்லிப்பார்த்தும் விலையை உயர்த்தவில்லை. இது எங்களை மிகவும் நஷ்டப்பட வைத்துள்ளது. இதனால், பலரும் தொழிலை விட்டு தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிட்டனர்.

பிராய்லர் கோழி!

அதனால், விலையை உயர்த்த வலியுறுத்தி மாநிலம் முழுவதிலும் உள்ள கறிக்கோழி பண்ணையாளர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை அறிவித்திருக்கிறோம். அதன்படி, தற்போது பண்ணையில் வளர்ந்த நிலையில் உள்ள கோழிகளை நிறுவனத்திடம் கொடுக்கக் கூடாது என்றும், மேலும் கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்க்கக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் கறிக்கோழி விலை அதிகரிக்கும் நேரத்தில், அதிகரித்த தொகையில் 30% தொகையை விற்பனை ஊக்கத்தொகையாகப் பண்ணையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் கொடுக்கிறது. ஆனால், தமிழகத்தில் இப்படியான நடைமுறை இல்லை. எங்களது போராட்டத்தால் இன்னும் இரண்டு நாளில் தமிழகத்தில் கறிக்கோழிகள் தட்டுப்பாடு ஏற்படும். அதற்குள் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களுக்கு உரிய தீர்வை கொடுக்க வேண்டும்” என்றார்.

சேலத்தைச் சேர்ந்த கறிக்கோழி பண்ணையாளர் ஜெயக்குமாரிடம் பேசிய போது, ``பண்ணையாளர்கள் ஒரு கிலோ கறிக்கோழிக்கு ரூ.6 முதல் ரூ. 8 வரை நஷ்டத்தை சந்திக்கிறோம். ஆனால், எங்களிடம் இருந்து கறிக்கோழிகளை வாங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கிலோவுக்கு ரூ.50 வரை லாபம் பார்க்கின்றனர். அவர்களிடம் இருந்து கோழிகளை வாங்கி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் ரூ. 50 வரை லாபம் பார்க்கிறார்கள்.

ஜெயக்குமார்

இதில் இடைத்தரகர்களுக்கு ரூ. 15 வரை லாபம் கிடைக்கிறது. ஆனால், லட்சங்களில் செலவு செய்து கொட்டகை அமைத்து, 40 நாள்கள் உடல் உழைப்பைக் கொடுக்கும் நாங்கள் நஷ்டமடைகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்களிடம் சட்டத்துக்குப் புறம்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்று சொந்த நிலத்தில் எங்களை அடிமைகளாகவும் அகதிகளாகவும் வைத்திருக்கிறார்கள்” என்றார் காட்டமாக.



source https://www.vikatan.com/news/agriculture/tamilnadu-poultry-farmers-on-strike-over-demand-to-increase-chicken-procurement-price

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக