மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை வழங்க கூடாது என்று ஆவேசமாகக் குரல் கொடுத்திருக்கும் நேரத்தில், சேலம் பத்திரப் பதிவுத் துறை டி.ஐ.ஜி ஆனந்த் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியிருக்கிறார். சேலம் பத்திரப் பதிவுத்துறையின் டி.ஐ.ஜி யாக இருந்தவர் ஆனந்த். இவர் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். சேலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்கள் இவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது.
இவருக்குப் பத்திரப் பதிவு அதிகாரிகள் மாதம் தோறும் கட்டாயமாக கையூட்டு கொடுக்க வேண்டும் என்றும், ஆத்தூரைச் சேர்ந்த பெண் பத்திரப் பதிவு அதிகாரி ஒருவருக்குத் தொடர்ந்து இவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் கடந்த வருடம் ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்த விவகாரம் பரபரப்பான நிலையில், அப்போது அந்தப் பெண் பத்திரப் பதிவு அதிகாரி அதை மறுக்கவே விவகாரம் சைலன்டானது.
Also Read: `இனி லஞ்சம் வாங்க மாட்டேன்; ஒருமுறை மன்னிச்சு விட்டுடுங்க!’ - கதறிய அதிகாரி
இந்நிலையில் ஆனந்த், கடந்த 8-ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு இட மாறுதல் செய்யப்பட்டார். அதையடுத்து ஆனந்த் வசித்து வரும் சேலம் அழகாபுரம் வீட்டில் கடந்த 9-ம் தேதி அவருக்குப் பிரிவு உபசார விழா நடைபெறுவது. அதில், பத்திரப் பதிவு அலுவலர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் கலந்து கொண்டு கட்டாயம் அன்பளிப்பு வழங்க வேண்டுமென்று வற்புறுத்தியதாகச் சொல்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து பத்திரப் பதிவு அதிகாரிகள் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டு பணம், தங்கக் காசுகள், விலை உயர்ந்த அன்பளிப்புப் பொருட்கள் வழங்கினார்கள். இதுகுறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் எஸ்.பி சந்திரமவுலிக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அவருடைய தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆனந்த் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
பத்திரப் பதிவு அதிகாரிகள் வழங்கிய கவரில் 3.20 லட்சம் ரொக்கப் பணமும், 13 லட்சம் மதிப்புள்ள 34 பவுன் தங்க காசுகளும் கைப்பற்றினார்கள். பிறகு, ஆனந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெயரில் சென்னை, சேலத்தில் பல நூறு கோடி மதிப்புடைய அசையா சொத்துகளின் ஆவணங்களையும் போலீஸார் கைப்பற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், அவருடைய வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்.
இதுபற்றி பத்திரப் பதிவுத் துறையின் டி.ஐ.ஜி ஆனந்திடம் கேட்டதற்கு, ``நான் எந்தப் பதிலும் சொல்ல விரும்பவில்லை என்பதை மட்டும் எழுதிக் கொள்ளுங்கள்’’ என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/corruption/dvac-books-registration-department-dig-anand-over-accepting-bribe
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக