Ad

புதன், 4 நவம்பர், 2020

`இனி அனுமதியில்லாமல் சிபிஐ விசாரிக்க முடியாது!' - பொது ஒப்புதலை ரத்து செய்த கேரளா

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ``சிபிஐ தன் அதிகார வரம்பை மீறி, அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது" என்று சமீபத்தில் குற்றம் சாட்டி பேசியிருந்தார்.

இனி கேரளாவில் எந்தவொரு வழக்கின் விசாரணையையும் நடத்த மாநில அரசிடம் சிபிஐ முன் அனுமதி பெற வேண்டும். சிபிஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொது அனுமதியைத் திரும்பப் பெறுவதாக கேரள அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிபிஐ யின் அதிகார வரம்பு, டெல்லி சிறப்பு காவல் நிறுவனச் சட்டத்தின் (Delhi Special Police Eshtablishment - DSPE 1946) மூலம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் மத்திய ஆட்சிப் பகுதிகளின் காவல்துறைக்கு இருக்கும் அதே அதிகாரங்களையும், பொறுப்புகளையும் சிபிஐ-க்கும் வழங்குகிறது. டெல்லியைத் தவிர, நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் சிபிஐ, தனது அதிகாரத்தைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசின், பொது ஒப்புதல் (General Consent) பெற்றிருப்பது அவசியம். சிபிஐ-க்கு பொது ஒப்புதல் மறுக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில்,சிபிஐ வழக்கு விசாரணை செய்ய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் ஆகியவை சிபிஐ-க்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை ஏற்கெனவே திரும்பப் பெற்றிருக்கின்றன. இதையடுத்து சமீபத்தில், டி.ஆர்.பி. மோசடி வழக்கின் முக்கிய திருப்பமாக மகாராஷ்டிரா மாநிலமும் சிபிஐ. பொது ஒப்புதலை திரும்ப பெற்றது.

இந்நிலையில், சிபிஐ க்கு வழங்கப்பட்டிருந்த பொது ஒப்புதலை ரத்து செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தற்போது கேரளாவும் இணைந்துள்ளது. கேரளா மாநிலத்தில் விசாரணைகளை நடத்துவதற்காக மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை ரத்து செய்ய கேரளா அரசு முடிவு செய்துள்ளது.

Also Read: சுஷாந்த் வழக்கு: `உண்மையை நோக்கிய முதல் படி!’ - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

இந்த வார தொடக்கத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ``சிபிஐ தன் அதிகார வரம்பை மீறி, அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது" என்று மத்திய புலனாய்வு பிரிவை குற்றம் சாட்டி பேசினார். அப்போதே, சிபிஐ பொது ஒப்புதலை முதல்வர் ரத்து செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மாநில அமைச்சரவையில் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், கேரள அரசாங்கத்தின் முதன்மை திட்டமான நிலம் அல்லது வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் லைஃப் மிஷன் (Life Mission) திட்டத்தில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான காங்கிரஸ் எம்.எல்.ஏ அனில் அக்கரா அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து, லைஃப் மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி யு.வி.ஜோஸின் மனுவின் அடிப்படையில், கேரள உயர் நீதிமன்றம் இரண்டு மாத காலத்திற்கு விசாரணையை நிறுத்த உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், ஒப்பந்த நிறுவனம் உட்பட பிரச்னையின் பிற அம்சங்களை ஆராய்வதை நீதிமன்றம் தடுக்கவில்லை.

சிபிஐ

சிபிஐ பதிவு செய்த இந்த வழக்கு "மாநில அரசை இழிவுப்படுத்தும்" திட்டமிட்ட முயற்சியைக் குறிக்கிறது என்று நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புலனாய்வு அமைப்புகள் மாநில அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் தலையிடும் சூழ்நிலை எழுந்துள்ளதாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சமீபத்தில், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசாங்கமும் இதுபோன்ற சம்பவத்தில் பொது அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டதையடுத்து, சில நாட்களிலேயே கேரளா அரசும் முடிவெடுத்துள்ளது.

மேலும், கேரளா மாநிலம் தேர்தலை சந்திக்க இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் ஸ்வப்னா சுரேஷ் தங்க கடத்தல் விவகாரம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் கொடியேறி பாலகிருஷ்ணனின் இளைய மகன் பினீஷ் கொடியேறி போதை பொருள் கடத்தல் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளால் தற்போதைய கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு அடுத்த முறை ஆட்சி அமைப்பது சவாலாகி வரும் சூழலில்., இந்த வழக்குகளை விசாரித்து வரும் மத்திய புலனாய்வு பிரிவின் பொது ஒப்புதலை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு ரத்து செய்வதாக அமைச்சரவையில் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/politics/kerala-withdraws-general-consent-accorded-to-cbi-to-probe-cases

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக