Ad

புதன், 4 நவம்பர், 2020

கன்னியாகுமரி: `வாழ்நாள் முழுவதும் உழைத்த பணம்!’ - பெண்களிடம் நூதன மோசடி: சர்ச்சையில் தம்பதி

பணமோசடிகள் பலவிதம். அதில் ஒருவிதம்தான் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள கடையாலுமூடு பகுதியில் நடந்துள்ளது. வழக்கமாக அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டியும், இரட்டிப்பு பணம் தருவதாகவும்தான் மோசடி செய்வார்கள். ஆனால், கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் - கிறிஸ்டினாள் தம்பதியினர், யாராவது மகளின் திருமணத்திற்காக வங்கியில் பணம் போட்டது தெரிந்தால் அவர்களைச் சந்தித்து, `வங்கியை விட அதிக வட்டி தருவதாகவும், உங்களுக்கு எப்போது பணம் தேவையோ அப்போதே பணத்தை திருப்பி தந்துவிடுவோம்’ என எழுதியும் கொடுப்பார்கள்.

கடையாலுமூடு செக்கட்டிவிளை பகுதியைச் சார்ந்த மேரி ஜெயராணி என்பவர், தனது மகளின் திருமணத்திற்காக வங்கியில் பணம் போட்டிருந்தார். இந்தப் பணத்தை ஆகாஷ்- கிறிஸ்டீனாள் தம்பதியினர் வட்டிக்கு என சில ஆண்டுக்கு முன்பு வாங்கியிருக்கிறார்கள். இதுபோன்று ஒருவருக்குத் தெரியாமல் மற்றவரிடம் என நான்கு லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை சுமார் 25 பேரிடம் வாங்கியுள்ளார்கள். பின்னர், தங்கள் தேவைக்காக பணத்தை திருப்பிக் கேட்டால் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்கள். இந்த தம்பதி மொத்தமாக மோசடி செய்த பணம் ஒரு கோடியை தாண்டும் என்கிறார்கள்.

தீ குளிக்க முயன்ற பெண்ணை மீட்கும் போலீஸ்

பாதிக்கப்பட்ட பெண்கள் சில மாதங்களுக்கு முன்பு போலீஸில் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள், நேற்று முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று ஆகாஷ் - கிறிஸ்டினாள் தம்பதியின் வீட்டுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சில பெண்கள் பணம் கிடைக்காமல் இருந்தால், அங்கேயே தற்கொலை செய்துகொள்வோம் எனக்கூறி மண்ணெண்ணைய் கேனுடன் சென்றிருக்கிறார்கள். இதை அறிந்து போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணிக்குச் சென்றனர்.

போலீஸார் அங்கு சென்று ஆகாஷ் - கிறிஸ்டினாள் தம்பதியினரை அழைத்து பேசாமல் அமைதியாக நின்றிருக்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த மூதாட்டி ஒருவர், தனது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றிவிட்டு தீ வைக்க முயற்சித்தார். உடனே, போலீஸார் அந்த மூதாட்டியை தடுத்து நிறுத்தியதுடன், அவர் மீது தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றினார். மேலும், பணம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பெண்கள் அறிவித்தனர்.

பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள் போராட்டம்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், ``எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கிறிஸ்டினாள் ஏமாற்றிவிட்டார். அவரது வீட்டுக்குச் சென்று பணத்தை கேட்டால், `உங்களை கோர்ட்டில் சந்திக்கலாம்’ என சவால் விடுகிறார். கொஞ்சம் அதிகமான வட்டிக்கு ஆசைப்பட்டு , நாங்க வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்த பணத்தை இழந்து நிற்கிறோம்" என கண்ணீர் வடித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/kanyakumari-women-staged-protest-over-money-cheating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக