Ad

புதன், 4 நவம்பர், 2020

கொரோனா பரவல்; உயர் நீதிமன்ற உத்தரவு! - பா.ஜ.க வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு

தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் முடிக்க பா.ஜ.க தமிழகத் தலைமை திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில், பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்குத் தடைவிதிக்க தமிழக அரசு, டி.ஜி.பி-க்கு உத்தரவிட வேண்டும் என செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி விளக்கமளித்தார். தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்குமாறு பா.ஜ.க சார்பில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி மனு அளித்ததாகவும், அதற்கு டி.ஜி.பி தரப்பில் அக்டோபர் 17-ம் தேதி பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதில், இது தொடர்பாக அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டது.

கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், வேல் யாத்திரை போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என டி.ஜி.பி தரப்பில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பா.ஜ.க தரப்புக்கு இன்றைக்குள் முறைப்படி தெரிவிக்கப்படும். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுநிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூடக் கூடாது என தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு நவம்பர் 16-ம் தேதி வரை இருக்கும் நிலையில், அதற்குப் பின்னரே இது குறித்து முடிவெடுக்க முடியும் என்று தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எல்.முருகன்

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றுக்கு அனுமதியளிக்கக் கூடாது என மார்ச் 20-ம் தேதி உத்தரவு பிறப்பித்ததையும் தமிழக அரசு சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கில் எதிர் மனுதாரராக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் சேர்க்கப்பட்டிருக்கிறார். பா.ஜ.க தரப்பில், பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், வேல் யாத்திரையைத் தடை செய்வது சரியல்ல.

Also Read: வேல் யாத்திரை: எம்.ஜி.ஆர் புகைப்பட சர்ச்சை... முற்றுகிறதா பா.ஜ.க Vs அ.தி.மு.க மோதல்?

கொரோனா தொற்று குறைந்திருப்பதாக தமிழக அரசே தெரிவித்திருக்கிறது. வேல் யாத்திரையின்போது குறிப்பிட்ட எந்தப் பகுதியிலும் தங்கப்போவதில்லை. அதேபோல், குறிப்பிட்ட எந்தப் பகுதியும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது. மேலும், தனிமனித விலகலையே மத்திய அரசு வலியுறுத்திவருவதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று இரண்டு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.



source https://www.vikatan.com/news/politics/tn-government-refuses-to-give-permission-to-bjps-vel-yatra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக