Ad

ஞாயிறு, 22 நவம்பர், 2020

வேலூர்: `எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை?’ - அமித் ஷாவுக்கு துரைமுருகன் பதிலடி

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், ‘‘அமித் ஷா இங்கு வந்ததிலும், அ.தி.மு.க-வுடன் கூட்டு ஏற்படுத்தி கொள்வதிலும், அரசாங்க விழாக்களில் கலந்து கொள்வதிலும் எங்களுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், மக்களுடைய வரிப்பணத்தில் நடத்தப்படுகிற அரசு விழா மேடையை அரசியல் மேடையாக்கியதுடன், அரசியல் கூட்டணியையும் உருவாக்கிவிட்டு... தி.மு.க-வை ஏக வசனத்தில் வசைமாறி பொழிந்துவிட்டுப் போயிருக்கிறார். இந்தச் செயல், ஜனநாயகத்துடைய நெறிமுறைகளை அழிக்கின்றச் செயல். அரசியல் கட்சிக்கும், அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாமல்போனால்... அங்கே ஜனநாயகம் செத்து சர்வாதிகாரம் தழைக்கிறது என்றுப் பொருள். எனவே, அரசு விழாக்களில் அரசு சம்மந்தப்பட்டதுதான் பேசவேண்டும், அரசியல் பேசக்கூடாது.

அமித்ஷா

மக்களுடைய வரிப்பணத்தில், கோடிக்கணக்கில் செலவிடப்பட்ட அந்த விழாவில் அமர்ந்திருந்த முதல்வருக்கும், மந்திரிகளுக்கும்தான் விவரம் தெரியவில்லையென்றால், பன்னெடுங்காலம் அரசியலில் நீண்ட அனுபவமுடைய அமித் ஷாவும் அரசு விழாவில் எதிர் கருத்தை சாடியிருப்பது மிகுந்த வருத்தத்துக்குரியது. பொதுவாக, அரசுக்கும் ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லாவிட்டால் ஓராட்சிதான் ஏற்படும். தி.மு.க பொதுச்செயலாளர் என்ற முறையில் அவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அந்த மேடையில், இரண்டு மூன்று கருத்துகளையும் அமித் ஷா சொல்லியிருக்கிறார். முதலிலே, இந்த ஆட்சிக்கு நற்சான்று வழங்கியிருக்கிறார்.

‘இந்தியாவிலேயே, தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது’ என்கிறார். கேடு கெட்ட நம் மாநிலமே முன்னிலையில் இருக்கிறது என்றால், மற்ற மாநிலங்கள் எந்த அளவுக்கு படுமோசமாக இருக்கும். ஊழலைப் பற்றியும், வாரிசுதாரர்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். ‘வாரிசு அரசியல் இருக்கக்கூடாது. வடமாநிலத்தில் ஒழித்துவிட்டோம். தென்நாட்டிலும் வாரிசு அரசியலையும் ஒழிப்போம்’ என்றாராம். அமித் ஷா அப்படி பேசும்போது, பக்கத்தில் இருக்கிற ஓ.பி.எஸ்-சும், ஜெயகுமாரும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டார்களாம். ஓ.பி.எஸ்-சின் மகன் எம்.பி-யாக இல்லையா? ஜெயகுமார் மகன் எம்.பி-யாக இருந்தாரே... அது வாரிசு அரசியல் இல்லையா? அவ்வளவு ஏன்.. பி.ஜே.பி-யில் சொல்கிறேன்.

துரைமுருகன்

எடியூரப்பாவின் மகன் முதற்கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் பி.ஜே.பி-யில் வாரிசு அரசியல் இருக்கிறது. எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை? இந்த மாதிரி பேச்சையெல்லாம் மந்திய உள்துறை மந்திரி பீகாரில் பேசலாம். ஏனெனில், அந்த மாநிலத்தில் அதிகம் படித்தவர்களும், அறிவாளிகளும் கிடையாது. இது, தமிழ்நாடு. புள்ளி விவரங்களைத் திருப்பி தருவதில் நாங்கள் வேகமாக இருப்போம். அமித் ஷாவே பார்த்து பொறாமைப்பட்ட ஜெயலலிதா ஊழல் செய்யவில்லையா? ஊழலுக்காகத் தண்டனை பெற்று தோழியுடன் உள்ளே போக வேண்டியவர், பாடையோடு போய்விட்டார். அவர் தோழி தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். உத்தமியா?

திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டுவதைப் போலும் அமித் ஷா பேசியிருக்கிறார். அவருக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். தி.மு.க-வைக் கிள்ளுக்கீரையாக நினைத்தால், அமித் ஷா ஏமாந்துதான் போவார்’’ என்றார் காட்டமாக.



source https://www.vikatan.com/news/politics/duraimurugan-responds-to-amit-shahs-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக