Ad

வியாழன், 5 நவம்பர், 2020

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வீரப்பன் பெயரில் கொலை மிரட்டல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா. இவர் பதவி ஏற்ற நாள் முதல் ஆளுங்கட்சியினருக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்துவருகிறது. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு தமிழக அரசுக்கும் சூரப்பாவுக்கும் கருத்து மோதல் நிலவியது. அதற்கு முன் அரியர்ஸ் மாணவர்கள் விவகாரம். இப்படி தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு எதிரான நிலைபாட்டை துணைவேந்தர் சூரப்பா மேற்கொண்டு வந்தார்.

அண்ணா பல்கலைக்கழகம்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்தச் சமயத்தில் பேராசிரியர் நியமனம் குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதில், உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு பி.ஹெச்டி என கல்வித் தகுதியை நிர்ணயம் செய்ததால் பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணியாற்றிவரும் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கும் துணைவேந்தர் சூரப்பாதான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Also Read: ஐந்து `சி' வசூல் தி.மு.க(?), கிளம்பத் தயாராகும் சூரப்பா, கண்காணிப்பில் முருகன்... கழுகார் அப்டேட்ஸ்!

இந்தநிலையில்தான் துணைவேந்தர் சூரப்பாவின் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்தத்கடித்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை துணைவேந்தர் சூரப்பா திரும்பப்பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணைவேந்தர் சூரப்பா

இதையடுத்து அண்ணாபல்கலைக்கழகம் தரப்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதில், மிரட்டல் கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை வீரப்பன் என்பவர் எழுதியாகத் தெரிகிறது. அதனால் யார் அந்த வீரப்பன் என்று போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் கேட்க அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை, அவரின் செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் உரிய பரிசீலனைக்குப்பிறகு வெளியிட தயாராக உள்ளோம்.

தமிழக அரசுக்கும் துணைவேந்தர் சூரப்பாவுக்கும் நிலவி வரும் கருத்து மோதல் சமயத்தில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/anna-university-vice-chancellor-files-police-complaint-over-threat-letter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக