Ad

வியாழன், 5 நவம்பர், 2020

ஷிவானி - பாலா ரொமான்டிக் ஜோடியா... அட மொக்கை போடாதீங்கப்பா! பிக்பாஸ் - நாள் 32

பிக்பாஸ் போட்டியாளர்களில் இதுவரை என்னை துளிகூட கவராதவர் என்று ஷிவானியை மட்டுமே சொல்வேன். இதர அனைத்து போட்டியாளர்களும் – நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ – ஏதோ ஒன்றை செய்திருக்கிறார்கள். பார்வையாளர்களைப் பாதித்திருக்கிறார்கள்.

‘பிதாமகன்’ ஜித்தன் ரமேஷ் கூட இரண்டு முறை நிஷாவிடம் கோபப்பட்டிருக்கிறார்; இந்த 30 நாள்களில் அவர் மூன்றரை ஜோக் சொல்லியிருக்கிறார்; வீடு பெருக்கும் விவகாரத்தில் இரண்டு முறை கொளுத்திப் போட்டிருக்கிறார்.

ஆனால் ஷிவானி? இதுவரை அந்த வீட்டில் அவர் கேசரி ஊட்டி விட்டதைத் தவிர என்ன செய்தார்? அவரின் தனித்தன்மைதான் என்ன என்று யோசித்துப் பார்த்தால் எதுவுமே தோன்றவில்லை. ஆனால் எப்படி அவர் எவிக்ஷன் பட்டியலில் இருந்து தொடர்ந்து தப்பிக்கிறார் என்கிற மர்மம் தெரியவில்லை.

"ஆரி இந்த வீட்டிற்கு தன் வாயை மட்டுமே கொண்டு வந்திருக்கிறார்’' என்று பாலாஜி சொல்வதைப் போல ஷிவானி தன் அழகை (?!) மட்டுமே கொண்டு வந்திருக்கிறார். சிக்கனமான உடையில் உலவுகிறார். அவ்வளவே. அதுதான் பிக்பாஸின் டி.ஆர்.பி -க்கும் வேண்டும் போல.

பிக்பாஸ் - நாள் 32

இதன் மறுமுனையில் ரம்யா அசத்துகிறார். ஏதோவொரு காமெடி ஷோவில் இவர் நடுவராக (?!) அமர்ந்திருந்ததை சில சமயங்களில் பார்த்திருக்கிறேன். எல்லா கிண்டலுக்கும் வெறுமனே சிரித்துக் கொண்டு அமர்ந்திருப்பார். அவ்வளவுதான். இவரும் வெறும் அழகுப் பதுமைதான் போல என்று நினைத்தேன்.

ஆனால், பிக்பாஸ் வீட்டில்தான் அவருடைய ஆளுமையின் இன்னொரு பரிமாணம் வெளிப்படுகிறது. ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸில் சுரேஷை லாஜிக்காக மடக்கிய தருணம் முதற்கொண்டு தொடர்ந்து பிரகாசிக்கிறார். கோபத்தைக் கூட புன்னகையுடன் வெளிப்படுத்த இவரால் முடிகிறது. இவருடைய பீரங்கிப் புன்னகையை கமலே ரசித்து அவ்வப்போது கிண்டல் செய்கிறார்.

ஒரு பெண் வெறும் அழகுப்பதுமையாக இருந்தால் அதில் எந்தவொரு வசீகரமும் இல்லை. அதில் அறிவும் கலக்கும் போதுதான் ரசிக்க முடிகிறது. அப்படி ஷிவானி வெளிப்பட்ட (?!) தருணங்கள் எடிட்டிங்கில் போய் விட்டதா அல்லது இனிமேல்தான் அவர் தன்னை நிரூபிப்பாரா என்று பார்க்க வேண்டும்.

ஓகே... 32-ம் நாளில் என்ன நடந்தென்று பார்ப்போம்.

இரண்டு நாள்களை குடுமிப்பிடி கலாட்டா சண்டைகளோடு பரபரப்பாக ஓட்டிவிட்டு அதற்கு அடுத்த நாளை சமன் செய்யும் விதமாக காமெடியாக்கி விடுவது பிக்பாஸ் ஸ்டைல். எனவே இன்று பிக்பாஸ் வீடு பெரும்பாலும் கூத்தும் கும்மாளமுமாக இருந்தது.

காலை பாட்டு ஒலித்தது. என்னதான் நாள்பூராவும் முட்டிக் கொண்டாலும் காலையில் ‘எனக்கு வலிக்கலையே” என்கிற மோடில் எல்லோரும் இணைந்து ஜாலியாக ஆடுவது ரசிக்கத்தக்க காட்சி.

உறுப்பினர் எண்ணிக்கை அதிகம் இருந்து, கழிப்பறை குறைவாக இருக்கும் வீடுகளின் காலை வேளைகளில் இந்தக் காமெடி நிச்சயம் நிகழும். ஒருவர் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ‘வெளியே வந்து தொலையேண்டா’ என்று அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்க, உள்ளே இருக்கும் அவர் அழிச்சாட்டியாக அமர்ந்து கொண்டிருப்பார்.

பிக்பாஸ் - நாள் 32

அதுபோல் ரியோ பாத்ரூமின் வெளியே அவஸ்தைப்பட்டுக் கொண்டு "ரெண்டு ரெண்டு பேரா வேலையை முடிச்சிட்டு வந்துடலாம்... தப்பா நெனக்க மாட்டேன்.. வெளில வாடா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்.

"ஹீரோ ஹீரோயின்கள் புல்வெளிகளில் ரெமான்ட்டிக் உணர்வு பொங்க டூயட் ஆடுகிறார்களே... அங்கே எவராவது ‘அசிங்கம்’ செய்து வைத்திருக்க மாட்டார்களா?’ என்பது போல் எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை கிண்டலாக எழுதியிருந்தார். ஒரு புனைவுலகின் மிகையான ஜோடனையைக் கலைத்து அதை நடைமுறைக்குள் நெருக்கமாக கொண்டு வந்து பார்க்கும் பகடி இது.

பிக்பாஸ் ஒப்பனைகளைத் தாண்டி இது போன்ற நடைமுறை அவஸ்தை நகைச்சுவைகளையும ஒளிபரப்பலாம். யாரையோ மொத்திக் கொண்டிருக்கும் ‘சேது’ விக்ரம், தன்னால் காதலிக்கப்படும் பெண் கடந்து வரும் போது படபடப்பு அடைந்து அடிப்பதை நிறுத்தி விட்டு குற்றவுணர்ச்சியுடன் பார்ப்பதைப் போல அதுவரை அவஸ்தையால் அனத்திக் கொண்டிருந்த ரியோ, அந்தப் பக்கம் ஷிவானி கிராஸ் ஆனதும் சட்டென்று கனவானாக மாறி அமைதியானார்.

மார்னிங் டாஸ்க். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சுண்டல் விற்க வேண்டுமாம். சென்னை வழக்கில் பேசி அசத்தினார் அர்ச்சனா. சாமை நோக்கி ‘என்ன மாமாவை மாத்திட்டியா?’ என்று கேட்டு ரியோவை நோக்கி ‘ஜோடி அம்சமா இருக்கு’ என்பது போல் ஜாடை காட்ட "அதெல்லாம் நீ பார்க்கக்கூடாது. கெளம்பு... கெளம்பு...” என்று சாமை கட்டிக் கொண்டு ரியோ ஜாலியாக சொன்னதும்.. சாம் அதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டதும் ரசிக்கத்தக்க காட்சி.

ஒரு நகைச்சுவைக் காட்சியில் கவுண்டமணி ஒரு வீட்டிற்கு பிச்சை எடுக்கச் செல்வார். வீட்டில் உள்ளவர் ‘ஒண்ணுமே இல்லப்பா’ என்று சொல்ல ‘அப்ப... நீயும் என் கூட பிச்சை எடுக்க வா’ என்று மல்லுக்கட்டுவார். அது போல் சுண்டல் வாங்காத பாலாஜியை தன்னுடன் வியாபாரத்திற்கு அழைத்துக் கொண்டார் அர்ச்சனா. கான்வென்ட் பாப்பாவான ஷிவானி ‘சுண்டல் சுருட்டைல கொடுங்க’ என்று தமிழ் அகராதியில் ஒரு புது வார்த்தையை இணைக்க '‘என்னப்பா... இது சுருட்டு கேட்குது'’ என்று கலாய்த்தார் அர்ச்சனா.

40 டிகிரியில் உடம்பை சாய்த்துக் கொண்டு சுண்டல் விற்றார் ரமேஷ். பர்பாமன்ஸில் வித்தியாசம் காட்டுகிறாராம். (செளத்ரி சார் ஏன் இன்வெஸ்ட் செய்யாமல் ஜாக்கிரதையாக இருக்கிறார் என்று இப்போதுதான் தெரிகிறது).

பிக்பாஸ் - நாள் 32

ஒரு காமெடி நிகழ்ச்சியைக் கூட கலவர பூமியாக்கி விடும் வல்லமை அண்ணன் ஆரிக்கு உண்டு. இவர் சுண்டல் விற்கும் போது சாமும் கேபியும் சிரித்து பேசிக் கொண்டிருக்க, அதைப் பார்த்து காண்டான இவர், நடிப்பதை நிறுத்தி விட்டு ‘டாஸ்க் நடக்கும்போது பேச வேண்டாம்னு நேத்தே முடிவு பண்ணியிருக்கோம்ல’ என்று சீரியஸாக சொல்ல கூட்டம் உறைந்தது.

வாயை ‘ஆ’வென்று திறந்து ரியோ கொடுத்த திகைப்பான எக்ஸ்பிரஷன் சூப்பர். இந்த சீஸனில் ரியோ தரும் பல முகபாவங்களை வைத்து ஒரு தரமான மீம்ஸ் வீடியோவை தயார் செய்யலாம் போலிருக்கிறது.

அடுத்து நிகழ்ந்ததுதான் ஹைலைட்டான காமெடி. அடுத்து சுண்டல் விற்க வந்த சோம், ‘கடலைதான் போடமாட்டேன்ற... சுண்டலாவது வாங்கு’ என்று ரம்யாவை நோக்கி காதல் கணையை வீச ‘தேங்ஸ்டா தம்பி’ என்று ரம்யா சொன்னதும் தீய்ந்து போன சுண்டல் மாதிரி சோமின் முகம் மாறியது. (என் ஸ்வப்னா புத்திசாலிடா!).

“ஆரி ஏன் இப்படி கத்தறாரு... இதைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?” என்று பிறகு சுச்சியிடம் சாம் கேட்க, முண்டாவைத் தட்டிக் கொண்டு வந்தார் பாலாஜி. ஆனால் "எனக்கும் சனத்திற்கும் ஏற்கெனவே வாய்க்கா தகராறு நடந்துச்சு. அதனால நான் உனக்கு சப்போர்ட்டா வர முடியாது” என்று உடனே பின்வாங்க ‘நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்’ என்று ஆதரவளிக்க முன்வந்தார் சுச்சி.

இன்று முழுவதும் நவீன தீண்டாமையுடன் கூடிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் சுரேஷ். ‘இதை அவங்க தொட்டுட்டாங்க.. அப்ப எனக்கு வேணாம்’ என்று சாப்பிட மறுத்து நாள் முழுக்க சீரியஸ் காமெடி செய்து கொண்டிருந்தார்.

சில முதியவர்களுக்கு ஏற்படும் வீண் பிடிவாதமும் வீம்பும் சுரேஷிற்கு நிறைய வந்து விடுகிறது. இவரைச் சமாளிப்பதற்குள் நிஷாவிற்கு போதும் போதும் என்றாகி விட்டது. இன்று முழுவதுமே உற்சாகமின்றி ‘ஜோம்பி’ மனநிலையில் இருந்தார் சுரேஷ்.

**

பிக்பாஸ் - நாள் 32
மீண்டும் வழக்காடு வெட்டி மன்றம். ‘இதெல்லாம் ஒரு கேஸா.’ என்கிற ரேஞ்சில் அடுத்த வழக்கு ஆரம்பித்தது. ரியோ vs நிஷா.

‘யாராவது பாராட்டுவதற்கு முன்னாலேயே... அதை நிஷா கேட்டு வாங்கிக் கொள்கிறாராம். ஒருவருக்கு உதவி செய்யும் மனமிருந்தாலும் அதை சம்பந்தப்பட்டவரிடம் கேட்கத் தயங்குகிறாராம்’ – இம்சை அரசன் புலிகேசி போல ஜாலியான புகார்களை நிஷாக்கா மீது தொடுத்தார் தம்பி ரியோ.

நிஷா, அனிதா ஆகிய இருவரும் சீரியஸாக பேசும் போது அவர்களின் குரலில் தொழிற்முறை சார்ந்த தொனி வந்து விடுகிறது. அப்படியாக, நிஷாவும் இப்போது ‘நடுவர் அவர்களே’ என்று ஆரம்பித்து ‘பட்டிமன்ற’ மோடில் பயணித்து, "அன்பை கேட்டு வாங்கறது தப்பேயில்லைங்க. வாங்கக்கூடாது-ன்னு சொல்றதுதான் தப்பு. நான் இங்க அன்பைத்தான் எதிர்பார்க்கறேன்" என்று ஒரு போடு போட்டார்.

இந்தப் பட்டிமன்றங்களில் நிகழும் ஒரு வழக்கமான காமெடி என்னவென்றால் அது பேச்சாளர் நிகழ்த்தும் மாடுலேஷன்கள்தான். அவர் திடீரென்று உரத்த குரலில் உணர்ச்சிகரமாக ஒன்றைச் சொன்னால் மக்களும் படபடவென்று கைத்தட்டுவார்கள். பேச்சாளருக்கும் தான் பேசியது என்னவென்று தெரியாது. கைத்தட்டியவர்களுக்கும் தெரியாது.

அது போல் நிஷாவும் அழுத்தம் திருத்தமாக சொன்னவுடன் அது உண்மை என்பது போல் ஆனது. "நான் சரியான முடிவுகளைத்தான் எடுக்கறேன். நண்பன் கிட்ட ஒரு ஆலோசனை கேட்டது குத்தமாடா?” என்று அடுத்த பாயின்டையும் ஹைடெஸிபலில் பேசி உடைத்தார் நிஷா. அக்கா அட்டகாசமாகப் பேசுவதைப் பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தார் ரியோ.

ரியோவிற்கு ஆதரவாளராக வந்த ஆரி, எதிர் தரப்பு ஆதரவாளரான ரம்யாவிற்கு சாம் ஏதோ ஒரு பாயின்ட் எடுத்து கொடுக்க சட்டென்று சூடானார். ஆனாலும் சூடான ஆரியை சிரித்துக் கொண்டே ரம்யா சமாளித்த விதம் சிறப்பு.
பிக்பாஸ் - நாள் 32

இறுதியில் நிஷாவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும் கூண்டைத் தாண்டி பறவை போல் தாவிச் சென்று ‘ஜெயிச்சுட்டோம் மக்களே’ என்று நிஷாவை இறுகக் கட்டியணைத்து உணர்ச்சிவசப்பட்டார் ரியோ. "வாதி... பிரதிவாதி... ரெண்டு பேரும் இணைந்து போங்காட்டம் ஆடறாங்க” என்று நீதிபதியே பிக்பாஸிடம் மனு கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அடுத்து ரியோ சொன்னதுதான் அசத்தலான காமெடி. "நான் உன் மேல வெச்ச குற்றச்சாட்டுல்லாம் சுச்சி எனக்கு அருள்வாக்கா சொன்னது. அதைத்தான் மனுவுல எழுதினேன். இப்ப சுச்சி வாயாலேயே உனக்கு சார்பா தீர்ப்பு சொல்ல வெச்சிட்டேன். பார்த்தியா?” என்று நிஷாவிடம் சொல்லி குஷியானார் ரியோ. பிக்பாஸ் வீட்டில் இன்னொரு ராஜதந்திரி உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அடையாளம் இது.

“நீ வெளில போய் ஆரி கிட்ட எதையும் கேட்டு வைக்காத...” என்று நிஷாவை எச்சரித்தார்கள். "நீ இந்த வீட்ல இருக்கறதுக்கு அன்ஃபிட்’டுன்னு ஆரி என்னைச் சொல்லிட்டாரு" என்று நிஷா வருத்தத்துடன் சொல்ல ‘அதான் இப்ப பேசி கலக்கிட்டியே செல்லம்’ என்பது போல் நிஷாவை ஊக்கப்படுத்தி அழைத்துச் சென்றது ரியோ டீம்.

‘வெட்டி மன்றம் இத்தோடு கலைக்கப்பட்டு நீதிமன்றமும் இடிக்கப்படுகிறது’ என்கிற பிக்பாஸின் அறிவிப்பை கேட்டவுடன் மக்கள் உற்சாகமானார்கள்.

‘கல்லுக்குள்ளும் கீழே சில பூக்கள்’ என்பது போல சீரியஸ் ஆரிக்குள்ளும் அவ்வப்போது உள்ளே ரொமான்டிக் பூ பூக்கும் போலிருக்கிறது. “நீங்க ஜெயிச்சதுதான் எனக்கு மகிழ்ச்சி" என்று எதிர் வக்கீல் ரம்யாவைப் பார்த்து வெட்கப் புன்னகையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் ஆரி. (சோமிற்கு ஒரு போட்டி போல).

“நான் வருங்காலத்தைப் பத்தியெல்லாம் கவலைப்படறதில்ல. நிகழ்காலத்துல வாழறவ" என்று ரம்யா அப்போது சொன்ன பதில் பிக்பாஸ் வீட்டின் சுவர்களில் நிரந்தரமாக எழுதப்பட வேண்டியது. ஏனெனில் ஜென் தத்துவமும் இதைத்தான் சொல்கிறது.

**

ரணகளத்திலும் கிளுகிளுப்பு மனநிலையை மெயின்டெயின் செய்யும் பாலா – ஷிவானி ஜோடியை கலாய்ப்பதற்காக மக்கள் ‘அந்தாக்ஷரி’ விளையாடிக் கொண்டிருந்தார்கள். “லூஸூப் பையன் உன் மேலதான் லூஸா சுத்தறான்" என்று பாடப்படும் போது தனக்கு தேசிய விருது கிடைத்தது போன்ற பெருமையான முகத்துடன் அந்த அங்கீகாரத்தை ஏற்றுக் கொண்ட ஷிவானி, குப்புறப்படுத்து பகல் கனவு கண்டு கொண்டிருந்த பாலாஜியின் ஜடாமுடியில் பேன் பார்க்கத் துவங்கினார்.

பிக்பாஸ் - நாள் 32

இத்தனை கலாட்டாக்களுக்கு இடையிலும் அதில் கலந்து கொள்ளாமல் ஒரு வெள்ளைப் பேப்பரை வைத்து அதில் எதையோ சீரியஸாக படித்துக் கொண்டிருந்தார் ரமேஷ். (நடிகன்டா.. நடிகன்டா).

**

வெறும் சோற்றில் தண்ணீர் ஊற்றி (சாம்பாரில் சாம் கை பட்டு விட்டதாம்) பிசைந்து அடித்துக் கொண்டிருந்தார் சுரேஷ். ரியோ மட்டும் "ஏன் சார்…” என்று வருத்தத்துடன் கேட்க, மற்றவர்கள் ‘தாத்தாவிற்கு கொழுப்பு அடங்கட்டும்’ என்பது போல் விட்டு விட்டார்கள்.

அடுத்ததாக ஒரு சமையல் போட்டி. நெய் பிராண்ட் ஸ்பான்சர் செய்யும் போட்டி இது. இந்த டாஸ்க்கிற்கான விளக்கத்தை தனது பிரத்யேக பாணியில் அர்ச்சனா விவரிக்க ‘சூப்பர் செல்லம்’ என்று பிக்பாஸ் பாராட்டி மகிழ அழகிப் போட்டியில் வென்ற வெட்கத்துடன் மகிழ்ச்சியின் உச்சிக்குப் போனார் அர்ச்சனா.

அர்ச்சனா தலைமையில் ஓர் அணியும் சனம் தலைமையில் இன்னொரு அணியும் போட்டிக்கு கிளம்பின. இவர்களுக்கு உதவியாளர்களாக சிலர். (அதாவது மீந்து போன முந்திரிப் பருப்புகளை மொக்குவதுதான் இவர்களின் உதவி).

சமையலில் சிறந்து விளங்குபவராக சுரேஷ் இருந்தாலும் ‘அவா தொட்டுட்டா... இவா தொட்டுட்டா’ என்கிற காண்டில் இருந்ததால் அவர் அணிக்குத் தலைமையேற்கவில்லை போல. ‘டாஸ்க்’ என்று வந்து விட்டால் கோபதாபங்களை துறந்துவிட்டு விளையாட்டில் மும்முரமாகி விடும் சுரேஷ் ஏனோ அந்த மனநிலையை இன்று கைவிட்டார்.

கிடைக்கும் சமையல் பொருட்களை தற்செயல் தேர்வில் எடுக்க வேண்டும். என்ன சமைக்கப்பட வேண்டும் என்பது பிறகுதான் அறிவிக்கப்படும். எனவே தேர்ந்து எடுத்த பொருட்களை வைத்து கற்பனைத்திறனுடன் சமைக்க வேண்டும்.

அடுக்கப்பட்டிருக்கும் பொருட்களில் இரண்டை எடுக்க வேண்டும் என்கிற நிலையில் சனம் செய்ததுதான் அதிக காமெடி. ‘நெய் பாட்டில்’ வேண்டாம் என்று அவர் தவிர்த்துவிட்டார். இந்தப் போட்டியை ஸ்பான்சர் செய்வதே நெய் கம்பெனிதான். (அந்தக் கம்பெனிக்காரன் மனசு என்ன பாடு பட்டிருக்கும்?). பிறகு அனிதா வற்புறுத்த நெய் பாட்டில் எடுக்கப்பட்டது.

பிக்பாஸ் - நாள் 32

அர்ச்சனா அணி ‘கிராம்பா... மிளகா’ என்கிற தேர்வில் தத்தளிக்கும் போது மங்குனி உதவியாளரான நிஷா ‘கிராம்பை எடுக்கலாமே’ என்று சொல்ல அதை எடுத்தார் அர்ச்சனா. இந்த முடிவுதான் அவர்களுக்கு எதிராக இருக்கப் போகிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது.

அர்ச்சனா அணிக்கு வெண் பொங்கலும் சனம் அணிக்கு கேசரியும் வந்தது. (நல்ல வேளை. சனம் நெய் எடுக்கலைன்னா என்ன ஆகியிருக்கும். நெய் கம்பெனி ஸ்பான்சர் பண்ற போட்டில அதுக்குத்தானே முக்கியத்துவம் இருக்கும்?! அடிப்படையான லாஜிக் இது).

"அக்கா... பெப்பருக்கு பதிலா கிராம்பை எடுத்துட்டோமே" என்று நிஷா பல்லைக் கடித்துக் கொண்டே ரகசியம் பேச... ‘பரவாயில்ல வா...’ என்று சமாளித்து அழைத்துச் சென்றார் அர்ச்சனா. வெண் பொங்கலின் அழகே... சூடான பொங்கலின் இடையில் கடிபடும் மிளகுதான். அது இல்லாமல் எப்படி?

இந்த இடத்தில்தான் நிஷாவின் சமயோசிதம் வெளிப்பட்டது. அம்மியை வைத்து தேங்காய் சட்னி அரைக்கத் துவங்கினார். ‘பொங்கல் முன்னே பின்னே வந்தாலும் சட்னி சுவையாக இருந்தால் அதை ஈடு கட்டி விடும்’ என்று நிஷா யோசித்தது பிறகு அவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

(அம்மியில் கொரகொரவென்று அரைத்து செய்யப்படும் சட்னியின் ருசியே தனி. மிக்ஸி வந்த பிறகு இந்தப் பாணி சட்னி காணாமலே போய் விட்டது. இப்படி நாம் இழந்த ருசிகள் அநேகம்.)

‘அண்டை வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே’ என்றொரு பழமொழி இருக்கிறது. ‘ஸ்பான்சர் நெய்தானே’ என்கிற கணக்கில் அதை தாராளமாக ஊற்றினார்கள். வெளியே ‘கேசரி அணி’ தங்களின் வாய்ப்பிற்காக தவித்துக் கொண்டிருக்க அர்ச்சனா அணி நிதானமாக பொங்கலை கிளறிக் கொண்டிருந்தார்கள்.

பிக்பாஸ் - நாள் 32

அடுத்து ஆர்ப்பாட்டமாக நுழைந்தது கேசரி அணி. இருந்த மொத்த நெய்யையும் வாணலியில் கவிழ்த்தார் அனிதா. (ஸ்பான்சர்காரன் கண்ணில் நெய்க்குப் பதிலாக ரத்தம் வந்திருக்கும்!) "பிக்பாஸூ பங்களா... நீங்க செஞ்சது என்ன பொங்கலா” என்று எதிரணியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார் ரியோ.

பிறகு பரஸ்பரம் இரு அணிகளும் உணவை சுவைத்துப் பார்த்தன. ‘சப்பாத்தி மாவு ரெடி பண்ணும் போது அதுல சர்க்கரை போடக்கூடாது’ என்று கேசரி அணியை பங்கம் செய்தார் சோம். ‘முடிவை கேப்டன் சம்யுக்தா சொல்லலாம்’ என்று பிக்பாஸ் அறிவிக்க, அவர் இன்னொரு ரவுண்டு மொக்கி விட்டு பொங்கல் அணி வெற்றி பெறுவதாக அறிவித்தார். உண்மையில் அது சட்னிக்குக் கிடைத்த வெற்றி. அதாவது நிஷாவிற்கு கிடைத்த வெற்றி.

**

‘பிக்பாஸ் வீட்டில் ஆங்கிலம் இறைபடுகிறதே’ என்று இரண்டு நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். அது பிக்பாஸின் காதில் விழுந்ததோ… என்னமோ. ஏறத்தாழ 30 நாள்கள் கழித்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கேப்டன் சம்யுக்தாவை வாக்குமூல அறைக்கு அழைத்த பிக்பாஸ் "இனி இந்த வீட்டில் முழு நீள ஆங்கில வாக்கியங்களைப் பேசக்கூடாது... அதற்கு தமிழில் சப்டைட்டில் போடுவதற்குள் எங்களுக்கு தாவு தீர்ந்து விடுகிறது. 'அந்த சப்டைட்டிலிலும் தமிழ் பிழையாக வருகிறது’ என்று புகார்கள் வருகின்றன. இனி தமிழில்தான் பேச வேண்டும்" என்று அறிவுறுத்த, "Sure Bigg boss. I will take care of it" என்று சாம் பதில் சொல்ல, பிக்பாஸ் கொலைவெறியுடன் தன் தலையில் அடித்துக் கொண்ட சத்தம் அடுத்த ஏரியா வரை கேட்டிருக்கும்.

சமகால இளையதலைமுறையால் ஆங்கிலம் கலக்காமல் ஒரு விநாடி கூட பேச முடியாது என்கிற உண்மை அடுத்த சில நிமிடங்களில் நிரூபணமாயிற்று. அந்த அளவிற்கு ஆங்கிலம் நம் நடைமுறை உரையாடலில் கன்னாபின்னாவென்று ஊடுருவியிருக்கிறது. ஒரு மொழி மெல்ல அழிவதென்பது அந்தச் சமூகமே அழிவதற்கு ஈடானது.

**

பிக்பாஸ் - நாள் 32
அடுத்த சுவாரஸ்யமான போட்டி Bigg Boss FM station. அர்ச்சனாவும் சுசித்ராவும் ஆர்ஜேக்களாக இருப்பார்கள். தொழிற்முறை சார்ந்த அனுபவம் ஏற்கெனவே இருந்தாலும் சுச்சி சுணங்கிக் கொண்டிருக்க அவரை அநாயசமாக ஓவர் டேக் செய்து கொண்டு போனார் அர்ச்சனா. இன்று அர்ச்சனாவின் இன்னொரு பரிமாணத்தைக் காண முடிந்தது. அந்தளவிற்கு நாள் முழுவதும் உற்சாகமான மனநிலையில் இருந்தார். ஆர்ஜேவாக அவரது திறமை அட்டகாசமாக பளிச்சிட்டது.

பிக்பாஸ் வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் கலாட்டாவான மொழியில் அறிமுகப்படுத்தி பேசிய அர்ச்சனா... ‘பாலாஜிக்கு பிடிச்ச ஒரே ஒரு பூ’ என்பது போல் சொல்ல ஷிவானியின் முகம் தீவிரமானது. மூக்கு விடைக்க திகில் படம் பார்ப்பது போன்ற முகபாவத்தைத் தந்தார் ஷிவானி.

‘சீனியர் மெம்பர் நிஷா செய்யும் லெமன் ரைஸ்ஸானது புளியோதரை போலவே இருக்கும்’ என்று சொல்லப்பட்டதற்கு தன் பிரத்யேக பாணியில் சிணுங்கினார் நிஷா. சனத்தின் நடனத்திற்கு எட்டு கோடி ரசிகர்கள் உலகமெங்கிலும் இருக்கிறார்கள் என்று அர்ச்சனா அளந்துவிட்டதுதான் பயங்கர காமெடி. சனமே இதற்கு ‘ஜெர்க்’ ஆகி சிரித்தார்.

அடுத்ததாக ஜித்தன் ரமேஷை இண்டர்வியூ செய்யத் துவங்கினார் சுச்சி. ஆரம்பித்த வேகத்திலேயே அது முடிந்து போனது. பிக்பாஸ் எடிட்டிங் டீமிற்கு சில மணி நேரம் மிச்சம்.

நயன்தாராவுடன் ஒரு படத்தில் ரொமாண்டிக் ஹீரோவாக நடிப்பதுதான் ரமேஷின் லட்சியமாம். (இந்த விஷயம் நயன் காதில் விழாம பார்த்துக்கணும்). ‘வெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆசை என்றார், அடுத்து வந்த அனிதா. (பாவம் வெற்றிமாறன்... ஆக்சுவலி... அனிதா விசு படத்துல நடிச்சா பொருத்தமா இருக்கும். ஆனால், விசு இல்லையே).

பிக்பாஸ் - நாள் 32

சிலர் தங்கத்தில் திருவோடு கிடைத்தாலும் அதில் பிச்சைதான் எடுப்பார்களாம். அது போல ‘எங்கள் பட்ஜெட்டில் கிடைத்த யுவன் சங்கர் ராஜா’ என்கிற அறிமுகத்துடன் இசையமைப்பாளர் சோமை அர்ச்சனா அழைக்க, அவரோ காலை டாஸ்க்கில் இருந்து இன்னமும் வெளியே வராமல் ‘வாட்டரு. வாட்டரு... வாட்டர் பாக்கெட்டு’ என்று விற்றுக் கொண்டிருந்தார். (பாவம். ரம்யாவின் நிராகரிப்பு இவரை ‘காதல்’ பட ‘பரத்’ ஆக்கி விட்டது போல).

‘சிங்கப்பெண்ணே’ பாடலை ஷிவானிக்கு டெடிகேட் செய்தார் சாம். (பாவம் ஏ.ஆர்.ரஹ்மான்). ‘ஹலோ…….’ என்று ஜோதிகா போலவே ஹஸ்கி வாய்ஸில் இழுத்து பேசினார் ரம்யா.

பிக்பாஸ் - நாள் 32
இந்தக் கலாட்டா முடிந்ததும் பலரும் அர்ச்சனாவைப் பாராட்டினார்கள். ‘இறுதிச் சுற்று’ திரைப்படத்தின் கிளைமாக்ஸில் மாதவனின் இடுப்பில் பாய்ந்து அமரும் நாயகியைப் போல அர்ச்சனாவின் இடுப்பில் அனிதா பாய்ந்து வந்து அமர எவ்வித அசம்பாவிதமும் நிகழாதது பிக்பாஸ் செய்த புண்ணியம். அனிதாவைப் பார்த்து கேபியும் அது போல் செய்து மகிழ, அர்ச்சனாவின் இடுப்பு ‘காஞ்சனா’ படத்தின் கோவை சரளா இடுப்பு போல் ஆகி விட்டது.
‘நள்ளிரவு நவரசம்’ என்கிற பெயரில் ரேடியோ ஸ்டேஷனை கைப்பற்றிய சோமும் ரியோவும் இதர போட்டியாளர்களை ஜாலியாக வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். ‘நாட்டுச்சரக்கு’ பாடலை ‘நச்’சென்று பாடி ஆச்சர்யப்படுத்தினார் அனிதா.

தன்னையும் ஷிவானியையும் இணைத்துக் கிண்டலடித்த விவகாரத்தை அர்ச்சனாவிடம் எடுத்துச் சென்ற பாலாஜி அதை ஆட்சேபிக்க, "சரி. இனிமே செய்ய மாட்டேன். ஆனா அப்படித்தான் இங்க நெனக்கப்படுது. பார்வையாளர்களுக்கு அப்படித்தான் போய் சேரும். .அதான் உனக்கு எச்சரிக்கை செஞ்சேன். உன்ன விடு.. அந்தப் பொண்ணோட நிலைமையையும் யோசிக்கணும்...” என்று சீரியஸாக அர்ச்சனா அறிவுரை வழங்கினார்.

‘அது வெறும் எமோஷனல் சப்போர்ட்தான்’ என்று பாலாஜி மழுப்பினாலும் காட்டப்படும் காட்சிகளின் வழி நமக்கு அப்படித் தெரியவில்லை. அதிலும் பேனை பெருமாள் ஆக்கி காட்டப்படும் பிரமோக்களின் பின்னணியில் ரொமான்ட்டிக் பாட்டெல்லாம் போட்டு இதன் சதவிகிதத்தை அதிகப்படுத்தி காண்பிக்கிறார்கள்.

பிக்பாஸ் - நாள் 32

“இந்த வீட்டோட பிரதிநிதி மாதிரி தன்னை அர்ச்சனா நெனச்சுக்கறாங்க. அதை நான் தடுக்க விரும்பறேன். இனிமே அம்மா சென்ட்டியெல்லாம் வேணாம்-னு தோணுது. அவங்க கிட்டயே அதை சொல்லிடப் போறேன். யாராவது என்கிட்ட அன்பு காண்பிச்சா அதை நெஜம்னு நானே நம்ப விரும்புவேன்" என்பது போல் ஷிவானியிடம் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார் பாலாஜி. (ஸ்பீக்கருக்குள் தலையை விட்டு கேட்டும் கூட இவ்வளவுதான் எனக்கு குன்சாக புரிந்தது).

“நான் under perform பண்ணிட்டேன். அர்ச்சனா ஓவர்டேக் பண்ணிட்டாங்க" என்பது போல் சுச்சி பாலாஜியிடம் முனகிக் கொண்டிருந்ததோடு இந்த நாள் முடிந்தது.

தாங்கள் காதலர்களாக இணைத்துப் பார்க்கப்படுவதைப் பற்றி பாலாஜியும் ஷிவானியும் கவலை கொள்வது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்கான முகாந்திரத்தை அவர்களேதான் ஏற்படுத்துகிறார்கள். ஒவ்வொரு சீஸனிலும் இப்படியொரு காதல் ஜோடி உருவாகி விடுகிறது. சீஸன் முடிந்ததும் காதலும் விவாகரத்தாகி விடுகிறது.

"சீஸன் முடிந்ததும் பறந்து செல்ல காதல் என்பது வேடந்தாங்கல் பறவையா என்ன?”

(நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா... சூப்பரா சொன்னாம்ப்பா...)



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/balaji-love-track-and-archana-scores-as-rj-bigg-boss-tamil-season-4-day-32-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக