Ad

வியாழன், 5 நவம்பர், 2020

வேல் யாத்திரை: தடையை மீறும் தமிழக பா.ஜ.க... விழி பிதுங்கும் காவல்துறை!

''தமிழக அரசின் தடையை மீறி 'வேல் யாத்திரை' செல்வோம்'' என்று அறிவித்தபடியே திருத்தணி சென்றிருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன். பா.ஜ.க-வின் இந்த யாத்திரை பதற்ற சூழலை ஏற்படுத்திவருகிறது. தமிழ்நாட்டில், நவம்பர் 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூர் கோயில் வரையிலாக வேல் யாத்திரை நடத்தப்படும் என தமிழக பா.ஜ.க ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் பலவும் 'பா.ஜ.க-வின் வேல் யாத்திரையை தமிழக அரசு தடை செய்யவேண்டும்.

வேல் யாத்திரை

`தங்கள் சொந்தக் கட்சி வளர்ச்சிக்காக, யாத்திரை என்ற பெயரில் மதக் கலவரத்தை தூண்டுகிற உள்நோக்கத்தோடு தமிழக பா.ஜ.க இந்த வேல் யாத்திரையை நடத்த முடிவெடுத்துள்ளது. கடந்த காலங்களில் நாடு முழுக்க இதேபோல் ரத யாத்திரை நடத்தி மதக் கலவரங்களுக்கு வித்திட்டிருந்த கட்சி பா.ஜ.க' என்றும் உதாரணம் கூறி பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.

இதையடுத்து, நேற்றைய தினம் வேல் யாத்திரைக்குத் தடை விதித்த தமிழக அரசு, 'கொரோனா காலகட்டத்தில், மக்கள் பெருந்திரளாகக் கூடுவது நோய்த்தொற்றை அதிகரிக்கும்' என்ற காரணத்தையும் கூறியிருந்தது. தமிழக அரசின் இந்தத் திடீர் தடை அறிவிப்பு பா.ஜ.க தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. யாத்திரை செல்வதற்கான உற்சாகத்தில் இருந்தவர்கள் துவண்டு போயினர்.

Also Read: கொரோனா பரவல்; உயர் நீதிமன்ற உத்தரவு! - பா.ஜ.க வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு

இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், யாத்திரைக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த பிரத்யேக வாகனத்தில் ஏறி தடையை மீறி வேல் யாத்திரை கிளம்பினார். காவி உடை அணிந்து கையில் வேலைப் பிடித்தபடி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் புடை சூழ, எல்.முருகன் 'வேல் யாத்திரை'யைத் தொடங்கியதும் தமிழக அரசியல் சூழலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

வேல் யாத்திரை

இதையடுத்து, மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சென்னையிலிருந்து 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து சென்ற பா.ஜ.க-வின் வேல் யாத்திரையை, நசரேத்பேட்டையில் காவல்துறையினர் வழிமறித்தனர். இந்த நிலையில், 'நாங்கள் திருத்தணி முருகனை வழிபடச் செல்கிறோம். கோயிலுக்கு வழிபடச் செல்லக்கூடாது என்று தடை ஏதும் இருக்கிறதா...' என்று பா.ஜ.க தரப்பில் கேள்வி கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Also Read: சிவகாசி: `ராஜாஸ்தான், ஒடிசாவில் பட்டாசு வெடிக்கத் தடை!’ - ரூ.150 கோடி விற்பனை பாதிக்கும் அபாயம்

இதையடுத்து, `5 வாகனங்களுக்கு மேல் அணிவகுத்து செல்லக்கூடாது' என்ற நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி அளித்ததைத் தொடர்ந்து யாத்திரை திருத்தணியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ``வேல் யாத்திரை ஏற்கெனவே திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுக்க வெற்றிகரமாக நடத்தப்படும். இந்த வேல் தமிழ்நாடு முழுக்க துள்ளிச் செல்லும்'' என்று வெற்றிக் களிப்புடன் கூறிச் சென்றார்.

வேல் யாத்திரை எல்.முருகன்

தமிழக அரசின் தடையை மீறி பா.ஜ.க-வினர் யாத்திரை சென்றுகொண்டிருப்பது, ஆளும் அ.தி.மு.க அரசுக்கும் காவல்துறைக்கும் சவால் விடுப்பதாகவே அமைந்துள்ளது என யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சியினர் ஆதங்கப்பட்டுள்ளனர்.

Also Read: `முருகனின் துணைகொண்டு யாத்திரையைத் தொடங்குகிறோம்!’ - திருத்தணிக்குப் புறப்பட்டார் எல்.முருகன்

இந்த நிலையில், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வனிடம் இதுகுறித்துப் பேசியபோது, ``கொரோனா காலகட்டத்தில், நோய்த்தொற்றைத் தடுக்கும் நோக்கில் 'வேல் யாத்திரைக்குத் தமிழ்நாடு தடை விதித்துள்ளதுதான். தற்போது பா.ஜ.க-வினர் திருத்தணி முருகன் கோயிலுக்குச் செல்வதாக திருவள்ளூர் மாவட்டக் காவல்துறையிடம் அனுமதி வாங்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர். தற்போது முதல் அமைச்சர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இவ்விஷயத்தில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முதல்வரின் அனுமதியைப் பெறுவதற்காக காவல்துறை காத்திருக்கிறது'' என்றார் சுருக்கமாக.

வைகைச் செல்வன்

'தமிழக அரசின் தடையை மீறி வேல் யாத்திரை செல்வோம் என்று அறிவித்தபடி, எங்கள் தலைவர் யாத்திரை கிளம்பிவிட்டார்' என்று வெற்றிப் புன்னகையோடு அவரை வரவேற்க திருத்தணியில் காத்திருக்கின்றனர் பா.ஜ.க தொண்டர்கள். 'வேல் யாத்திரை என்று தடபுடலாக அறிவித்துவிட்டு, தடை அறிவிப்பு வந்ததும் கோயிலுக்கு சாமி கும்பிடச் செல்கிறோம் என்று பின்வாங்கிவிட்டது பா.ஜ.க' என்று எதிர்த்தரப்பினரும் பேசிவருகின்றனர்.

எது எப்படியோ.... தமிழக அரசு-காவல்துறைக்கு 'பா.ஜ.க-வின் இந்த வேல் யாத்திரை விவகாரம் கடும் சவாலாகவே இருக்கும்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்!



source https://www.vikatan.com/government-and-politics/controversy/bjp-dares-government-to-hold-vel-yatra-without-permission

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக