Ad

ஞாயிறு, 8 நவம்பர், 2020

சுருக்கில் சிக்கி துடிதுடித்து இறந்த சிறுத்தை! - நீலகிரியில் தொடரும் சோகம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள ஏ.வி.டி தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதை அந்தப் பகுதி மக்கள் கண்டனர். உடனடியாக வனத்துக்குறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சிறுத்தை

நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள், சிறுத்தை இறந்துகிடப்பதை உறுதி செய்தனர். மேலும், சிறுத்தையின் கழுத்தில் சுருக்குக் கம்பி இறுக்கி இருப்பதைக் கண்டு, அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

Also Read: நீலகிரி: யானையைத் தொடர்ந்து சிறுத்தை..! - கூடலூரில் தலைதூக்கும் துப்பாக்கி கலாசாரம்?

வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சுருக்குக் கம்பியில் சிக்கிய சுமார் 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை, தப்ப முடியாமல் போராடி துடிதுடித்து இறந்திருப்பதை உறுதி செய்தனர். கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் உடற்கூறாய்வு செய்து, சிறுத்தையின் உடலை தீயிட்டு எரித்தனர்.

இறந்த சிறுத்தை

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தப் பகுதியில் உள்ள இரண்டு நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட, அவர்களைப் பிடித்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதில், அந்த இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து வனத்துறை ஊழியர் ஒருவர் பேசுகையில்,``கீழ் கக்காச்சி பகுதியைச் சேர்ந்த முருகன் (38) மற்றும் கிளிஞ்சாடா பகுதியைச் சேர்ந்த செல்வன் (40) ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினோம். அதில், அவர்கள் இருவரும் கடந்த பல மாதங்களாக சுருக்குக் கம்பி வைத்து காட்டுப் பன்றி, மான், முயல் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளனர்.

கைதானவர்களுடன் வனத்துறையினர்.

தற்போது காட்டுப் பன்றிக்கு சுருக்குக் கம்பி வைத்ததாகாவும் அதில் சிறுத்தை சிக்கி பலியானதாகவும் இருவரும் ஒப்புக்கொண்டனர். அவர்களைக் கைது செய்து,தொடர் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள்,``நீலகிரி மாவட்டத்தில் தற்போது மீண்டும் சுருக்குக் கம்பிகள் வைக்கும் செயல் அதிகரித்து வருகிறது. அண்மையில் கோத்தகிரி பகுதியில் புலி ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியது.

சிறுத்தை

மான், முயல், கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் இந்த சுருக்கில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கின்றன. இவற்றைத் தடுக்க கடுமையான சட்டங்களை வனத்துறை முன்னெடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/leopard-found-dead-in-tea-estate-with-snare

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக