Ad

ஞாயிறு, 8 நவம்பர், 2020

`ராமனும் சீதையும் ராவணனை வென்றதுபோல் கொரோனாவை வெல்வோம்!’ - இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி வாழ்த்து

``ராவணன் என்ற அரக்கனின் தோல்விக்குப் பிறகு பகவான் ராமனும் அவரது மனைவி சீதாவும் பல மில்லியன் விளக்குகளால் எரியூட்டப்பட்ட வழியில் வீடு திரும்பியதைப் போலவே, நாமும் கொரோனாவை வெல்வதற்கான வழியை கண்டுபிடித்து, அதை வெற்றிகரமாகச் செய்வோம்" என்று போரிஸ் ஜான்சன் கூறினார்.

உலகெங்கிலும் நவம்பர் 14 ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சமூக விலகலோடு பண்டிகை தினத்தை கொண்டாடுவது கடினமாக இருந்தாலும், இது போன்ற காலங்களில் விரைவாக நோய் பரவும் அபாயம் உள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அரசுகள் அறிவுறுத்தியுள்ளன..

இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்று நாள் மெய்நிகர் தீபாவளி கொண்டாட்டத்தில் ( "iGlobal diwali Fest 2020") கலந்துகொண்டு பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்தார். இந்நிகழ்வில் இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் (Priti Patel), எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் (keir starmer) மற்றும் லிபரல் டெமக்ராட் (liberal democrat) தலைவர் எட் டேவி (Ed davey) ஆகியோருடன் அமர்வுகளும் இடம்பெறும்.

மூன்று நாள் கொண்டாட்டத்திற்கானநிகழ்ச்சி நிரலில் யோகா, இசை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள பிரிட்டிஷ் இந்திய சமூகத்தின் சாதனையாளர்களைக் கௌரவித்து விருது வழங்கும் விழாவும் இடம்பெற்றுள்ளது. கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் மேயர் ஆண்டி ஸ்ட்ரீட் (Andy Street) உள்ளிட்ட பலரும் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காணொலி வாயிலாக கலந்து கொண்டு தீபாவளி வாழ்த்து செய்திகளை வழங்கினார்கள்.

தீபாவளி

வாழும் கலை (Art of Living) நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ஆன்மீக அமர்வு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பூஜைகள் மற்றும் பிரிட்டிஷ் இந்திய இசைக்கலைஞர் நவின் குந்த்ரா தலைமையிலான பாலிவுட் இசை நிகழ்ச்சி உள்ளிட்டவையும் வார இறுதியில் ஆன்லைனில் நடைபெற்றது.

Also Read: `ஊதியம் போதவில்லை!' - பதவி விலகுகிறாரா பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்?

மூன்று நாள் தீபாவளி கொண்டாட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிப்பது குறித்து நம்பிக்கையான வாழ்த்து செய்தியை வழங்கியதோடு, தீபாவளி திருவிழா இருட்டுக்கு எதிரான ஒளியின் வெற்றி என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ``நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதைத் தடுப்பதற்காக, இரண்டாவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. டிசம்பர் 2-ம் தேதி வரை நீடிக்கும். இது ஒரு பெரிய கூட்டு முயற்சி.

சந்தேகத்திற்கு இடமின்றி பெரிய சவால்கள் காத்திருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் காலத்தை நாம் ஒன்றுகூடிக் கடப்போம். இருளை வீழ்த்தி ஒளி வெற்றி பெறுகிறது என்பதை தீபாவளி நமக்கு கற்பிப்பதைப் போலவே நாமும் கொரோனாவை வெல்வோம்.

ராவணன் என்ற அரக்கனின் தோல்விக்குப் பிறகு பகவான் ராமனும் அவரது மனைவி சீதாவும் பல மில்லியன் விளக்குகள் மிளிர்ந்த வழியில் வீடு திரும்பியதைப் போலவே, நாமும் கொரோனாவை வெல்லும் வழியைக் கண்டுபிடிப்போம், வெற்றிகரமாக வென்றும் காட்டுவோம்" என்று போரிஸ் ஜான்சன் கூறினார்.

போரிஸ் ஜான்சன்

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மக்கள் இந்த ஆண்டு சிரமப்படுவார்கள் என்பதை ஒப்புக் கொண்ட ஜான்சன், இங்கிலாந்தில் உள்ள இந்திய சமூகம் பாதுகாப்பான தீபாவளிக் கொண்டாட்டத்துக்காக எடுத்துள்ள முயற்சிகளையும் பாராட்டினார். மக்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் வகையில் தீபாவளியின் உணர்வை மக்கள் வீடுகளுக்குள் கொண்டு வந்ததற்காக "மெய்நிகர் தீபாவளி திருவிழா" குறித்தும் அவர் பாராட்டினார்.

மக்களிடம் பேசிய போரிஸ் ஜான்சன்,``உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் நீங்கள் சந்திக்க விரும்பும்போது, அல்லது உங்கள் நண்பர்களைப் பார்த்து தீபாவளி சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ள விரும்பும்போது தூரத்தில் இருந்து கொண்டாடுவது எளிதல்ல என்பதை நான் அறிவேன்.

ஆகவே, உங்கள் தியாகங்களும், சரியானதைச் செய்வதற்கான உங்கள் உறுதியும் உண்மையில் உயிர்களைக் காப்பாற்ற உதவுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

ஆன்லைனில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டம் குறித்து பிரிட்டனில் இருந்து செயல்படும் இந்தியா இன்க் (India inc) குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் லாட்வா கூறுகையில்,"பிரதமர், முக்கிய இங்கிலாந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாட்டின் முக்கிய பெருநகரங்களின் மேயர்கள் புது விதமாக ஆன்லைன் வழியில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. இது இங்கிலாந்து-இந்தியா உறவுகளின் உண்மையான ஆழத்தைப் பிரதிபலிக்கிறது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/uk-pm-boris-johnsons-diwali-message

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக