Ad

செவ்வாய், 3 நவம்பர், 2020

சென்னை: `காட்டிக் கொடுத்த மீசை; காதலியுடன் சிக்கிய கொள்ளையன்' - கிலோக் கணக்கில் நகைகள் பறிமுதல்

சென்னை தி.நகர், மூசா தெருவில் ஆர்டரின் பேரில் தங்கம், வெள்ளி, வைர நகைகளைக் செய்துக் கொடுக்கும் ஜூவல்லரி பங்களா டைப் வீட்டில் செயல்பட்டு வந்தது. வீடு என்பதால் பலருக்கு அது, ஜூவல்லரி என்றே தெரியாது. வழக்கம் போல கடந்த 20.10.2020-ல் ஜூவல்லரியைப் பூட்டி விட்டு ஊழியர்களும் உரிமையாளரும் சென்றனர். 21-ம் தேதி காலையில் ஜூவல்லரியைத் திறக்க ஊழியர்கள் வந்நதனர். அப்போது, ஜூவல்லரியின் கிரீல் கேட் உடைக்கப்பட்டு தங்கம், வைரம், வெள்ளி நகைகள் கொள்ளைபோயிருந்தது தெரியவந்தது. அதைப்பார்த்து உரிமையாளர் தருண் குமார் அதிர்ச்சியடைந்தார். பின்னர் கொள்ளைச் சம்பவம் குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

வெங்கடேசன்

2 கிலோ எடையுள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள் கொள்ளைப் போனதால் சம்பவ இடத்துக்கு துணை கமிஷனர் ஹரிகிரன் பிரசாத், உதவி கமிஷனர் கலியன் மற்றும் போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களின் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. கொள்ளைச் சம்பவம் தொடர்பாக உதவி கமிஷனர்கள் கலியன் (தி.நகர்), ரூபன் பிராங்கிளின் (அசோக்நகர்), மகிமைவீரன் (வளசரவாக்கம்) ஆகியோர் தலைமையில் 35 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

Also Read: சென்னை: காதலி வீட்டில் நகைகள்- தி.நகர் ஜுவல்லரி கொள்ளையன் சிக்கியது எப்படி?

இந்தக் கொள்ளை தொடர்பாக தனிப்படை போலீஸார் 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது 2 பேர் எனத் தெரியவந்தது. கொள்ளை நடந்த மூசா தெருவுக்குள் பைக்கில் 2 பேர் வரும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. பைக்கில் வந்த இருவரில் ஒருவர், அங்கு இறங்கிக் கொள்ள இன்னொருவர் பைக்கில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதையும் போலீஸார் சிசிடிவி மூலம் கண்டறிந்தனர். மேலும் ஜூவல்லரிக்குள் இருந்த சிசிடிவியில் ஒருவர் மட்டும் நகைகளைக் கொள்ளையடிப்பதும் பதிவாகியிருந்தது.

கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் பாபு, துணை கமிஷனர் ஹரிகிரன் பிரசாத்

கொள்ளையடித்தவனின் முகம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளில் சரியாகத் தெரியவில்லை. அதனால் கொள்ளையனை அடையாளம் காண்பதில் தனிப்படை போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் ஒவ்வொரு சிசிடிவிக்களின் பதிவுகளை போலீஸார் பொறுமையாக பார்த்தனர். அப்போது ஜூவல்லரிக்குள் இருந்த ஒரே ஒரு சிசிடிவி கேமராவில் மட்டும் பாக்கெட்களில் இருந்த தங்க நகைகளை பிரித்தெடுப்பதற்காக கொள்ளையன், தான் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றும் காட்சி பதிவாகியிருந்தது. அதனால் போலீஸார் நிம்மதியடைந்தனர். அந்த சிசிடிவியில் கொள்ளையனின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அதை வைத்துதான் இந்த வழக்கில் போலீஸார் துப்பு துலக்கினர். அதன்மூலம் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து தங்கம், வெள்ளி, வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``தி.நகர் கொள்ளைச் சம்பவத்தில் இரண்டரை கிலோ தங்கம் மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளைபோனதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதனால் கொள்ளையர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதில் சிசிடிவி கேமரா பதிவை ஒரு தனிப்படையும் நகைக்கடையில் வேலைபார்த்தவர்கள் குறித்து இன்னொரு தனிப்படையும் கொள்ளை நடந்த விதம் குறித்து மற்றொரு தனிப்படையும் தனித்தனியாக விசாரணை நடத்தின.

கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் பாபு, துணை கமிஷனர் ஹரிகிரன் பிரசாத்

ஜூவல்லரிக்குள் நுழைந்த கொள்ளையன் தொப்பி, மாஸ்க் மற்றும் கையுறை அணிந்திருந்தான். மேலும் பூட்டுக்களை இரும்புக்கம்பியால் உடைத்து உள்ளே சென்றிருந்தான். கையுறை பயன்படுத்திக் கொள்ளை அடித்ததால் கைரேகைகள் கிடைக்கவில்லை. சில விநாடிகள் பதிவான கொள்ளையனின் முகத்தைக் கொண்டு விசாரணையை தொடங்கினோம். அப்போது கொள்ளையன் வைத்திருந்த மீசை மற்றும் அவரின் முக அளவீடுகளைக் கொண்டு விசாரித்தபோது அது, 50-க்கும் மேற்பபட்ட கொள்ளை வழக்கில் தொடர்புடைய கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷ் எனத் தெரிந்தது. ஆனால் அவரைத் தேடி போலீஸார் கோடம்பாக்கத்துக்குச் சென்றபோது அங்கு சுரேஷ் இல்லை. தலைமறைவாக இருந்த சுரேஷ், கொள்ளையடித்த நகைகளை விற்க முயன்றபோது திருவள்ளூர் போலீஸாரிடம் சிக்கிக் கொண்ட தகவல் எங்களுக்கு கிடைத்தது.

இதையடுத்து திருவள்ளூர் போலீஸார் கொடுத்த சில தகவல்களின் அடிப்படையில் சுரேஷின் காதலியான திருவள்ளூர் புட்லூரைச் சேர்ந்த கங்காதேவியிடம் விசாரித்தோம். அப்போது கொள்ளையடித்த நெக்லஸை கங்காதேவிக்கு சுரேஷ் பரிசாகக் கொடுத்தது தெரியவந்தது. மேலும், கொள்ளை சம்பவத்தில் சுரேஷ் மற்றும் அவரின் கூட்டாளியான சைதாப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் என்கிற அப்பு, வெங்கடேசனின் நண்பர் அமல்ராஜ் விஷ்ணு ஆகியோருக்கு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

கங்காதேவி

Also Read: சென்னை: `நகை, பணத்தைக் கேட்டால் ரத்தம் கக்கிச் சாவாய்!’ - பெண் மந்திரவாதி சிக்கிய பின்னணி

இதையடுத்து வெங்கடேசன், அமல்ராஜ், கங்காதேவி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.4 கிலோ எடையுள்ள தங்கம், வைர நகைகள், 11 கிலோ எடையுள்ள வெள்ளிகட்டிகள் ஆகியவற்றையும் பைக், இரும்பு கம்பிகளைப் பறிமுதல் செய்துள்ளோம். சிறையிலிருக்கும் கொள்ளையன் சுரேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.

கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை இரவு பகல் பாராமல் தேடிக் கண்டுபிடித்த தனிப்படை போலீஸாரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் பாபு ஆகியோர் பாராட்டியுள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-notorious-thief-over-t-nagar-robbery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக