Ad

திங்கள், 9 நவம்பர், 2020

சென்னை: காதலிக்கு கொடுத்த நகை, பணம்! - தொழிலதிபரின் கடத்தல் நாடகம்; காட்டிக் கொடுத்த சிசிடிவி

வடசென்னையைச் சேர்ந்தவர் அமர்நாத். இரும்பு வியாபாரி. இவர், கடந்த 4-ம் தேதி மனைவியிடம் செல்போனில் பேசினார். அப்போது தன்னை சிலர் காரில் கடத்தி, 2 லட்சம் ரூபாய், 2 தங்க மோதிரங்கள், கார் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாகக் கூறினார். மேலும் செல்போனைப் பறித்த அந்தக் கும்பல், வங்கி கணக்கிலிருந்து 40 ஆயிரம் ரூபாயையும் எடுத்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.

சிசிடிவி

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அமர்நாத்தின் மனைவி, திருமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸார் உடனடியாக அமர்நாத்தைக் கடத்திய கும்பல் குறித்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, அமர்நாத் ஒரு காரில் ஏறிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அடுத்து அவரின் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட 40 ஆயிரம் பணம் குறித்து விசாரித்தனர். அப்போது அமர்நாத்தின் வங்கி கணக்கிலிருந்து ஒரு பெண்ணின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அமர்நாத்திடம் விசாரித்தனர். அப்போது சம்பவம் நடந்தபோது அமர்நாத்துடன் பிரபு, விக்னேஷ் மற்றும் ஒரு பெண் ஆகியோர் இருந்துள்ளனர். அவர்களைக் கண்டுபிடித்த போலீஸார் மூன்று பேரிடமும் விசாரித்தனர். விசாரணையில் அமர்நாத்தின் கடத்தல் நாடகம் வெளியில் தெரிந்தது. அதோடு இன்னொரு உண்மையையும் கேள்விப்பட்ட போலீஸாரும் அமர்நாத்தின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.

பணம்

Also Read: கரூர்: சிறுவன் காரில் கடத்தல்; ஒரு மணி நேரத்துக்குப் பின் விடுவிப்பு! - வடமாநிலக் கும்பல் கைவரிசையா?

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தொழிலதிபர் அமர்நாத்துக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் பெண் ஒருவருக்கும் நட்பு இருந்துள்ளது. அந்தப் பெண்ணை அமர்நாத் காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் அவரிடமிருந்து 6 சவரன் தங்க நகைகளை அமர்நாத் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதை அமர்நாத் திரும்பக் கொடுக்கவில்லை. தங்க நகைகளைக் கேட்டு அந்தப் பெண் அமர்நாத்துக்கு தொல்லைக் கொடுத்ததால் வேறுவழியின்றி கையில் அணிந்திருந்த இரண்டு தங்க மோதிரங்கள், 40 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை அமர்நாத் கொடுத்துள்ளார். அதை மனைவியிடம் மறைக்கத்தான் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்" என்றனர்.

இதையடுத்து போலீஸார் அமர்நாத் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவரை எச்சரித்து அனுப்பினர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-businessman-kidnap-drama-found-with-the-help-of-cctv

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக