Ad

வியாழன், 26 நவம்பர், 2020

சர்ச்சைப் பேச்சு; எடிட் செய்யப்பட்டதா மா.செ-வின் குரல்... திருச்சி தி.மு.க-வில் நடப்பது என்ன?

திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக இருப்பவர் காடுவெட்டி தியாகராஜன். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் காவல்துறையினரை மிகத் தரக்குறைவாக அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஸ்டாலின், கருணாநிதி

இந்தப் பேச்சு இரு சமுதாயத்தினருக்குள் கருத்து மோதலாக சமூக வலைதளங்களில் வெடித்திருக்கும் நிலையில், `சாதிய மோதலாக உருவெடுக்குமோ’ என்ற அச்சம் திருச்சியில் நிலவிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமே தி.மு.க-வினர்தான் என்றும், இவர்களின் உட்கட்சிப் பூசலால் சாதிய வன்முறைகளைத் தூண்டிவிடலாமா என்றும் ஆதங்கப்படுகிறார்கள் திருச்சிவாழ் பொதுமக்கள்.

காதல் விவகாரப் பிரச்னையைத் தீர்த்துவைக்கக் கோரி சுரேஷ் என்பவர் தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜனிடம் போனில் பேசியிருக்கிறார். அதற்கு அவர், குறிப்பிட்ட சமுதாயப் பெண்களையும், காவல்துறையினரையும் கடுமையான வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.

தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு - அன்பில் மகேஷ்

இந்த விவகாரத்தால், காடுவெட்டி தியாகராஜன் மீது வி.ஏ.ஒ தனலட்சுமி காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதையடுத்து அந்தச் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஹரிஹரன்

இது தொடர்பாக. வெள்ளாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஹரிஹரன் பிள்ளையிடம் பேசினோம்.``ஒரு பொறுப்பிலிருக்கும் முக்கியஸ்தர், ஒரு சமூகத்தை மட்டுமல்லாமல், பெண்களையும் காவல்துறையையும் மிகத் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். அவர் சார்ந்த கட்சித் தலைமையும் அவரைக் கண்டிக்கவில்லை. இந்தநிலையில்தான், நான் தி.மு.க மா.செ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் புகார் கொடுத்தேன்.

Also Read: திருச்சி: அமித் ஷா வீடு முற்றுகை திட்டம்... அய்யாக்கண்ணுவை வீட்டிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறை!

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து கே.என்.நேருவுக்கும் ஸ்டாலினுக்கும் புகார் அனுப்பினோம். இந்தநிலையில், எங்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி, தெற்கு மாவட்டச் செயலாளர் குமார், மாநகர் மாவட்டச் செயலாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் காடுவெட்டி தியாகராஜனைக் கண்டித்துக் தொடர் போராட்டங்கள் நடத்தினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்ததோடு, காடுவெட்டி தியாகராஜனுக்கு நெருக்கடியை அதிகரித்தது.

தி.மு.க மா.செ காடுவெடி தியாகராஜன்

தொட்டியத்தில், ``என்னுடய பேச்சால் பலரோட மனது புண்பட்டிருக்கும்னு நினைக்கிறேன். நீங்க என்னை மன்னிச்சிருங்க. என்னோட பேச்சை யாரோ திரித்து வெளியிட்டிருக்கிறார்கள்” என்று காடுவெடி தியாகராஜன் மன்னிப்பு கோரினார். கே.என்.நேரு, வைரமணி உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்திலிருந்தனர். அத்தோடு இந்தச் சம்பவமும் முடிந்துவிட்டது. ஆனால், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிலர், இதை சாதிப் பிரச்னையாகத் தூண்டிவிடப் பார்க்கிறார்கள். சுமுகமாக இருக்கக்கூடிய இரு சமுதாயத்துக்குள் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்.

கே.என். நேரு

அவர் தவறாகப் பேசியதால் மன்னிப்பு கேட்டாரே தவிர, எந்த உள்நோக்கமும் இல்லை என்று மா.செ தெரிவித்திருக்கிறார். ஆனால், ஒரு சிலர் சமூக வலைதளங்களில் எங்களுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து சாதிய மோதலை உண்டாக்கும் சூழலில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மோதலை உண்டாக்குபவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பின்னணியில் தி.மு.க-வினர் இருப்பதாகவும் சந்தேகம் ஏற்படுகிறது” என்றார்.

தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜனிடம் பேசினோம், ``நான் சத்தியமாக அந்த மாதிரியெல்லம் பேசவில்லை. உட்கட்சிப் பூசலால், என்னோட பேச்சை எடிட் செய்து பரப்பியிருக்கிறார்கள்.

மா.செ காடுவெட்டி தியாகராஜன்

இந்த வேலையை யார் செய்தார்கள் என்று எனக்கு நல்லாவே தெரியும். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போகிறேன். இன்னும் சில நாள்களில் பதவி போயிரும்னு சொல்றாங்க. இந்தப் பதவி கே.என்.நேரு அண்ணன் எனக்குப் போட்ட பிச்சை. பதவி இல்லையென்றாலும், அவருக்கும் கட்சிக்கும் உண்மையா இருப்பேன்” என்றார் தழுதழுத்த குரலில்.

தொடர்ந்து, திருச்சி தி.மு.கவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம். ``காடுவெட்டி தியாகராஜன் பேசியது மிகத் தவறு. அதை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இன்னும் சில நாள்களில் தலைமை, அவர் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. இந்தநிலையில், இந்தப் பிரச்னையைக் கிளப்பிவிடுவதே தி.மு.க நிர்வாகிகள்தான். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ காத்தமுத்துவின் மகன் சுந்தர்தான் பின்னணியிலிருந்து இயக்கிக்கொண்டிருக்கிறார். இவர் ஒன்றிய கவுன்சிலராக இருந்துவருகிறார். காடுவெட்டி தியாகராஜன், சுந்தர் இருவரும் எலியும் பூனையும் மாதிரி. சுந்தர், மணல் கடத்தலில் பெரிய அளவில் சம்பாதித்தவர். பணத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று ஒன்றியச் செயலாளர் பதவிக்காக மறைமுகமாகக் காய்நகர்த்திக்கொண்டிருக்கிறார். இதற்கு மா.செ காடுவெட்டி தியாகராஜன் செக் வைப்பதால் நீயா... நானா... என்ற போட்டி பல வருடங்களாக நிலவிக்கொண்டிருக்கிறது.

ஸ்டாலின்

இந்தநிலையில் முசிறி தொகுதியின் மீது எப்போதுமே கண்வைத்திருக்கும் இவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியை தி.மு.க சார்பாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், இதற்கு காடுவெட்டி தியாகராஜன் செக் வைத்திருக்கிறார். இந்தநிலையில் அவரை காலி செய்ய என்ன வழி என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், இந்த விவாகரத்தைக் கையில் எடுத்திருக்கிறார் சுந்தர். அவர் பேசிய ஆடியோவை எடிட் செய்து இணையதளங்களில் பரப்பிவிட்டதற்குக் காரணம் சுந்தரும் அவரது ஆதரவாளர்கள் சிலரும்தான் என்கிறார்கள். இதில், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள் சாதராணமாகச் செய்த வேலை, தற்போது இரு சமுதாயங்களுக்குள் பெரிய சாதிய மோதலையே உருவாக்கும் நிலைக்குப் போய்விட்டது. இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து, `தி.மு.க., குறிப்பிட்ட சாதிகளுக்கு எதிரான கட்சி’ என்ற பிம்பத்தை அ.தி.மு.க-வினர் உருவாக்கிவருகிறார்கள்” என்றார்.

Also Read: திருச்சி: `வாரிசு’ வெல்லமண்டி Vs பரஞ்ஜோதி; அப்செட் மா.செ! -முதல்வர் விசிட்டும் கட்சி சச்சரவுகளும்!

தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் சுந்தரிடம் பேசினோம்.``அவங்க சொல்வது முற்றிலும் பொய். நானும் அவரும் ஒன்றாகத்தான் அரசியலில் ஈடுபட்டோம். எங்களுக்குள் நடந்த ஒரு சில கருத்து மோதல்களால் மூணு வருஷமா பேசிக்கொள்வதில்லை.

சுந்தர்

காடுவெட்டி தியாகராஜனின் இயல்பே அப்படித்தான். எல்லோரிடமும் இப்படித்தான் நடந்துகொள்வார். அவர் யாரிடமோ பேசி பிரச்னையில் சிக்கியதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்... யாரோட முதுகிலும் குத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கிச் செல்வேன்” என்று முடித்துக்கொண்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/party-officials-speech-irks-controversy-in-trichy-dmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக