நேற்று, மதுரை அருகே குடிமராமத்துப் பணியை நேரில் சென்று ஆய்வுசெய்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
``மதுரையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ரூ.105 கோடி மதிப்பில் பல்வேறு கண்மாய்கள் தூர்வாரப்பட்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக 90 லட்ச ரூபாய் மதிப்பில் பரவை கண்மாய் தற்போது தூர்வாரப்பட்டு, அதில் நீர் நிரம்பியுள்ளது.
குடிமராமத்துப் பணியில் சிறந்து விளங்கும் தமிழக முதல்வரை, விவசாயிகள் இரண்டாவது கரிகால சோழனாகப் போற்றிவருகிறார்கள்.
புயல் வழிதடத்திலுள்ள 12 மாவட்டங்களில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி நியாயவிலைக் கடைகள் மூலம் பொருள்கள் வழங்க, பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தி.மு.க-வினர் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதற்காக ஏதாவது பேசி வருகிறார்கள்" என்றவரிடம்,
``குடிமராமத்துப் பணிகளில் ஊழல் நடைபெறுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்களே..." என்ற கேள்வி கேட்டதற்கு,
``தடுப்பணைகள் மற்றும் மராமத்துப் பணிகளுக்கு ஆன்லைன் மூலமாகவே ஒப்பந்தங்கள் விடப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன’’ என்றவர், ``தங்க தமிழ்ச்செல்வன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாய்தவறி அ.தி.மு.க ஆட்சி அமையும் என உண்மையைக் கூறியிருக்கிறார். எழிலகத்துக்கு இதுவரை எந்த முதல்வரும் வந்ததில்லை. நம்முடைய முதல்வர் வந்து நேரில் ஆய்வு செய்திருக்கிறார்.
தி.மு.க நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது. முதலில் ஸ்டாலின் மட்டும் நாடகமாடிக்கொண்டிருந்தார். தற்போது மகன் உதயநிதி ஸ்டாலினும் நாடகமாடிக்கொண்டிருக்கிறார். அப்பனுக்கு தப்பாத பிள்ளையாக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்.
அரசின் திட்டங்களைக் குறை கூறுவதை தி.மு.க-வினர் வாடிக்கையாகக்கொண்டு நாள்தோறும் ஊடகங்களில் பேசிவருகிறார்கள்.
`கொரோனா பரவுகிறது’ எனக் கூறிவிட்டு அவர்களே ஊர்வலம் செல்கிறார்கள். கைதுசெய்தால் போராட்டம் நடத்துகிறார்கள். தில்லுமுல்லு செய்து, நாடகம் நடத்தி, மக்களைக் கவர நினைக்கிறார்கள். அது எப்போதும் நடக்காது" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/sellur-raju-speech-against-udhayanithi-and-dmk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக