Ad

புதன், 4 நவம்பர், 2020

ஒருமையில் அழைப்பதும் சுயமரியாதை சீண்டல்தான்... இதை எப்போது உணரும் சமூகம்?!

மிருகத்துக்கும் மனிதனுக்கும் இருக்கும் உணர்வு வித்தியாசம், `சுயமரியாதை'. கையில் காசு, பணம் இல்லாதபோதும் மனதில் செருக்கு ஊட்டுகிற விஷயம், அவரின் திறமை மீதான நம்பிக்கை. பரபரப்பான உலகில் ஒருவர் தன்னுடைய சுயமரியாதையைத் தக்கவைத்துக்கொள்ள நிறைய போராட வேண்டியிருக்கிறது.  இன்னும் சொல்ல வேண்டுமானால் சுயமரியாதையை எதிர்பார்ப்பவர்களை வேற்று கிரகவாசிகளாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டது இந்தச் சமூகம். அன்றாட நிகழ்வுகளில் எங்கெல்லாம் மரியாதைக்கு இழுக்கு ஏற்படுகிறது என்பதற்கான அலர்ட்தான் இந்தக் கட்டுரை.

`என்னை இனிமேல் யாரும் அவன், இவன்'னு கூப்பிடக்கூடாது. பெயரைச் சொல்லிப் பேசினா போதும்...'' - கடந்த சில நாள்களுக்கு முன்பு `பிக்பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளர் பாலாஜி கிளப்பிய இந்தச் சர்ச்சை நினைவிருக்கலாம். ஒருமையில் அழைக்கும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டவர்கள், அதன் வெளிப்பாடாகத்தான் அப்படி அழைக்கிற நபரை மன முதிர்ச்சியற்றவராகப் பார்க்கும் மனநிலையையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். அது தேவையில்லை என்பதே பாலாஜியின் வாதமாகவும் இருந்தது. சரி, அது இருக்கட்டும். இனி என் அனுபவத்துக்கு வருகிறேன்.

Traffic Police checking

நேற்று காலை 11 மணி. வண்டிகளின் கீச் ஒலிகளுக்கு நடுவில் டூவீலர் ஓட்டிச் சென்ற என் வண்டியை, நிறுத்தி, ``ஏமா, லைசென்ஸ் வெச்சுருக்கியா? இன்ஷூரன்ஸ் காப்பி காட்டு" என எந்தக் கூச்சமும் இல்லாமல் ஒருமையில் பேசத் தொடங்கினார். டிராஃபிக் போலீஸ் ஒருவர். மனது முழுக்க ஆத்திரம். பொதுப்பணியில் இருக்கும் சிலர், மற்றவர்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கும் உரிமையை அவர்களே எடுத்துக்கொண்டார்கள் போலும். பதவிக்கு மக்கள் மரியாதை கொடுத்தாலும், பதவியில் இருப்பவர்கள் மக்களை மதிக்கத் தேவையில்லை என்பதுதான் இங்கு எழுதப்படாத விதியாக இருக்கிறதே என நொந்துகொண்டு, ஆதாரங்களைக் காட்டிவிட்டு நகர்ந்தேன். அடுத்த சில நொடிகளில் ஒரு காரை நிறுத்திய அதே போலீஸ், ``சார், இன்ஷூரன்ஸ் காப்பி எடுங்க" என பவ்யமாகக் கேட்டார். அப்படியானால் ஒருவரை மரியாதை குறைவாக நடத்துவது அவரது பழக்கம் அல்ல, தோற்றத்தை வைத்து முடிவு செய்கிறார் என்பது புரிந்தது. ஒருவரின் சுயமரியாதையை இந்தச் சமூகம், பொருளாதாரம் அல்லது பாலின அடிப்படையில்தான் நிர்ணயிக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.

வெள்ளையாக இருப்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பது போல, கறுப்பாக இருப்பவர்களோ, டூவீலரில் செல்பவர்களோ, வறுமையில் இருப்பவர்களோ, பெண்களோ சுயமரியாதையை எதிர்பார்க்க மாட்டார்கள் என்ற எண்ணம்தான் ஒருவரை முதல் சந்திப்பில்கூட ஒருமையில் அழைக்கும் துணிச்சலைத் தருகிறதோ?

பொதுவாக, ஒருவரை ஒருமையில் அழைப்பதும் ஒரு வகையான சுயமரியாதை சீண்டல்தான். மதுரைக்காரர்கள் ஒருவரைக் குறிக்க அவைங்க, இவைங்க என வட்டார வழக்கைப் பயன்படுத்துவது போல், ஒருமையில் அழைப்பதும் இயல்பான ஒன்று என்று கடந்துவிட முடியாது. ஒருவரை நீ, வா, போ, அவன், இவன் என்று அழைப்பதன் பின்னணியில் அதிகார சரடு, சாதியப் பாகுபாடுகள், திறமை மதிப்பிடல், பெண்ணிய அடிமைத்தனம் எனக் கண்ணுக்குத் தெரியாமல் ஆயிரம் குறியீடுகள் ஒளிந்து கிடக்கின்றன.

ஐ.டி நிறுவனங்களின் கலாசாரப்படி, அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரையும் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும். அங்கு வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்படுகிறார்கள். மேலும், ஆங்கிலம் பேசப்படுவதால் ஆண் என்றால் `ஹீ' என்றும் பெண் என்றால் `ஷீ' என்றும் பொதுவாக அழைப்பதால் அங்கு மரியாதை ஏற்றத்தாழ்வுகள் உரையாடல்களில் இருப்பதில்லை. அது அந்த மொழியின் சாதகம். ஆனால், ஒருவரை மரியாதையாக அழைக்க அவர்கள் / இவர்கள் என்றும், மரியாதை குறைவாகக் குறிப்பிட அவன் / இவன் என்றும் தமிழில் வார்த்தைகள் இருக்கும்போது ஐ.டி நிறுவன கலாசாரத்தை முழுவதுமாக இங்கு கடைப்பிடித்துவிட நினைப்பது எப்படிச் சாத்தியம் ?

Representational Image

ஆனாலும், அந்தக் கலாசாரத்தை இங்குள்ள நிறுவனங்களிலும் சிலர் நடைமுறைப்படுத்தி சகபணியாளர்களை ஒருமையில் அழைக்கிறார்கள். அதே உரிமையை அவரைவிட வயதிலும் அனுபவத்திலும் குறைந்த ஒரு நபருக்கு அவர்கள் கொடுப்பது கிடையாது. இதை எதார்த்தம் என்று எப்படிக் கடந்து செல்வது. வயதைவிட திறமைக்கே ஒரு நிறுவனம் முக்கியத்துவம் கொடுக்கிறது. வயதில் மூத்தவர் தன் அனுபவத்தை, தனக்கு மற்றவர்களின் மீது இருக்கும் உரிமை என்றோ, `உனக்கு இந்தத் துறையில் இருக்கும் எல்லாவற்றையும் நான்தான் கற்றுத் தரப்போகிறேன்' என்ற அதிகார மீறலாகவோ பார்ப்பதுகூட ஒரு வகையான சுயமரியாதை சீண்டல்தான். சுமுக உறவுகள் கருதி நம்மில் பெரும்பாலானோர் இதைப் பொருட்படுத்துவது கிடையாது.

காரணங்கள் எல்லாம் வேண்டாம், `வயது குறைவாக இருந்தாலும், துறைக்குப் புதிது என்றாலும் மரியாதை கொடுத்து, மரியாதை வாங்குங்கள்' என்று கோரிக்கைகள் வைப்பவர்களை அன்பு அல்லது வயது முதிர்வு போன்ற வட்டத்துக்குள் அடக்கி செக் வைத்து விடுகிறார்கள். நியாயமற்ற இந்தக் கோட்பாடுகளையெல்லாம் உடைத்து சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கிளர்ந்து எழுபவர்களை அழைக்கத்தான் இருக்கவே இருக்கிறது `திமிர் பிடித்தவன்' `சிடுமூஞ்சி', `ஆட்டிடியூட்' போன்ற வார்த்தைகள். தன்மானத்துக்குத் தலைக்கனம் எனப் பட்டம் கட்டி, நம்மை மற்றவர்களிடம் எதிரியாகக் காட்ட ஒரு கூட்டம் நம்கூடவே இருக்கும்.

பெண்

மரியாதையை எதிர்பார்ப்பவர்கள் பெண்கள் எனில், அவர்களை தண்டனைக்குரியவர்களாகவே இந்தச் சமூகம் சித்திரித்து வைத்திருக்கிறது. பெண்களை அது, இது என அஃறிணை குறியீடுகளாக்கி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. வீட்டுக்குழந்தைகளிடம் ஆரம்பித்து, அலுவலகம்வரை எந்த இடமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. வயது, பதவி என எந்தப் பாரபட்சமும் பார்க்காமல், பெயரைச் சொல்லி, ``அது வந்துருச்சா?" எனக் கேட்டுவிட்டு இயல்பாகக் கடந்து செல்வார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவாக வைத்த பாரதி வந்து குரல் கொடுத்தாலும், இந்த மனநிலை உள்ளவர்களை மாற்றுவது சிரமம் என்றே தோன்றுகிறது.

`நான்தான் மேலே’ என்ற அகங்காரத்தை உடைத்தெறியும் போதுதான் நாம் சகமனிதனை மனிதனாக மதிக்கிறோம். எதிரில் இருப்பவர்களுக்கும் நம்மைப் போன்று உணர்வுகள் இருக்கின்றன என்பதை உணரும் நொடியில்தான் நாம் மனிதர்களாகிறோம். உங்களின் சுயமரியாதை சீண்டப்படும் இடத்தில் எந்தக் காரணத்துக்காகவும் உங்களின் சுயரூபத்தைக் காட்ட மறந்து விடாதீர்கள். பின் எப்போதும் முதுகெலும்பு உடைந்த உயிரினமாய் வாழ வேண்டியிருக்கும்.

உணர்வுகளுக்கு உயிர் கொடுப்போம். 

இது போன்று நீங்கள் சந்தித்த சுயமரியாதை சீண்டல்களையும், அவற்றைக் கையாண்ட விதத்தையும் கமென்ட் பாக்ஸில் பகிருங்கள்.


source https://www.vikatan.com/lifestyle/women/why-respectful-communication-in-workplace-is-matters

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக