உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பதவியேற்கவுள்ளார் ஜோ பைடன். 1992-க்குப் பிறகு அதிபர் பதவியிலிருந்து கொண்டு தேர்தலைச் சந்தித்து, அமெரிக்க அதிபருக்கான மறுதேர்தலில் ஒருவர் தோல்வியடைவது இதுவே முதல்முறை. அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் டொனால்டு ட்ரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரையிலும் எந்தவொரு அதிபர் வேட்பாளரும் பெறாத அளவு, மொத்தம் 7.4 கோடி வாக்குகளைப் பெற்றிருக்கிறார் பைடன்.
Also Read: அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படுவது ஏன்? - சுவாரஸ்யப் பின்னணி!
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுற்று, மூன்று நாள்களுக்கு மேல் முடிவுகள் வெளியாகாமல் சில மாநிலங்களில் இழுபறி நீடித்தது. இறுதியில், 290 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்று அமெரிக்க அதிபராக வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைக்கவிருக்கிறார் ஜோ பைடன். இந்த வெற்றிக்குக் காரணம் ட்ரம்ப்பின் மீதிருந்த அதிருப்தியா... இல்லை ஜோ பைடன், கமலா ஹாரிஸின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையா என்பது குறித்து விரிவாக அலசுவதுதான் இந்தக் கட்டுரை. அதற்கு முன்பாக ஜோ பைடனின் பர்சனல் பக்கங்களையும் அவர் கடந்து வந்த அரசியல் பாதையையும் சற்று அலசலாம்!
வறுமை நிறைந்த இளமைப் பருவம்!
1942-ம் ஆண்டு பென்சில்வேனியாவில் உள்ள ஒரு எளிய குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்தார் ஜோஸப் பைடன். பைடன் பிறப்பதற்கு முன்பு நல்ல வசதியோடு இருந்த அவரது குடும்பம், அவர் பிறந்த பின்னர், சில காரணங்களால் வறுமையைச் சந்தித்தது. பைடனின் தந்தை பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலைச் செய்து வந்தார். `எத்தனை முறை கீழே விழுந்தாலும் எழக் கூடியவர் என் தந்தை' என்பதுதான் பைடன், தன் தந்தை குறித்து அடிக்கடி சொல்வது. தன் தந்தையிடமிருந்து தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் கற்றுக் கொண்டு வலிமையானவராக வளர்ந்தார் பைடன்.
சிறு வயதில் திக்கிப் பேசக்கூடியவராக இருந்த பைடனை அவரின் நண்பர்கள் பலரும் கிண்டல் செய்வார்களாம். மிக நீண்ட கவிதைகள், கட்டுரைகளைச் சத்தமாகச் சொல்லிப் பார்த்து தன் திக்கிப்பேசும் பழகத்தைத் தானே மாற்றிக் கொண்டார் பைடன்.
தான் படித்த பள்ளியின் ஜன்னல்களையும் கதவுகளையும் சுத்தம் செய்வது, மைதானத்திலிருக்கும் புற்களை அகற்றுவது எனச் சிறு சிறு வேலைகளைச் செய்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை தன் கல்விக்காகச் செலவிட்டவர் பைடன்.
பைடன் படிப்பில் முதல் மாணவராக இருந்ததில்லை. ஆனால், தான் பயிலும் வகுப்புக்கு லீடராக செயல்பட்டு அப்போதே தலைமைப் பண்பு கொண்டவராக விளங்கினார். 1961-ம் ஆண்டு டெலாவர் (Delaware) பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் பாடப்பிரிவில் சேர்ந்தார். பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணியிலும் சிறந்து விளங்கினார். கல்லூரியில் படிக்கும் போதுதான் அரசியல் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் பைடன். 1965-ல் சட்டக் கல்லூரியில் சேர்ந்தவர், 1966-ல் தன் கல்லூரிக் காதலி நீலியாவை (Neilia) திருமணம் செய்தார். 1968-ல் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். பின்னர், தன்னை ஜனநாயகக் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
சொந்த வாழ்வில் நடந்த சோகச் சம்பவம்!
1972-ம் ஆண்டு ஜனநாயகக் கட்சி சார்பில் அமெரிக்க செனட் சபை உறுப்பினருக்கான தேர்தலில் பலம் மிகுந்த குடியரசுக் கட்சி வேட்பாளர் கேலப் பாக்ஸ் (Caleb Boggs) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார் பைடன், வாக்கு சேகரிப்பதற்கான பண பலமும் ஆள் பலமும் இல்லாதவர் என்பதால் குடியரசுக் கட்சியினர் அலட்சியமாக இருந்தனர். தன் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு வாக்கு சேகரிப்பில் இறங்கினார் பைடன். பைடனின் தந்தை, தாய், தங்கை, தம்பிகள், மனைவி என அனைவரும் அயராது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதன் விளைவாக, மிக இளம் வயதிலேயே செனட் உறுப்பினராகத் தேர்வானார் பைடன்.
செனட் சபையின் உறுப்பினரான மகிழ்ச்சியைக் கொண்டாடி முடிப்பதற்குள் பைடன் வாழ்க்கையில் மிகப் பெரிய துயரச் சம்பவம் அரங்கேறியது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக 3 குழந்தைகளுடன் ஷாப்பிங் சென்றிருந்தார் பைடனின் மனைவி நீலியா. அப்போது நீலியாவின் காரின் மீது சரக்கு லாரி ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரின் மனைவியும் மகளும் உயிரிழந்தனர். அவரின் மகன்கள் இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
மகன்களை அருகிலிருந்து பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, பதவியேற்புக்கு முன்பாகவே செனட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய நினைத்தார் பைடன். ஆனால், செனட் சபையின் தலைமை உறுப்பினர், பைடனின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாக மருத்துவமனையில் தன் மகன்கள் சிகிச்சை பெற்றுக் கொண்ட அறையிலிருந்தே செனட் உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார் பைடன்.
பின்னர், மகன்களுக்காக டெலாவரிலேயே தங்கிவிட்டார் பைடன். தினமும் டெலாவரிலிருந்து வாஷிங்டனுக்கு ரயில் மூலம் ஒன்றரை மணிநேரம் பயணம் செய்து செனட் சபைக்கான பணிகளைச் செய்துவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார் பைடன். தொடர்ந்து, 36 ஆண்டுக் காலம் செனட் உறுப்பினராகத் தேர்வானார் பைடன். 36 ஆண்டு காலமும் ஆம்ட்ராக் ரயிலிலேயே (Amtrak train) பயணம் மேற்கொண்டு வாஷிங்டனுக்குச் சென்று வந்தார். செனட் உறுப்பினராக இருந்த காரணத்தால், ஆம்ட்ராக் ரயில் சேவைக்குப் பல சலுகைகளைப் பெற்றுத் தந்தார். அதன் காரணமாக இன்றளவும் `ஆம்ட்ராக் ஜோ' என்று பட்டப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார் பைடன்.
1977-ல் ஜில் ட்ரேஸி என்ற ஆசிரியரை இரண்டாவதாக மணம் முடித்தார் பைடன். இவர்கள் இருவருக்கும் பிறந்த பெண்குழந்தையின் பெயர் ஆஷ்லே.
மூன்றாவது முறையில் வெற்றி!
1987-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார் பைடன். அமெரிக்காவில் ஒரு கட்சியைச் சேர்ந்த பலரும், அதிபராகப் போட்டியிட விண்ணப்பிக்கலாம். அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே விண்ணப்பித்தவர்களுக்கு வாக்களித்து அதிபர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வார்கள். 1987-ம் ஆண்டு அதிபர் வேட்பாளருக்காக விண்ணப்பித்து அதற்கான பிரசாரத்தை ஜனநாயகக் கட்சியினரிடம் தொடங்கினார் பைடன்.
Also Read: ஆச்சரியங்களும் விநோதங்களும் நிறைந்த அமெரிக்க அதிபர் தேர்தல்! - ஒரு விரிவான பார்வை #MyVikatan
அந்த சமயத்தில் பைடனுக்கு ஏற்பட்ட தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். மூளையின் ரத்த நாளங்களில் ஏற்பட்ட பிரச்னை கண்டறியப்பட்டு, அதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருந்தாலும், அதன் பக்கவிளைவாக நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. அதற்காக மீண்டுமொரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. 9 மணிநேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில், பைடன் உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலையே இருந்தது. ஆனால், போராடி அதிலிருந்து பிழைத்து வந்தார் பைடன்.
7 மாதங்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் அதிபர் வேட்பாளருக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த பிரசாரத்தில் பைடன் பேசிய பேச்சு வெகுவாக ஜனநாயகக் கட்சியினரைக் கவர்ந்தது. பின்னர், அது பிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவர் நெயில் கின்னாக்கின் (Neil Kinnock) பேச்சைக் காப்பியடித்துப் பேசப்பட்டது தெரியவந்தது. இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டு அதிபர் வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகினார் பைடன்.
அதிலிருந்து 20 ஆண்டுகள் கழித்து 2008-ம் நடைபெறவிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்க முடிவு செய்தார். அதற்காக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதற்கான தேர்தலுக்கு விண்ணப்பித்தார் பைடன். அரசியல் அனுபவம், தெளிவான பிரசாரப் பேச்சுகள் என அனைத்தும் இருந்தும் ஒபாமாவுக்கும் ஹிலாரி கிளின்டனுக்கும்தான் ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனநாயகக் கட்சி சார்பில் நடத்தப்படும் அதிபர் வேட்பாளர் யார் என்பதற்கான தேர்தலில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றார் பைடன். இதன் காரணமாக தாமாகவே முன்வந்து அதிபர் வேட்பாளருக்கான தேர்தலிலிருந்து மீண்டும் விலகினார் பைடன்.
துணை அதிபர் பதவி!
பைடன் அதிபர் வேட்பாளர் தேர்தலிலிருந்து விலகியிருந்தாலும், ஒபாமா அவரின் பேச்சையும் நடவடிக்கைகளையும் உற்றுக் கவனித்து வந்தார். இதன் காரணமாக பைடனை துணை அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டார் ஒபாமா. முதலில் யோசித்த பைடன், பின்னர் ஒபாமாவோடு இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டார். 2008 தேர்தலில், ஜோ பைடனின் செல்வாக்கு காரணமாகவே ஒரு சில மாநிலங்களை ஒபாமா கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து 8 ஆண்டுகாலம் ஒபாமாவோடு துணை அதிபராக இணைந்து பணியாற்றினார் பைடன். அந்தக் காலகட்டத்தில் ஒபாமாவின் அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டார் இவர். ``தன் அரசியல் அனுபவம் மூலம் வெளியுறவுத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டு, பல நாடுகளுடனும் அமெரிக்காவுக்கு நல்லுறவு ஏற்பட காரணமாக இருந்ததவர் பைடன்தான்'' என்கிறார்கள் ஜனநாயகக் கட்சியினர்.
அதிபர் வேட்பாளர் பைடன்!
2015-ம் ஆண்டு பைடன் துணை அதிபராக இருந்த போது அவரது வாழ்வில் மேலுமொரு துயர சம்பவம் நிகழ்ந்தது. பைடனின் இரு மகன்களுள் ஒருவர் மூளைப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அந்த சோகத்திலிருந்து சில காலம் கழித்தே பைடனால் மீள முடிந்தது. அந்தச் சமயத்தில், `2016 அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை' என்று கூறி அரசியலிலிருந்து ஒதுங்கினார் பைடன்.
2016 தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபரானார் ட்ரம்ப். பொது வாழ்விலிருந்து விலகி மிகவும் அமைதியாக வாழ்ந்து வந்த பைடனை, ட்ரம்ப்பின் மோசமான செயல்பாடுகள் மீண்டும் அரசியலுக்குள் இழுத்தன. சமூக வலைதளங்களிலும் ஊடக நிகழ்ச்சிகளிலும் தொடர்ச்சியாக ட்ரம்ப்பின் நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தார் பைடன். இந்த விமர்சனங்களை அடுத்து 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடப் போகிறார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால், ``நான் இன்னும் என் மகனின் இழப்பிலிருந்து மீளவில்லை. அதனால் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை'' என்று சொல்லியிருந்தார் பைடன்.
அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் பைடன். அதில். ``தற்போது அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் என் வாழ்நாளில் பார்க்காதது. 2020 அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப்போகிறேன்'' என்று அறிவித்தார்.
எப்படி ஜெயித்தார் பைடன்?
பைடனுக்கு அரசியல் அனுபவம் அதிகமிருந்தாலும் அவரது வயது மூப்பைக் காரணம் காட்டி `பைடன், அதிபர் வேட்பாளருக்குத் தகுதியானவர் இல்லை' என்ற குரல்கள் அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் ஒலித்து வந்தது. ஆனால், ட்ரம்ப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பல விஷயங்களில் பைடனின் கையே ஓங்கியிருந்தது.
``சிறு வயதிலிருந்த திக்குவாய் பழக்கத்திலிருந்து தானாகவே முயன்று மீண்டது, வறுமையிலிருந்து தன் குடும்பத்தை மீட்டெடுத்தது, அறுவை சிகிச்சையிலிருந்து போராடி உடல் நலம் பெற்றது எனப் பல விஷயங்களிலிருந்து தன் போராட்டக் குணத்தால் மீண்டு வந்தவர் பைடன். இப்போது அமெரிக்கா கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அமெரிக்காவை மீட்டெடுக்க பைடன்தான் சிறந்தவர்'' என்று ஜனநாயகக் கட்சியினர் பிரசாரம் செய்தது பைடனுக்கு அமெரிக்கர்கள் மத்தியில் நற்பெயரை உண்டாக்கியது. அதே நேரத்தில், மாஸ்க் அணியமாட்டேன் என்று சொல்லியதில் தொடங்கி கொரோனா சிகிச்சைக்கு நடுவே காரில் சுற்றியது வரை கொரோனாவை அலட்சியமாகக் கையாண்டார் ட்ரம்ப்.
Also Read: ட்ரம்ப்: அப்போ `மாஸ்க் போட மாட்டேன்'; இப்போ `காரில் சுற்றுவேன்' - கொரோனா சிகிச்சையிலும் அடாவடி!
அதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞரைக் கொலை செய்தார் நிறவெறி கொண்ட அமெரிக்கக் காவல் அதிகாரி ஒருவர். இதைத் தொடர்ந்து #BlackLivesMatter என்கிற ஹேஷ்டேக் உலகம் முழுவதுமே ட்ரெண்டானது. கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவைச் சேர்ந்த முற்போக்கு சிந்தனை கொண்ட வெள்ளை நிறத்தவர்கள் பலரும் குரல் கொடுத்தனர். ஆனால், அந்தச் சமயத்தில்கூட நிறவெறிக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலே இருந்தார் ட்ரம்ப். பைடன் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவின் கீழாகவே துணை அதிபராக எவ்வித ஈகோவும் இன்றி செயல்பட்டார். கறுப்பின பெண்ணான கமலா ஹாரிஸை துணை அதிபராக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் முற்போக்குச் சிந்தனைகள் கொண்டு கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவான கருத்துகளையே பைடன் பேசி வந்தது அமெரிக்கர்கள் பலரையும் கவர்ந்தது.
Also Read: `ஜோ பைடன் அதிபர் இல்லை’; மெலனியா விவாகரத்து?! - தேர்தலுக்குப் பிந்தைய ட்ரம்ப் சர்ச்சைகள்
2012-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஓரினச் சேர்க்கையை எதிர்த்து வந்த பைடன், பின்னர் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களை ஆதரிக்கத் தொடங்கினார். திருநங்கைகளை ராணுவத்திலிருந்து தடைசெய்ததற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைக் கடுமையாகக் கண்டித்தார் பைடன். 2020 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில்கூட ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் திருநங்கைகளுக்குமான உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டங்களைக் கொண்டு வருவதாக உறுதியளித்தார். இதன் மூலமாகவும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பார் பைடன் என்கிறார்கள் அமெரிக்க ஊடகவியலாளர்கள்.
பருவநிலை மாற்றத்துக்கான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது, இளைஞர்கள் மத்தியில் ட்ரம்ப்புக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், தான் வந்தால் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்கிற நம்பிக்கையைத் தனது பிரசாரத்தின் மூலம் அளித்திருந்தார் பைடன்.
பாலியல் வன்கொடுமை, டேட்டிங் வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டம் (Violence Against Women Act-VAWA) 1994-ம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதில், பைடனின் பங்களிப்பு முக்கியமானது. பைடன் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதாலும் துணை அதிபர் வேட்பாளரே ஒரு பெண்தான் என்பதாலும் இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு பெண்கள் ஆதரவு அதிகம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
``நட்பு நாடுகளை உதாசினப்படுத்திப் பேசுவது, தரம் தாழ்ந்து விமர்சிப்பது, பிற்போக்காகச் சிந்திப்பது, அடாவடிகள் செய்வது என்று ட்ரம்ப்பின் மோசமான செயல்பாடுகள் அனைத்தும் அவருக்கு மைனஸாக அமைந்தன. அதற்கு நேர்மாறான கருத்துகளையும் சிந்தனைகளையும் கொண்டவராக பைடன் இருந்தது அவருக்கு ப்ளஸ் ஆக அமைந்திருக்கிறது'' என்பதைப் பதிவு செய்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஜோ பைடன் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு கூடுதலாகச் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.
`` ட்ரம்ப் மீதான அதிருப்தி, வயது அதிகமுடையவராக இருந்தாலும் ஜோ பைடனின் அரசியல் அனுபவம், ஜனநாயகக் கட்சியின் பிரசாரத்தின்போது ட்ரம்ப் அரசு செய்த தவறுகளை மக்கள் மனதில் பதியும்படி எடுத்துரைத்தது, கறுப்பின பெண்ணான கமலா ஹாரிஸை துணை அதிபராக நிறுத்தியது, ட்ரம்ப் கைவிட்டதையெல்லாம் நான் செய்வேன் என்று உறுதியளித்தது ஆகியவைதான் பைடனை அமெரிக்க அதிபராக்கியுள்ளன. ஜனநாயகக் கட்சியின் வெற்றிக்குக் கமலா ஹாரிஸின் பங்கும் மகத்தானது எனலாம். பைடனுக்கு வயது அதிகம், உடல்நலப் பிரச்னைகளும் உள்ளன என்றாலும், கமலா ஹாரிஸ் சுறுசுறுப்பாகச் செயல்படக் கூடியவர் என்று அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கமலா ஹாரிஸின் இயல்பான பேச்சு, போகும் இடங்களில் மக்களுடன் மக்களாக இணைந்து செயல்படுவது எனப் பல விஷயங்கள் ஜனநாயகக் கட்சிக்கு ப்ளஸ் ஆக அமைந்தன.
ட்ரம்ப் ஒரு விநோதமான மனிதர். அதிபருக்கான பண்பு அவரிடம் துளியும் இல்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளையே அலட்சியப்படுத்தினார். அமெரிக்க அதிபர் போலச் செயல்படாமல் தொழிலதிபர் போலவே செயல்பட்டார். இது குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவாக அமைந்தது. ட்ரம்ப் செய்த அடாவடிகளை எல்லாம் நிச்சயம் பைடன் செய்யமாட்டார் என்று அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். ஜோ பைடன் இன்னும் ஆட்சிப் பொறுப்பில் அமரவேயில்லை. ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பின்பு அவர் சிறப்பான ஆட்சி செய்வார் என்றெல்லாம் உத்தரவாதம் தர முடியாது. ஆனால், நிச்சயம் ட்ரம்ப்பைவிடச் சிறப்பாகச் செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை'' என்கிறார்கள் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/international/how-joe-biden-becomes-the-president-of-america
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக