Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

`பணம் இல்லைனா, ஓசியில் ஒரு மூட்டை வெங்காயம் கொடுடா!’ - லாரி ஓட்டுநரைத் தாக்கிய எஸ்.ஐ

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்துவந்த செல்வம் என்பவர் நேற்று மதியம் சைனகுண்டா சோதனைச் சாவடியில் பணியிலிருந்தார். வெளிமாநிலங்களிலிருந்து அந்த வழியாக வந்த வாகனங்களை மடக்கி, கை கூசாமல் கட்டிங் வாங்கியதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் இருந்து விழுப்புரத்துக்கு வெங்காய லோடு ஏற்றிவந்த லாரியையும் மடக்கி ஓட்டுநரிடம் 500 ரூபாய் மாமூல் கேட்டதாகவும் சொல்கிறார்கள். அந்த லாரியை குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் (23) என்பவர் ஓட்டி வந்துள்ளார். கிளீனராக குடியாத்தம் கள்ளூரைச் சேர்ந்த பைரோஸ் (21) உடன் வந்துள்ளார்.

வெங்காயம்

ஓட்டுநர், `தன்னிடம் பணம் இல்லை சார்’ என்று கூறிய பின்னரும், `ஒரு மூட்டை வெங்காயத்தையாவது ஓசியில் கொடுத்திட்டுப் போடா’ என்று சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. வெங்காயத்தையும் தர மறுத்ததால், லாரிமீது வழக்குப் பதிந்து அபராதம் கேட்டிருக்கிறார். `தன்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளபோது, எதற்காக அபராதம் போடுகிறீர்கள்’ என்று கூறி ஓட்டுநர் ‘ரூல்ஸ்’ பேசியதால், ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் அவரைத் தாக்கியிருக்கிறார். இதனை லாரியில் இருந்த கிளினீர் தன் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துகொண்டிருந்தார்.

Also Read: `இனி லஞ்சம் வாங்க மாட்டேன்; ஒருமுறை மன்னிச்சு விட்டுடுங்க!’ - கதறிய அதிகாரி

அதைப் பார்த்து மேலும் ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், லத்தியை சுழற்றி கிளினீர்மீது எறிந்துள்ளார். லத்தி கண்ணில் பட்டதால் கிளினீருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. ஓட்டுநரும், கிளீனரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது உறவினர்களும், அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சியினரும் உடனடியாக அங்கு வந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் செல்வத்தைச் சுற்றிவளைத்து கடுமையாகத் திட்டி தீர்த்துள்ளனர். விவகாரத்தின் வீரியத்தை உணர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க முயன்றுள்ளார். ஆனாலும், அவரை விடாமல் அனைவரும் சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் செல்வம்

தகவலறிந்ததும், குடியாத்தம் டி.எஸ்.பி ஸ்ரீதரன் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. கண்ணில் காயமடைந்த கிளீனர் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெங்காயத்துக்காகத் தாக்குதலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் செல்வமும் ஆயுதப்படைக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து குடியாத்தம் டி.எஸ்.பி ஸ்ரீதரனிடம் கேட்டபோது, ``மாமூல் கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் தகராறில் ஈடுபடவில்லை. லாரிமீது வழக்குப்பதிந்து அபராதம் போட்டுள்ளார். இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஓட்டுநரையும், கிளீனரையும் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தாக்கியுள்ளார். அவரை ஆயுதப்படைக்கு மாற்றியிருக்கிறோம். ஓட்டுநர், கிளீனர் தரப்பிலும் சப்-இன்ஸ்பெக்டர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளனர். விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/crime/vellore-si-attacks-lorry-driver-and-cleaner-over-bribery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக