இயற்கைக்கு எதிராக மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் மனித குலத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியதே! இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுதான் விதையில்லா பழங்கள். இலந்தைப் பழத்தையோ, நாவல் பழத்தையோ கொட்டையோடு விழுங்கிவிட்டு, `வயித்துக்குள்ள செடி முளைச்சிடுமா'ன்னு அப்பாவியாகக் கேட்ட குழந்தைகளின் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போதுள்ள குழந்தைகள் எல்லாம் `எனக்கு சீட்லெஸ் ஃபுரூட்ஸ்தான் புடிக்கும்' என்று கேட்டுச் சாப்பிடத் தொடங்கிவிட்டனர்.
உணவுச் சந்தைகளில் தற்போது விதையில்லாத பழங்களின் வியாபாரம் பெருகிவிட்டது. விதையோடு இருக்க வேண்டிய பழங்கள் ஆக்சின் (auxins), ஜிப்ரலின் (gibberellins) போன்ற தாவர ஹார்மோன்கள் செலுத்தப்பட்டு விதையில்லா பழங்களாக விளைவிக்கப்படுகின்றன. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பிச் சாப்பிடும் இவற்றால் உடலுக்குத் தீங்கு விளையலாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
விதையில்லா பழங்களைச் சாப்பிடுவதால் நம் ஆரோக்கியத்தில் ஏற்படும் கெடுதல்கள் குறித்து இயற்கை மருத்துவர் தீபாவிடம் பேசினோம்.
``இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்களிலும், காய்கறிகளிலும்தான் சத்துக்கள் அதிகம். ஆனால் நம் கவனமும் விருப்பமும் ஹைபிரிட் (Hybrid) செய்யப்பட்டு விளைவிக்கப்படும் பழங்களின் மீதே உள்ளது. நாட்டுக் கமலா பழத்தைவிட ஹைபிரிட் செய்யப்பட்ட ஆரஞ்சு பழத்தை விரும்பி சாப்பிடுகிறோம். விதைகள் அதிகமுள்ள பப்பாளியையும் தர்பூசணியையும் தவிர்த்துவிட்டு ரசாயனங்கள் செலுத்தப்பட்டு தயாரிக்கப்படும் சீட்லெஸ் பழங்களை விரும்பி உண்கிறோம். ஆக மொத்தத்தில் சத்துகளைத் தவிர்த்துவிட்டு சக்கைகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.
நிறத்தாலும் சுவையிலும் கவரப்பட்டு இதுபோன்ற பழங்களை உண்ணும்போது உடலுக்கு பல்வேறு விதமான தீங்குகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, விதையில்லாத பழங்கள். இவை மக்களிடையே பெருகிவரும் சோம்பேறித்தனத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. பழங்களை உண்பதற்கு முன் அதிலுள்ள விதைகளை எடுப்பதைப் பெரும் வேலையாக நினைத்த நாம், விஞ்ஞானத்தின் உதவியுடன் `பார்த்தினோ கார்பிக் (Parthenocarpy)' என்ற விதையில்லா பழங்களைக் கொண்டுவந்தோம். இவற்றை விதையில்லா பழங்கள் என்பதை விட `உயிரில்லா பழங்கள்' என்று குறிப்பிடுவதே பொருத்தம். இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் நாட்டுப் பழங்களில் உள்ளதுபோல் எந்தவித சத்துக்களும் இவற்றில் இருப்பதில்லை.
விதைகளும் பயன்களும்...
இயற்கை மருத்துவத்தைப் பொறுத்தவரையில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் விதைகள் சத்து நிறைந்த உணவுப்பொருள்கள். உடலில் ஏற்படும் வலி, வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு இயற்கை மருத்துவத்தில் விதைகளைக் கொண்டே சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு விதையிலும் ஒவ்வொரு விதமான மருத்துவக்குணம் அடங்கியுள்ளது. அவற்றில் சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
* திராட்சை விதையில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் (Phytoestrogen) எனப்படும் சத்து மிகுந்துள்ளது. இது இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் சமநிலையைச் சீராக வைத்திருக்கவும், அவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளைத் தடுக்கவும் இது உதவுகிறது. இதில் வைட்டமின்-ஈ சத்து நிறைந்துள்ளது. இந்த விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து (drug) புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
* தர்பூசணியில் உள்ள விதைகள் நம் உடலில் நீர்ச்சத்தைக் குறையாமல் வைத்திருக்கின்றன. உடலிலுள்ள அதிகப்படியான நீரை சிறுநீர் வழியே தங்குதடையின்றி வெளியேற்றுகின்றன. சிறுநீரகத்தின் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.
* மாதுளை விதைகளில் பாலி பினைல்லென்ஸ் (Polyphenylene) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது உடலில் கெட்ட கொழுப்புகளைப் படியவிடாமலும், ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படாமலும் பார்த்துக்கொள்கிறது. சருமப் பொலிவை ஏற்படுத்துகிறது. உடலில் உள்ள செல்களுக்குத் தேவையான அளவு ஆக்சிஜனைத் தருகிறது.
* பறங்கி விதையை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது சிறுநீரகத்தில் உருவாகும் கல் போன்ற பிரச்னைகளைத் தடுக்கிறது. குழந்தைகளுக்கு வயிற்றில் உருவாகும் நாடாப்புழுக்களை அழிக்கவும் உதவுகிறது. ஊறவைத்த பறங்கி விதையைப் பாலில் கலந்து இரவில் குடித்து வரத் தூக்கமின்மை பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.
* பப்பாளி விதையைக் காய வைத்து, பொடி செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவரக் குடலில் உள்ள நாடாப் புழுக்கள் அழியும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
Also Read: எண்ணெய்க் குளியல்... எது சரி... யார், எப்படி எடுக்கலாம்? மருத்துவ விளக்கம்
விதையில்லா பழங்களும் விபரீத பலன்களும்!
* சீட்லெஸ் பழங்களால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அறிவியல் ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இந்த சீட்லெஸ் பழங்களில் கலக்கப்பட்டிருக்கும் ரசாயனங்களால் சிலருக்கு அலர்ஜியும் ஏற்படலாம்.
* சீட்லெஸ் பழங்களில் ஜீன்களின் கட்டமைப்பு மாற்றப்படுவதால், அவ்விதைகளில் உருவாகும் பழங்களை உண்பதால், உண்பவர்களின் ஜீன்களிலும் படிப்படியாக மாற்றம் நிகழலாம். நிரந்தரமாக உடலில் தங்கும் நோய்களைக்கூட இந்த சீட்லெஸ் பழங்கள் ஏற்படுத்தும்.
* தொடர்ந்து விதையில்லா பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிட்டு வருவோர்களுக்கு குழந்தையின்மை பிரச்னை கூட ஏற்படலாம்.
* குழந்தைகள் சீட்லெஸ் பழங்களைச் சாப்பிடும்போது அஜீரண பிரச்னை, வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம். எனவே, சீட்லெஸ் பழங்கள் உட்கொள்வதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் தவிர்க்க வேண்டும்" என்கிறார் இயற்கை மருத்துவர் தீபா.
source https://www.vikatan.com/food/healthy/naturopathy-doctor-explains-seedless-fruits-are-healthy-or-not
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக