' டாஸ்க்’கை இன்றைக்கும் இழுத்திருக்கலாமோ என்னுமளவிற்கு ஆகி விட்டது நிலைமை. கடுமையான, தொடர்ச்சியான வேலை இருந்தபோது அதில் கவனம் செலுத்தியவர்கள், அதிலிருந்து விடுபட்டவுடன் மறுபடியும் பரஸ்பரம் சண்டை போட்டு பாயைப் பிறாண்ட ஆரம்பித்து விட்டார்கள்.
மனநலவிடுதிக்குள் புகுந்து விட்டதைப் போல் இருந்தது. ஒரே உணர்ச்சிப் பிரவாகம். ஒரு பக்கம் கீரியையும் பாம்பையும் ஒரே அறையில் அடைத்தது போல பாலாஜி மற்றும் சுச்சி. இன்னொரு பக்கம் பாசமலர்களாக நிஷா மற்றும் ரியோவின் சென்டிமென்ட் அலப்பறைகள். இடையில் சனம் மற்றும் அனிதாவின் ராவடிகள் என்று பிக்பாஸ் வீடு மறுபடியும் களைகட்டிவிட்டது.
அது பிரபலமோ அல்லது சாதாரண நபரோ, அனைவருக்குள்ளும் பொதுசமூகம் காணாத இன்னொரு பலவீனமான பக்கம் இருக்கிறது என்பதை குரூரமாக அம்பலப்படுத்தி விடுகிறது பிக்பாஸ் வீடு.
ஓகே... 47-ம் நாளில் என்ன நடந்தது?
அதற்கு முன் – நேற்றைய கட்டுரையில் வெளியேற வேண்டியவரின் பெயராக ஷிவானியைத் தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன். நண்பர்களும் இதை கமென்ட்பாக்ஸில் சுட்டிக் காட்டியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. தவறுதலாக எழுதியதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். எவ்வித தனித்தன்மையையும் இதுவரை வெளிப்படுத்தாமல் பாலாஜியின் நிழலாக, வெறும் கவர்ச்சிப் பதுமையாக ஷிவானி உலவிக் கொண்டிருப்பதால், அவர் வெளியேற வேண்டும் என்கிற ஆழ்மன விருப்பம் தன்னிச்சையாக அப்படி வெளிப்பட்டுவிட்டது போல.
‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்கிற ரகளையான பாடலுடன் இன்றைய பொழுது விடிந்தது. பிக்பாஸே ரம்யாவின் ரசிகராக மாறிவிட்டார் போலிருக்கிறது. மார்னிங் டாஸ்க்கில் ‘ரம்யா புகழ் பாமாலை’ ஒன்றை புனையச் சொல்லி ‘பொயட்டு’ சுச்சியிடம் கேட்டுக் கொண்டார். ‘ரம்மியா... டம்மியா... சேமியா...’ என்று ரைமிங்கான வரிகளில் கலக்கி விட்டார் சுச்சி. ஒரு கட்டத்தில் இது பஜனைப் பாடல் போலவே சென்று விட்டது. விட்டால் ‘மூக்குத்தி அம்மன்’ போல ‘ரம்மியம்மன்’ என்று கோயிலே கட்டி விடுவார்கள் போல. (ஆர்மிக்காரவுக காட்டில் மழைதான்!). இந்த வகையில் பிக்பாஸ் வீடு பாடல் பெற்ற ஸ்தலமாக மாறிவிட்டது.
தனக்கு சூட்டப்பட்ட பாமாலையின் கனமும் வெட்கமும் தாங்காமல் விழுந்து விழுந்து சிரித்தார் ரம்யா. அனைவரும் இந்தப் பஜனையில் கலந்து கொண்டார்கள். ஆனால் ஓர் உருவம் மட்டும் பயங்கர காண்டுடன் உட்கார்ந்திருந்தது. ‘உலக அழகியான என்னை விட்டு விட்டு இவளைப் போய் புகழ்ந்து கொண்டிருக்கிறார்களே’ என்கிற வெறுப்புடன் அமர்ந்திருந்தாரோ... என்னமோ! கேமரா தன்னை ஃபோகஸ் செய்கிறது என்பதைப் பிறகு பார்த்தவுடன் சம்பிரதாயத்திற்கு ‘ஹிஹி’ என்று புன்னகைத்து வைத்தார் ஷிவானி.
அடுத்ததாக அனிதாவைப் பற்றிய பாடல். அதற்கு அவரே நடனம் ஆடினார். அனிதாவின் நடன அசைவுகளை அனிமேஷனாக மாற்றினால் குழந்தைகளுக்கான பொழுது போக்கு வீடியோ ஒன்றை தரமாக உருவாக்கி விடலாம். அப்படிப்பட்ட ரணகளமான ஸ்டெப்கள். ‘நீ பேசினாலே ஆபத்து... அதுதானே உன் கெத்து’ என்பது போல் சுச்சி எழுதிய பாடல் வரிகள் அமைந்திருந்தன.
‘ஓய்வெடுக்கும் அறை ஓய்வெடுத்தது போதும். அதற்கு வேலை தருவோம்’ என்று அறிவித்தார் பிக்பாஸ். ‘மணிக்கூண்டு டாஸ்க்கில் பின்தங்கிய பாலா, சுச்சி, ரம்யா ஆகிய மூவரிடமிருந்து இருவரை மற்றவர்கள் கலந்து பேசி முடிவு செய்யலாம் என்பது அவர் அறிவிப்பு. இதற்கு பாலாஜி மற்றும் சுச்சிதான் தேர்வு என்பதை முன்பே பிக்பாஸ் முடிவு செய்து விட்டார். எனவே அதற்கேற்ப வியூகம் வகுத்தார். ரம்யாவை ஜெயிலுக்கு அனுப்பினால் ஒட்டு மொத்த பிரபஞ்சமே கொந்தளித்து விடும் என்பது பிக்பாஸிற்கும் தெரியும். முதற்கண் அவரே ரம்யாவின் தீவிர ரசிகர்தான் போல.
“ஐயா. நான்தாங்க குற்றவாளி. என்னை அரெஸ்ட் பண்ணிடுங்க... டைம் வேஸ்ட் பண்ணாதீங்க” என்று தானாகவே முன்வந்து சரண்டர் ஆகும் மனநிலைக்கு சுச்சி எப்பவோ வந்துவிட்டார். ஆனால் பாலாஜி அப்படியிருக்க முடியுமா? அவரது கெத்து என்ன ஆவது?
மணிக்கூண்டு டாஸ்க் உட்பட வீட்டின் அனைத்து விஷயங்களையும் வைத்து மக்கள் முடிவு செய்ததை ஒட்டு கேட்டு ஆட்சேபித்த அவர் "மணிக்கூண்டு டாஸ்க்கு மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கணுமா... இதை பிக்பாஸிடம் கேட்டுட்டு வாடா தம்பி" என்று ஆஜீத்தை எச்சரிக்க, பாவம் ஆஜீத்... இரண்டு அணிகளுக்கும் இடையே அல்லாடிப் போனார்.
கூத்தில் கோமாளி கதையாக பாலாஜி சொல்வதற்கெல்லாம் இடையில் எதையாவது சொல்லி எரிச்சல் மூட்டி பாலாஜியின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டார் சுச்சி. உண்மையில் சுச்சி சொல்வது சரியான விஷயம்தான். "அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். அதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன. பிறகு எதற்கு வாக்குவாதம் செய்து அவமானப்பட வேண்டும்?” என்பதுதான் சுச்சியின் வாதம்.
ஆனால், பாலாஜியின் சார்பில் தான் பேசக் கூடாது என்பதும் அப்படிப் பேசினால் பாலாஜி அதற்கு ‘சுள்’ என்று எரிந்து விழுவார் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இது தொடர்பான முன்அனுபவமும் சுச்சிக்கு இருக்கிறது. என்றாலும் பூனையைச் சீண்டிக் கொண்டே இருக்கும் எலி போல அவர் விளையாடுவதை மனித மனதின் மாய விளையாட்டு என்றுதான் சொல்ல வேண்டும்.
‘என்னை ஜெயில்ல தள்ளிப் பார்க்கறதுல இந்தக் கரடிகளுக்கு சந்தோஷம்’ என்று எரிச்சலோடு முணுமுணுத்தபடி ஜெயிலுக்குச் சென்றார் பாலாஜி. பின்னாலேயே சுச்சி. கீரியையும் பாம்பையும் ஒரே கூண்டிற்குள் அடைத்தது போல் ஆகிவிட்டது நிலைமை.
"பாலா... மறக்காம தலையில எண்ணெய் வெச்சுக்கங்க... புதன், சனி தலைக்கு குளிங்க. கண்ட இடத்துல சாப்பிடாதீங்க" என்று பாலாஜிக்கு புதுமனைவி போல சனம் பல அறிவுரைகளைத் தந்து கொண்டேயிருந்தார். ‘இது என்னடா புது பாசமா இருக்கு’ என்கிற பார்வையுடன் பின்னால் வந்த ஷிவானி ‘ஹலோ... க்யூல நான்தான் முதல்ல நிக்கறேன். தெரியும்ல’ என்பது போல இருந்தார்.
"ஐயோ... ரூம்லயே அவஹ வொர்க்அவுட் பண்றாக... சூடாயிடுமே" என்று சனம் அனத்தத் துவங்க ‘அவருதான் எரிச்சல் ஆகறார்ல.. வாங்க’ என்று சனத்தை இழுத்துக் கொண்டு சென்றார் ஷிவானி. பாலாஜிக்காக சிறை செல்லவும் தயாராக இருந்தார் சனம். பிறகு ‘you will miss me’ என்று சொல்லி விட்டு மனமே இல்லாமல் இடத்தை விட்டு அகன்றார் சனம். போகிற போக்கைப் பார்த்தால் குஷி படத்திற்குப் பல பாகங்களை எடுக்க வேண்டியிருக்கும் போல.
ஷிவானி, சனம், சுச்சி என்கிற முக்கோண தீபகற்ப அன்பிற்கு இடையில் பாலாஜி இருக்கிறார். இது அவரின் அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. யோசித்துப் பார்த்தால் நிச்சயம் துரதிர்ஷ்டம்தான். ‘நொய்... நொய்’ என்கிற புலம்பல் ஒருபக்கம். ‘பிலுபிலுவென்கிற சண்டை இன்னொரு பக்கம், சைலன்ட்டாக இருந்து கொண்டு சாவடிக்கிற மூன்றாவது பக்கம் ஆகியவற்றின் இடையில் ஒருவன் நிம்மதியாக இருக்க முடியுமா? ரெண்டு பொண்டாட்டிக்காரன் அல்லல்பட்ட கதைதான். ‘கண்ணா... ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ என்பதெல்லாம் கேட்பதற்குத்தான் நன்றாக இருக்கும். பிறகு சுகர் வந்து சாக வேண்டியதுதான்.
இதற்கிடையில் வீட்டின் உள்ளே ‘பாசமலர்’ படத்தின் இரண்டாவது பாகம் ஓடிக் கொண்டிருந்தது. ரியோ வருவதற்காக சாப்பாட்டுத்தட்டை வைத்துக் கொண்டு சாப்பிடுவது போல் பாவனை செய்து கொண்டிருந்தார் நிஷா. இது ரியோவிற்குக் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. "ஏற்கெனவே குரூப்பிஸம்றாங்க... ஃபேவரிட்டிஸம்றாங்க... நாம அதையெல்லாம் தாண்டி வந்துட்டோம்... (?!) நீ என்ன புதுசு புதுசா ஆரம்பிக்கறே... நீ எனக்காக சாப்பிடாத... உனக்காக சாப்பிடு" என்று கோபமும் அக்கறையும் கலந்து ரியோ ஆலோசனை தர நிஷாவிற்குள் இருந்த குழந்தை வெளியே வந்தது. அம்மாவிடம் அடிவாங்கிய பேபி மாதிரி பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு ‘சரி...சரி’ என்றார்.
ரியோ கேமரா பற்றிய பிரக்ஞையுடன் இன்னமும் இருக்கிறார் என்று தெரிகிறது. ஒருவகையில் அவர் சொல்லும் ஆலோசனைகள் சரி. அவரவர்களின் போட்டியை அவரவர்கள்தான் விளையாட வேண்டும். ஆனால் வீட்டில் குரூப்பிஸம் இல்லை என்று அவர் இன்னமும் மல்லுக்கட்ட விரும்புவது ஆட்டு லெக்பீஸை புளியோதரைக்குள் மறைக்க விரும்பும் அபத்தமான பாவனை. இதில் கூடுதல் காமெடி என்னவெனில், ரியோ அப்போது அணிந்திருந்த பனியனில் எழுதப்பட்டிருந்த வாசகம் இதுதான். 'சோதீக்காதிங்கடா என்னய’ என்று வடிவேலுவின் உருவத்துடன் இருந்தது.
பாட்டு பாடி ஜெயில் வாழ்க்கையின் சுமையை குறைக்க பாலாஜியும் சுச்சியும் முடிவு செய்தார்கள். ஆனால் கீரியும் பாம்பும் டூயட் பாடியதாக சரித்திரமே இல்லை. சண்டை வந்தேதான் தீரும் என்று விதியிருக்கும் போது எப்படி மாற்ற முடியும்? ‘இங்க குரூப் இருக்கு... உன் ஆளு என்னை முறைக்கிறா... அடுத்த முறை சொல்லிடுவேன்’ என்றெல்லாம் சுச்சி அனத்த ஆரம்பிக்க கொலைவெறியாகி விட்டார் பாலாஜி.
‘என்ன இது திடீர்னு பாட்டு சத்தம் கேட்குது. திடீர்னு சண்டை போடற சத்தம் கேட்குது’ என்று வேடிக்கை பார்க்க வந்த ஷிவானி, சுச்சியின் கடுகடுவென்கிற முகத்தைப் பார்த்ததும் ஜெர்க் ஆகி பின்னால் சென்று விட்டார். ‘அவங்க என்னைப் பத்திதான் ஏதோ கோபமா சொல்றாங்க’ என்று சாமிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “யோவ் பிக்பாஸூ... ஏன்யா இந்தப் பொண்ணோட என்னை அடைச்சே. பைத்தியம் பிடிக்குது” என்று கேமராவைப் பார்த்து கத்திய பாலாஜியைப் பார்த்து ‘அச்சச்சோ.. பாவமே’ என்று பிக்பாஸே உள்ளுக்குள் ‘உச்சு’ கொட்டியிருப்பார்.
‘அய்யோ அங்க என்ன நடக்குதோ’ என்கிற தவிப்புடன் குட்டி போட்ட பூனை மாதிரி வீட்டிற்குள்ளும் வெளியிலும் அலைந்து கொண்டிருந்த ஷிவானி, சுச்சியைப் பார்த்து ஒன்ஸ்டெப் பேக் வாங்கினார். இதைப் பற்றியெல்லாம் எதுவுமே அலட்டிக் கொள்ளாமல் அருகே ஒரு உருவம் துணி காய வைத்துக் கொண்டிருந்தது. நோ... நோ... அது ரமேஷ் அல்ல... ஆரி!
சிறிது நேரத்திலேயே ‘ஓய்வறை’யின் சீன் மாறியது. சண்டைக்காட்சி முடிந்து சென்ட்டிமென்ட் காட்சி. கத்தி கத்தி ஓய்ந்து போயிருந்த பாலாஜி, குழந்தை போல் உறங்கிக் கொண்டிருக்க, அவருக்கு விசிறிக் கொண்டிருந்தார் சுச்சி. உண்மையில் இந்தக் காட்சியை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.
சூழ்நிலைக்குப் பொருத்தமாக ‘உன்னை நான் அறிவேன்... என்னையன்றி யார் அறிவார்?’ என்று ' படத்திலிருந்து ஓர் உருக்கமான பாடலை முணுமுணுத்தார் சுச்சி. உண்மையில் தாழ்ந்த குரலில் அவர் பாடியது நன்றாகவே இருந்தது. இப்படி பல திறமைகளை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு ஏன் இப்படி நகைச்சுவைப் பாத்திரமாக சுச்சி விளங்குகிறார் என்று தெரியவில்லை.
‘உன்னை நான் அரிவேன்’ என்று இப்போது பாலாஜி அரிவாளுடன் எழுந்து கொள்வாரோ என்று நமக்குத்தான் பயமாக இருந்தது. என்றாலும் பாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தார் சுச்சி. ‘தென்பாண்டி சீமையிலே’ என்னும் நாயகன் பாடலை முணுமுணுத்து விட்டு சுயபச்சாதாபத்துடன் அவர் கண்ணீர் விட்டு அழுதது உண்மையிலேயே பரிதாபத்தை ஏற்படுத்திய காட்சி. அவர் வீட்டிற்குள் வந்து சுமார் இருபது நாட்கள்தான் இருக்கும். அதற்குள் ஒருவரின் மீது கடும் பொறாமையும் இன்னொருவருக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு அன்பும் எப்படி ஏற்பட முடியும்? இதெல்லாம் தன்னிச்சையான உணர்வுகளா... நாடகமா... மனதின் மாய விளையாட்டா?!
சுச்சி மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்பது நன்கு தெரிகிறது. அவர் உடனே இன்னொரு பஞ்சாயத்தை ஆரம்பித்தார். "அனிதா... உங்களுக்கு பிரெண்ட்ஷிப் band கொடுத்தேன்ல. அதை சனத்திற்கு தர முடியுமா?” என்று அபத்தமான கேள்வியை அனிதாவிடம் கேட்க ‘சுர்’ரென்று மண்டைக்கு கோபம் ஏறிய, அனிதா எதுவும் பேசாமல் அதை எடுத்து வந்து ‘தாங்க்ஸ்’ என்று சொல்லி தந்துவிட்டுச் சென்றார். ‘இது சரியில்லை சுச்சி’ என்று சனம் மெலிதாக புத்தி சொல்லியும் அது சுச்சிக்கு உறைக்கவில்லை.
அனிதாவிற்குக் கோபம் வந்தாலும், இப்போதைக்கு அமைதியாக சென்று விட்டாரே என்று நாம் ஆறுதல் கொள்ள முடியாது. அது புயலுக்கு முந்தைய அமைதியாக இருக்கலாம். "பிக்பாஸ்... இதை நான் உங்களுக்கு கட்டிவிடறேன். நீங்களும் நானும் இனிமே பிரெண்ட்ஸ்... ஓகேவா?” என்று அந்த Band-ஐ கேமரா ஸ்டாண்டிற்கு கட்டி விட்டார் சுச்சி. (இன்னமும் என்ன கொடுமையையெல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ?!).
அடுத்ததாக தலைவர் போட்டி. மணிக்கூண்டு டாஸ்க்கில் வெற்றி பெற்ற சோம், சாம், அர்ச்சனா, ரியோ, கேபி, ஆரி ஆகிய ஆறு நபர்களும் இந்தப் போட்டியில் இருந்தார்கள். போட்டியாளர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட துண்டு கட்டையை ஒரு பலகையின் முனை மீது வைத்து நடக்க வேண்டும். நீண்ட நேரம் தாங்கிப் பிடிக்க வேண்டும்.
இதில் ஆரம்பக் கணத்திலேயே அர்ச்சனா அவுட் ஆனார். அதன் பிறகு சாம் மற்றும் சோம். ஆண்களுக்கு இணையாக கேபி சிறிது நேரம் தாக்குப் பிடித்தார். “கேபி... பலகையை உங்க உடம்புல டச் பண்ணி தாங்கறீங்க" என்று ‘கடமை வீரர்’ ஆரி எச்சரிக்க, "இல்லை ப்ரோ" என்று மறுத்தார் கேபி. ஆனால் பலகையை அவர் தள்ளிப் பிடிக்காமல் நெஞ்சின் மீது தாங்கியிருந்தது போல்தான் தெரிந்தது.
என்றாலும் கேபி சிறிது நேரத்தில் அவுட் ஆனார். ஆக களத்தில் எஞ்சியவர்கள் ஆரியும் ரியோவும். இதில் ஆரிக்குப் பெரிதாக சப்போர்ட் எதுவுமில்லை. வழக்கம் போல் தனிமரமாக நின்றார். ஆனால் ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடும் ரியோவிற்கு ஆதரவாக நின்றது. ‘ஒழுங்கா பார்த்து பண்ணு’ என்று ஜாடை காட்டினார் நிஷா. ‘ஹீரோ மாதிரி இருக்கீங்க’ என்று ரம்யா சொன்னவுடன் ‘எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்’ காமெடி போல துவண்டு போயிருந்த ரியோ, இளிப்புடன் தெம்பாக நிமிர்ந்தார். ‘டீ... காபி...’ என்று அந்த நெருக்கடி நிலையிலும் அவர் காமெடி செய்தது சுவாரஸ்யம்.
துவக்கத்திலிருந்தே ஆரி தன்னம்பிக்கையுடன் இருந்தார். அவர்தான் வெற்றி பெறுவார் என்பது போல்தான் இறுதி வரைக்கும் இந்த விளையாட்டு சென்றது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தடுமாற கட்டை கீழே விழுந்ததால் ரியோ கேப்டன் ஆனார். ரியோவின் ‘குரூப்பில்’ இருந்த எல்லோருமே இதற்காக மகிழ்ச்சியடைந்தார்கள். ஓய்வெடுக்கும் அறையில் இருந்த சுச்சியும் பாலாவும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். (ஹப்பாடா... சண்டை நின்னுடுச்சு!).
ரம்யா தந்த பிரத்யேக உற்சாகத்தினால்தான் ரியோ வெற்றி பெற்றார் என்பதை தனியாக குறிப்பிட வேண்டிய அவசியமேயில்லை. (ரம்யா பஜனைப் பாடலை தினமும் பாடினால் உங்களுக்கும் இது போல் பல காரியங்கள் ஜெயமாகும்).
அடுத்ததாக, அணி பிரிக்கும் வேலையில் இறங்கினார் ரியோ. கிச்சனில் சுச்சி, அனிதா, ரம்யா, ஷிவானி மற்றும் ரியோ. பாத்ரூம் டிபார்ட்மென்ட் சாம் மற்றும் ஆஜீத். (சீனியரான ரமேஷூக்கு VRS). “சோம். இதுவரைக்கும் பாத்ரூம் அணியில் இருந்ததில்லை" என்று ஆரி ஆலோசனை சொல்ல "சோம்... இதுவரைக்கும் நீ ரெஸ்ட் ரூம் போகவே இல்லையா?" என்று ரியோ கேட்டது ஜாலியான பிழை. நாற்பது நாளைக்கு ரெஸ்ட் ரூம் போவாம எப்படி ஒருத்தனால இருக்க முடியும்?
எனவே பாத்ரூம் அணி சாம் மற்றும் சோம் ஆக மாற்றப்பட்டது. இதற்கு ஆஜீத் முகம் சுருங்கினார். ஹவுஸ் கீப்பிங் அணியில் கேபி, சனம், ஆஜீத் மற்றும் பாலாஜி இருப்பார்கள். இந்த அணிக்கு ஆஜீத் கேப்டனாக இருப்பார் என்கிற ஆறுதல் பரிசை அளித்தார் ரியோ. ஆக மீதமிருந்த போட்டியாளர்களான அர்ச்சனா, ரமேஷ், நிஷா மற்றும் ஆரி ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியில் இருப்பார்கள். கேபியை துணைத் தலைவராக்க விரும்பினார் ரியோ. பிறகு நிஷாவின் ஆலோசனையின் பேரில் ‘ஷிவானியை’ அந்தப் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார்.
பாத்திரத்தில் அடியில் இருந்த குழம்பை வழித்து வழித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்குத் தந்தார் நிஷா. அது பிக்பாஸின் குறும்பா அல்லது தற்செயலா என்று தெரியவில்லை. ஏறத்தாழ அனைவரும் வீட்டுச் சமையலை சாப்பிட்டு விட்ட பிறகு விதம் விதமான அசைவ உணவுகள் ஸ்டோர் ரூமில் காத்துக் கொண்டிருந்தன. டாஸ்க்கில் வென்றதற்கான பரிசு. ‘அய்யோ பிக்பாஸ்... முன்னாடியே சொல்லக்கூடாதா... கலக்கி போச்சே’ என்று மக்கள் அழுது தீர்த்தனர். ‘நான் இன்னமும் சாப்பிடலையே’ என்று ‘வெவ்வே’ காட்டினார் சனம்.
இன்னமும் பாலாஜியை உள்ளே வைத்திருந்தால், கொலைக்கேஸாகி விடலாம் என்று பயந்தாரோ என்னமோ... இரவே சிறைப்பறவைகளை ரிலீஸ் செய்து விட்டார் பிக்பாஸ். ‘இதுக்கு வரவேற்பு மட்டும்தான் குறைச்சல்’ என்கிற அலுப்புடன் பாலாஜி உடனே வீட்டுக்குள் விரைந்து விட மேள தாளத்துடன் சுச்சியை வெளியே அழைத்து வந்தார்கள். ‘என்ன பாலா... நைட்டே அனுப்பிச்சிட்டாங்க’ என்று குத்தலான நகைச்சுவையுடன் வரவேற்றார் ரம்யா. (வெஷம்... வெஷம்...). சுச்சியிடமிருந்து விடுதலையான பாலாவை மகிழ்ச்சியுடன் கட்டியணைத்துக் கொண்டார் ஷிவானி. (அப்பாடா... பொம்மை திருப்பியும் கெடைச்சிடுச்சு!).
காரின் புதிய மாடல் அறிமுகம் நடந்தது. அதற்காக போட்டியாளர்கள் போட்டோகிராஃபர்களாகவும் மாடலாகவும் மாற வேண்டும். இந்தப் போட்டியில் ஆரி –சாம் கூட்டணி வெற்றி பெற்றது. சாமை மாடலாக வைத்து ஆரி எடுத்த புகைப்படங்கள் உண்மையிலேயே நன்றாக இருந்தன. இதைப் போலவே ரமேஷை வைத்து அர்ச்சனா எடுத்த ஒரு புகைப்படமும் அட்டகாசமாக வந்திருந்தது. சோமை வைத்து ரம்யா எடுத்த புகைப்படங்களும் ‘ஓகே’ ரகம்தான்.
காட்டன் புடவையில் ஸ்கூல் டீச்சர் மாதிரி இருந்த அனிதாவை வைத்து சனம் எடுத்த புகைப்படங்கள் மிகச் சுமார். காரின் அருகே நிஷாவை கீழே அமர வைத்து ரியோ எடுத்த புகைப்படம் ரசிக்கத்தக்கதாக இல்லை. நிஷா காரிலிருந்து கீழே விழுந்ததைப் போலவே அது இருந்தது.
இன்று வாரப்பஞ்சாயத்து நாள். ‘சுற்றுச்சூழல் ஆபத்து’ பற்றிய சம்பிரதாய முன்னுரையுடன் வரப்போகும் கமல் அகம் டிவிக்குள் நுழைந்து விசாரணையை மேற்கொள்வார். ‘மணிக்கூண்டு’ டாஸ்க்தான் விசாரணையின் மையமாக இருக்கப் போகிறது. வேறெந்த நிகழ்வுகளும் இந்த வாரத்தில் பிரதானமாக இல்லை. தூங்கி எரிந்து விழுந்த பாலாஜியை நமட்டுச் சிரிப்போடு விட்டு விடுவாரா அல்லது அழுத்தமாக கண்டிப்பாரா என்று பார்க்க வேண்டும். சுச்சியின் அனத்தல்கள் பற்றிய விசாரணை தனியாக இருக்கலாம். பார்ப்போம்!
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/new-captain-in-the-house-balaji-suchi-visit-jail-bigg-boss-tamil-season-4-day-47
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக