Ad

வியாழன், 5 நவம்பர், 2020

நீலகிரி: மூன்று நாளில் இரண்டு பேர்‌ பலி... கூடலூரில் அதிகரிக்கும் யானை‌ - மனித எதிர்கொள்ளல்!

நாட்டிலேயே யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நடக்கும் பகுதியாக கூடலூர் இருந்து வந்தது. வனத்துறை மற்றும் காட்டுயிர் ஆய்வாளர்கள், கடந்த சில ஆண்டுகளாக தொடர் கள ஆய்வுகள் மேற்கொண்டு, தற்போது எதிர்கொள்ளல்கள் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள‌ நிலையில் மூன்று நாளில் இரண்டு பேர்‌ யானை தாக்கியதில் உயிரிழந்த நிகழ்வு மீண்டும் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

யானை தாக்கி சேதமடைந்த வீடு

கடந்த 1-ம் தேதி காலை நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் உள்ள கோக்கால் பகுதி சாலையில் நடந்துச் சென்ற கமலாசி என்ற 58 வயது பெண்ணை, காட்டு யானை ஒன்று தாக்கியது. இதில் படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவரின் உயிர் பிரிந்தது.

யானை தாக்கி உயிரிழந்த கமலாசி

இந்த நிலையில், கூடலூர் ஓவேலி பகுதியைச் சேர்ந்த பாலுசாமி என்பவர், அந்த பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்ட‌ குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கூடலூர் நகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்த இவர், கொரோனா காரணமாக பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால், நாள்தோறும் 15 கிலோ மீட்டர் தொலைவை லிஃப்ட் கேட்டும், ஜீப்பிலும் பயணித்து வந்துள்ளார்.

கடந்த நவம்பர் 2-ம் தேதி இரவு கூடலூரில் பணி முடித்துவிட்டு, ஓவேலியில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல நடந்துள்ளார். ஆனால் இரவு நெடு நேரம் ஆகியும் பாலுசாமி தன்‌ வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரை‌ பல இடங்களில் தேடியுள்ளனர். தனது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலை ஓரத்தில் பாலுசாமி யானையால் தாக்கப்பட்டு சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

யானை தாக்கி சேதமடைந்த வீடு

உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அவரது உடலை மீட்டு உடற் கூறாய்வுக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஓவேலி பகுதி மக்கள் பேசுகையில், ``கொரோனா மற்றும் சாலை சீரமைப்பின்மை போன்ற காரணங்களைச் சொல்லி இந்த பகுதியில் இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை. இதனால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பேருந்து வசதி இல்லாததாலேயே இந்த தொழிலாளி யானை தாக்கி உயிரிழந்தார். மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலையை சீரமைத்து அரசு பேருந்தை இயக்க வேண்டும்" என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

யானை தாக்கி உயிரிழந்த பாலுசாமி

யானை மனித எதிர்கொள்ளல்கள் குறித்து சூழலியல் ஆர்வர்கள், "இரவு நேரங்களில் மட்டுமே யானைகள் நடமாட்டம் தற்போது அதிகமாக உள்ளது. எதிர்கொள்ளல்களும் இந்த சமயத்தில்தான் நடக்கின்றன. மக்களிடம் மேலும் விழிப்புணர்வை அதிகரித்து, மாலை 7 முதல் காலை 7 மணிவரை வனத்தை ஒட்டிய பகுதிகளில் மக்கள் நடமாடுவதை தவிர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.



source https://www.vikatan.com/living-things/animals/two-persons-killed-in-elephant-attack

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக