Ad

வியாழன், 5 நவம்பர், 2020

20 ஆண்டுகளுக்குப் பின் முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம்... மகிழ்ச்சியில் விவசாயிகள்!

தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டத்தின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணை. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் பெறுவதில், கடந்த காலம் முதல் தற்போது வரை பல்வேறு சிக்கல்களை கேரள அரசு உருவாக்கி வருகிறது. அணைக்கு 20 ஆண்டுகளாக மின்சாரம் கொடுக்க கேரள அரசு மறுத்து வருவதும் இதில் ஒன்று.

முல்லைப் பெரியாறு அணை

கடந்த 2000ம் ஆண்டு வரை, குமுளி அருகே உள்ள வல்லக்கடவு பகுதியிலிருந்து வனப்பகுதி வழியாக முல்லைப்பெரியாறு அணைக்கு மின்சாரம் சென்றுகொண்டிருந்தது. 19.06.2000 அன்று மின்கம்பியில் காட்டுயானை ஒன்று சிக்கி பலியானது. அன்று முதல் அணைக்குச் செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. சோலார் விளக்குகள், ஜெனரேட்டர்கள் போன்றவையே தற்போது அணையில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அங்கு பணியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை ஊழியர்கள், அதிகாரிகள் மின்சாரம் இன்றி சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

தேனி மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கத்தினர், அணைக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த மூவர் கண்காணிப்புக் குழுவிடமும் தொடர்ச்சியாக மனுக்கள் கொடுத்தனர்.

முல்லைப் பெரியாறு அணை

இந்நிலையில், தமிழக பொதுப்பணித்துறை, முல்லைப்பெரியாறு அணைக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியும் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படாத வகையில், தரை வழியாக மின்கம்பிகளை கொண்டு செல்லவும் கேரள அரசிடம் கோரிக்கை வைத்தது. இதற்கான செலவுத்தொகை, ரூ1 கோடியே 66 லட்சம் கேரள மின்வாரியத்திற்கு தமிழக அரசு செலுத்தியது. கேரள மின்வாரியம், கேரள வனத்துறையிடம் இது தொடர்பான அனுமதியினைக் கேட்க, திட்டத்தை கிடப்பில் போட்டது கேரள வனத்துறை.

Also Read: வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது! #keralafloods

இரு தினங்களுக்கு முன்னர், தமிழக, கேரள பொதுப்பணித்துறை மின்வாரிய உயர் அதிகாரிகள், மின்கம்பிகள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்ட வல்லக்கடவு முதல் முல்லைப்பெரியாறு அணை வரையிலான வழித்தடத்தினை ஆய்வு செய்தனர். இதில், தமிழக அரசு சார்பாக கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், தமிழக மின்வாரிய செயற்பொறியாளர் சுஜாதா உட்பட அதிகாரிகளும் கேரளா சார்பில் கேரள மின்வாரிய உதவி முதன்மை பொறியாளர் மனோஜ், செயற்பொறியாளர் பார்வதி, அசிஸ்டன்ட் பீல்டு டைரக்டர் விபின்தாஸ், முல்லைப் பெரியாறு காவல்நிலைய டி.எஸ்.பி நந்தன்பிள்ளை மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அணை அருகே உள்ள அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனையிலும் ஈடுபட்டனர்.

முல்லை பெரியாறு அணை

இது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் நாம் பேசிய போது, “வல்லக்கடவு முதல் அணை வரை சுமார் 5 கிலோமீட்டர் வனப்பகுதியில் மின் கம்பிகள் பதிக்கப்படும். இப்பணிக்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் பணிகள் துவங்க இருக்கின்றன. இரண்டு மூன்று மாதங்களில் அணைக்கு மின்சாரம் வந்துவிடும் என எதிர்பார்க்கலாம்” என்றார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப்பெரியாறு அணைக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட இருக்கும் செய்தி, தேனி மாவட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பொறியியலின் அதிசயம் முல்லைப் பெரியாறு அணை! - ஏன் தெரியுமா? #MyVikatan



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/mulla-periyar-dam-going-to-get-power-supply-after-20-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக