வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் நிவர் புயல் அதி தீவிரப் புயலாக இன்று இரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் 15 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இரு மாநில அரசுகளும் முடுக்கிவிட்டிருக்கின்றன.
சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதலே கனமழை பெய்துவருகிறது. கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதிகளிலும் மழை நீர் புகுந்தது. அதேபோல், சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
Also Read: அதி தீவிரப் புயலாகும் நிவர்; 15 மாவட்டங்களில் கனமழை- காற்று 155 கி.மீ வேகத்தில் வீசலாம்!
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், படகு, வலை போன்றவற்றைப் பாதுகாப்பாகவைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்தநிலையில், புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட நடுகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். இந்தக் கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்களில் 80-க்கும் மேற்பட்டோர் படகுகளைவைத்து மீன்பிடித் தொழில் ஈடுபட்டுவருகிறார்கள்.
ஒவ்வோர் இயற்கைச் சீற்றத்தின்போதும் இந்த மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பாக வைக்க இடமில்லை என்பது குற்றச்சாட்டு. இயற்கைப் பேரிடர் காலத்தில் படகுகளை அருகிலுள்ள சுடுகாட்டில்தான் நிறுத்த வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. தற்போது இந்தப் பகுதியில் இறப்பு நிகழ்ச்சி ஒன்று நடப்பதால், சுடுகாட்டில் படகுகளை வைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. படகுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான இடத்தைக் கேட்டு இவர்கள் கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/disaster/cyclone-nivar-nadukkuppam-fishermen-staged-protest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக