"ஸ்கூல் லீவு விட்டா மழை நின்னுடும்"... ரமணன் கால ஜோக்குகள் காலாவதியாகிவிட்டதையே தற்போதைய புயல்கள் நமக்கு உணர்த்துகின்றன. எப்போதாவது கேட்கும் புயல் செய்திகள் இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கிறது. 'ட்விஸ்டர்' மாதிரியான ஹாலிவுட் பட பாணி வீடியோக்கள் நம்மூரிலும் நடப்பதாக வாட்ஸ்அப் வீடியோக்களை கக்கி வருகிறது. உண்மையில் புயல்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து இருக்கின்றனவா என்று கேட்டால் 'ஆம்' என்பதுதான் பதில். புள்ளி விவரங்கள் அதைத்தான் சொல்கிறது. ஆனால், அதற்கான காரணம்? 'பூவுலகு' சுந்தரராஜனிடம் பேசினேன்.
"இப்போது தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிவர் புயல், கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகம் சந்திக்கக்கூடிய ஐந்தாவது புயல். 1890-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை அந்த 112 ஆண்டுகளில் தமிழகம் 54 புயல்களைச் சந்தித்திருந்தது. 2002 முதல் 2018 வரையிலான கால கட்டத்தில் தமிழகம் 10 புயல்களை சந்தித்திருந்தது. இப்போது கடந்த ஆறு ஆண்டுகளில் 5 புயல்கள். தானே, ஒக்கி, கஜா, வர்தா இப்போது நிவர். புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. புயல்களின் தன்மை தீவிரமடைகிறது. புயல்களை கணிப்பது மிக மிக கடினம் ஆகிக்கொண்டிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் காரணம் காலநிலை மாற்றம். மனிதர்களாகிய நாம் வெளியிடக்கூடிய பசுமை குடில்வாயு (green house gases) வெளியிடக்கூடிய கார்பன் அவற்றை பெருங்கடல்கள் வாங்கிக்கொண்டு, அவற்றின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. புயல் உருவாவதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்று வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய சில மாறுதல்கள். அதன் மூலம்தான் காற்று அழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும். அது பிறகு அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பிறகு புயல், தீவிர புயல், அதிதீவிர புயல், சூப்பர் சைக்ளோன் இப்படி பல்வேறு கட்டங்களாக மாறும். கடலுடைய வெப்பம் 26 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக இருக்கவேண்டும், நமக்கு இங்கு 29, 30 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. கடல் வெப்பம் அதிகமாவதால், அதன் மூலம் தண்ணீர் நீராவியாக மாறி, வளிமண்டலத்தில் ஈரப்பதம் உருவாகிறது. இதன் மூலம்தான் காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவாகி, பிறகு புயலாக அவை உருவாக்கம் பெறுகின்றன.
பெருங்கடல்களின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க புயல்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதைவிட முக்கியமாக புயல்களின் தீவிரத்தன்மை அதிகரிக்கும். காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருப்பதால், இந்தப் புயல்கள் அதிக அளவு மழையை கொண்டு வருகிறது. அதேபோல், துருவங்களில் உருகும் பனிமலைகள், காலம் தோறும் நடக்கும் thermal expansion, இதன் மூலமும் கடலின் நீர் மட்டம் அதிகரிக்கிறது. இப்படியாக ஏற்கெனவே உயரும் கடல் மட்டத்தில் புயலும் சேரும் போது, அலைகளும் உயரமாக எழும்பும்.
இதன் மூலம் காலநிலை மாற்றங்கள் மனிதர்களுக்கு மிகப்பெரும் சவால்களை உருவாக்கிவருகின்றன என்பது திண்ணம். பேரிடர் மேலாண்மை என்பது புயல் உருவானப்பின், மக்களை மண்டபங்களை அடைப்பதோடு நில்லாமல், அதற்கு முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். காலநிலை மாற்றம் நம்முடைய இருத்தலை கேள்விக்குள்ளாக்கிவருகிறது. கால நிலை மாற்றத்தின் தாக்கத்தை நாம் குறைக்கவேண்டும். அதில் நாம் கவனம் செலுத்தத் தவறினால், இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கும் என்பதே எங்களைப் போன்றவர்களின் கவலையாக இருக்கிறது" என்றார்.
source https://www.vikatan.com/news/environment/fifth-cyclone-in-six-years-is-climate-change-the-cause
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக