கொரோனா பேரிடர் காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொலைக்காட்சி வழியாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் பள்ளி கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து, நவம்பர் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இன்னும் கொரோனா தொற்று கட்டுக்குள் வராத நிலையில் பள்ளிகள் திறக்கும் அறிவிப்புக்கு எதிராகப் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழக அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தது. பள்ளிகள் திறப்பது தொடர்பாக, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அனைத்து மாவட்டத்திலும் கேட்கப்பட்ட கருத்துக்களை, மாணவர்கள், பெற்றோர்கள், வகுப்பு, ஆதரவு, எதிர்ப்பு, கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை போன்ற பல்வேறு தகவல்கள் அடங்கிய பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தயாரித்துள்ளனர். இந்த அறிக்கை அனைத்தும் சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 12-ம் தேதிக்குள் முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை செய்ய இருப்பதாகத் தெரியவருகிறது. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்ததில் பெரும்பாலானோர் தற்போது பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று குறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறந்த மாநிலங்களில் ஆந்திரா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமானது போன்ற நிகழ்வுகளையும், தற்போது கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மனதில் கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் தனது முடிவை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தமிழக அரசு, `பெற்றோர் மாணவர்களிடம் கருத்து கேட்கபட்டத்தில் பெரும்பாலானோர் பள்ளிகளை திறப்பதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை’ எனத் தெரிவித்திருந்தது. பின்னர் பேசிய நிதிபதிகள், ``ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட நிலையை நாம் பார்த்திருக்கிறோம். பல இடங்கள் இரண்டாம் அலை அச்சம் வேறு இருக்கிறது. அதனால், டிசம்பருக்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறக்கலாமே... இது நீதிமன்றத்தின் கருத்து மட்டுமே...” எனக் கூரி வழக்கை நவம்பர் மாதம் 20 -ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
source https://www.vikatan.com/government-and-politics/education/when-will-schools-open-in-tamil-nadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக