மதுரை மாநகர் தி.மு.க மாவட்டச் செயலாளராக தளபதி இருக்கிறார். மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை மத்திய தொகுதிகள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. அதேபோல, மதுரை வடக்கு மாவட்டத்துக்கு மூர்த்தியும், மதுரை தெற்கு மாவட்டத்துக்கு மணிமாறனும் மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள். மூர்த்தியின் கட்டுப்பாட்டில் மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான் தொகுதிகளும், மணிமாறன் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதிகளும் வருகின்றன.
ஒரு மாவட்டத்துக்கு இரண்டு தொகுதிகள் வீதம், மாவட்டங்களை அமைப்புரீதியாகப் பிரிக்க அறிவாலயம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, ஏற்கெனவே கோவை, திருப்பூர், தருமபுரியில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது, மதுரையிலுள்ள பத்து தொகுதிகளையும், இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் வீதம் பிரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்டச் செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, மணிமாறன் மூவரும் முரண்டு பிடிப்பதால், இழுபறியில் இருக்கிறது மாவட்டப் பிரிப்புப் பணி.
Also Read: மதுரை: பா.ஜ.க - வி.சி.க தொண்டர்கள் திடீர் மோதல்; எல்.முருகன் சாலை மறியல்! - என்ன நடந்தது?
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள் சிலர், ``தளபதி கட்டுப்பாட்டில் வரும் மதுரை வடக்கு, மதுரை தெற்கு தொகுதிகளைப் பிரித்து புதிய மாவட்டமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ டாக்டர்.சரவணன், இந்தப் புதிய மாவட்ட பொறுப்பைப் பெறுவதற்காக உதயநிதி ஸ்டாலின் மூலம் கடுமையாக முயற்சிக்கிறார். மாவட்டத்தைப் பிரிப்பதற்கே சம்மதிக்காத தளபதி, சரவணனுக்குப் பொறுப்பு என்றவுடன் உஷ்ணமாகிவிட்டார். தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்திய கட்சி சீனியரிடம், `பத்து வருஷமா கட்சியை நான் காப்பாத்திக்கிட்டு வர்றேன். என் கட்டுப்பாட்டுல இருக்குற நாலு தொகுதியிலேயும் எந்த நல்லது, கெட்டது நடந்தாலும் செலவு செஞ்சிருக்கேன். திடீர்னு சரவணனுக்கு இரண்டு தொகுதியைப் பிரிச்சுக் கொடுத்தா என்ன நியாயம்? நான் சீனியரா, அவர் சீனியரா?’ என்று கொதித்துவிட்டார் தளபதி.
மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறனுக்கும் சரவணனுக்கும் ஏழாம் பொருத்தமாகிவிட்டது. சமீபத்தில் நடந்த மதுரை மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் கூட, மணிமாறனுக்கு எதிராக சில புகார்களை சரவணன் தரப்பு ஆதரவாளர்கள் எழுப்பினர். இதை விசாரித்து தீர்வு செய்யும்படி முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவிடம் ஸ்டாலின் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். வரும் தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் தான் மீண்டும் போட்டியிட்டால், தன்னைத் திட்டமிட்டு மணிமாறன் தோற்கடித்துவிடுவார் என்று சரவணன் கருதுகிறார். இதற்காக மதுரை வடக்கு தொகுதிக்கு ஜாகை மாறவும் அவர் முடிவெடுத்திருக்கிறார். இந்த கூட்டல் கழித்தல் கணக்கில்தான், உதயநிதி மூலமாக மாவட்டப் பொறுப்பாளர் பதவி வாங்கவும் அவர் முயற்சிக்கிறார். இது மதுரை அரசியலில் அனலைக் கிளப்பியிருக்கிறது” என்றார்.
Also Read: இட ஒதுக்கீடு: `நாங்கள் எதிர்க்கட்சி; அரசியல்தான் செய்வோம்!’ - முதல்வருக்கு ஸ்டாலின் பதில்
வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தியிடம் இருந்து சோழவந்தான் தொகுதியையும், தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறனிடம் இருந்து உசிலம்பட்டி தொகுதியையும் பிரித்தெடுத்து, புதிய மாவட்டத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டப் பொறுப்புக்கு இள.மகிழன், எஸ்.ஓ.ஆர்.தங்கபாண்டியின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இந்த பிரிப்புக்கு மூர்த்தியும், மணிமாறனும் முரண்டு பிடிப்பதால், மாவட்டப் பிரிப்பு ஊசலாடுகிறது.
இதற்கிடையே தி.மு.க தென்மண்டல பொறுப்பாளராக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி நியமிக்கப்படலாம் என்று தென்மாவட்ட தி.மு.க-வினரிடையே ஒரு சலசலப்பு எழுந்துள்ளது. இதை முற்றிலுமாக மறுக்கும் அறிவாலய சீனியர்கள், ``தலைவர் கலைஞர் மறைந்த பிறகு, ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, `தி.மு.க-வில் தற்போது பொறுப்பில் உள்ள தலைவர்கள் கட்சியை அழித்துவிடுவார்கள். நான் தி.மு.க-வுக்குத் திரும்புவதை ஸ்டாலின் விரும்பவில்லை. நான் கட்சிக்குள் வந்தால் எங்கே வலிமையான தலைவராகிவிடுவேனோ என்று மற்றவர்கள் அச்சப்படுகிறார்கள்’ என்று கூறினார். இதற்கு எதிர்வினையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, `வீட்டில் இருப்பவர்களைப் பற்றி பேசலாம். வெளியிலிருந்து விருந்துண்ண வந்தவர்களைப் பற்றி பேச வேண்டாம்’ என்று அழகிரியைக் குறிப்பிட்டு காட்டமாகப் பதிலளித்தார்.
Also Read: `ரஜினி கருத்தை ஆதரித்தேனா?’ - சோஷியல் மீடியா வதந்திகளுக்கு எதிராகக் கொதித்த மு.க அழகிரி
கி.வீரமணியின் கருத்துக்கு பதிலடியாக, `காலம் காலமாக தி.மு.க-விலும், அ.தி.மு.க-விலும் ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி இதைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை’ என்று துரை தயாநிதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது, அரசியலில் அதிர்வலையைக் கிளப்பியது. துரையின் கருத்தை தி.மு.க சீனியர்கள் யாரும் விரும்பவில்லை. இன்றளவும் மறக்கவும் இல்லை. கட்சிக்குள் உதயநிதியை புரமோட் செய்து கொண்டிருக்கும் நிலையில், கனிமொழியைக் கூட தலைமை ஓரங்கட்டித்தான் வைத்திருக்கிறது. பிறகு எப்படி துரை தயாநிதிக்கு பொறுப்பு அளிப்பார்கள்?” என்றனர்.
மதுரை மாவட்டப் பிரிப்பு பஞ்சாயத்தை விரைந்து முடிக்கும்படி கே.என்.நேருவுக்கு கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறாராம். திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பஞ்சாயத்து முடிந்தபிறகு, மதுரை மாவட்ட பஞ்சாயத்துக்கும் முடிவுகட்டப்படும் என்கிறது அறிவாலயம்.
source https://www.vikatan.com/news/politics/tussle-in-madurai-dmk-over-high-commands-new-strategy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக