Ad

செவ்வாய், 10 நவம்பர், 2020

சி.ஏ.ஏ முதல் காஷ்மீர் விவகாரங்கள் வரை... ஜோ பைடனை எப்படி எதிர்கொள்வார் மோடி?

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அதில், ஜோ பைடன் வெற்றிபெற்றிருக்கிறார். அதிபர் ட்ரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் நெருக்கம் காட்டிவந்தார்.

மோடி ட்ரம்ப்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பரபரப்பு ஆரம்பித்த நிலையில், அதிபர் ட்ரம்ப்பை இந்தியாவுக்கு அழைத்து வந்து குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் `நமஸ்தே ட்ரம்ப்’ என்ற பெயரில் மிகப்பெரிய நிகழ்ச்சியை நடத்தினார் பிரதமர் மோடி. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரின் வாக்குகளைக் கவர வேண்டும் என்ற நோக்கில் ஆர்வத்துடன் அந்த நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்றார். ட்ரம்ப் உடனான பிரதமர் மோடியின் இத்தகைய செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக தாம் வெற்றிபெறுவோம் என்று ட்ரம்ப் உறுதியாக நம்பினார். ட்ரம்ப் மட்டுமல்ல, பிரதமர் மோடியும்கூட ட்ரம்ப்தான் மீண்டும் வெற்றிபெறுவார் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால்தான், ட்ரம்ப்புடன் அத்தகைய நெருக்கத்தைக் கடைசிவரை காண்பித்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் ட்ரம்ப்புக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின. அமெரிக்க மக்கள் ட்ரம்ப்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவியேற்கவிருக்கிறார்கள்.

கமலா ஹாரிஸ், ஜோ பைடன்

கமலா ஹாரிஸின் பூர்வீகம் தமிழ்நாடு என்பது பரவலாக அறியப்பட்ட செய்தி. ஜோ பைடனுக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றும் ஒரு தகவல் இருக்கிறது. ஜோ பைடனின் மூதாதையரான ஜார்ஜ் பைடன் கிழக்கிந்திய கம்பெனியில் கேப்டனாகப் பணியாற்றினார் என்றும், அவர் இந்தியப் பெண் ஒருவரை மணந்துகொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் 1972-ல் செனட் உறுப்பினராக ஜோ பைடன் தேர்வுசெய்யப்பட்டார். அப்போது, மும்பையிலிருந்து ஜோ பைடனுக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் போயிருக்கிறது. மும்பையிலிருந்து பைடன் என்பவர் அந்தக் கடிதத்தை அனுப்பியருக்கிறார். ஜோ பைடனுக்கு உறவினர் என்று சொல்லி, அந்த வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: ஜோ பைடன்: சோகம் நிறைந்த பெர்சனல் பக்கங்கள்; சவால் நிறைந்த அரசியல் பக்கங்கள் - அதிபரானது எப்படி?

இந்தத் தகவலை, இந்திய – அமெரிக்கர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் ஜோ பைடன் குறிப்பிடுவது வழக்கம். `ஜோ பைடனின் இந்தியத் தொடர்பு’ என்ற கட்டுரையை லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் எழுதியிருக்கிறார். அதில், 1800-களில் கிறிஸ்டோபர் பைடன் என்ற கேப்டன் சென்னையில் வாழ்ந்தது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறாராம். அந்த கிறிஸ்டோபர் பைடன் சென்னை ராயபுரம் பகுதியில் வாழ்ந்தார் என்றும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்களில் எந்த அளவுக்கு வரலாற்று உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.

பைடன்

வேறு வகையில் இந்தியாவுடன் ஜோ பைடனுக்கு நெருக்கம் உண்டு என்பதற்குச் சில சம்பவங்கள் உண்டு. 2008-ம் ஆண்டு, மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது, இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை சாத்தியப்படுத்தியதில் ஜோ பைடனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அதற்கு முன்பாக, 2006-ம் ஆண்டு ஜோ பைடன் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், `2020-ல் நெருங்கிய நட்புறவு கொண்ட நாடுகளாக அமெரிக்காவும் இந்தியாவும் இருக்க வேண்டும் என்பதே என் கனவு’ என்று கூறியிருக்கிறார். சரியாக 2020-ம் ஆண்டில் அவர் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறார்.

அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் தலைமை மாற்றம் இந்திய – அமெரிக்க உறவில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணனிடம் பேசினோம்.

``இந்தத் தேர்தல் முடிவுகளால் இந்திய - அமெரிக்க உறவில் பெரிய மாற்றம் இருக்காது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என யார் அதிபராக வந்தாலும் அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. பிரதமர் மோடியின் அணுகுமுறை மற்றும் நடவடிக்கைகளால் அந்த நெருக்கம் என்பது கொஞ்சம் தடைபடும். ஏனென்றால், ட்ரம்ப் அதிபராக இருந்த காலத்தில் ட்ரம்ப்புக்கு ஆதரவாக அளவுக்கு அதிகமாக மோடி நடந்துகொண்டார். அதன் மூலம் உலக நாடுகளாலும், அமெரிக்காவின் பெருவாரியான மக்களாலும் வெறுக்கப்படும் அதிபருக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்து, மிகப்பெரிய நெருக்கத்தைக் காண்பித்து இந்தியாவின் பெயரை மோடி கெடுத்துவிட்டார். இந்திய மக்களின் வரிப்பணம் ரூ.100 கோடியைச் செலவு செய்து அகமதாபாத்தில் மிகப்பெரிய நிகழ்ச்சியை ட்ரம்ப்புக்காக மோடி நடத்தியது ஒரு தவறான முன்னுதாரணம்.

நாராயணன்

ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் நலனும், இந்தியாவின் நலனும் ஒன்றாக இருந்தன. அந்தக் காலம் மாறி, இப்போது அமெரிக்க நலனும், இந்திய நலனும் ஒன்றாகியுள்ளன. அமெரிக்காவின் முதலீடும், தொழில்நுட்பமும் இந்தியாவுக்குத் தேவை. அதேபோல, இந்தியாவின் சந்தையும், இந்தியர்களின் திறமையும் அமெரிக்காவுக்குத் தேவை. இந்திய மென்பொருள் பொறியாளர்களின் திறமையை ஜோ பைடன் ஆட்சியில் அமெரிக்கா நன்கு பயன்படுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவிலுள்ள மென்பொருள் நிறுவனங்களுக்கு அமெரிக்காவிலிருந்து தாராளமாகப் பணிகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

நம் நாட்டின் உள் விவகாரங்களில் வெளிநாட்டினர் தலையிடக் கூடாது என்பது என் நிலைப்பாடு. ஆனாலும், இந்தியாவில் நடக்கும் தவறுகளை ட்ரம்ப் மாதிரி ஜோ பைடன் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க மாட்டார். சி.ஏ.ஏ உள்ளிட்ட இந்தியாவின் சில விவகாரங்களில் ஜோ பைடன் தலையிடுவார் என்று தெரிகிறது. அதை மோடி எப்படிக் கையாள்வார் என்பதைப் பொறுத்து இரு நாட்டு உறவுகளும் இருக்கும்” என்றார் அமெரிக்கை நாராயணன்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம். ``அமெரிக்காவில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கையும் ராணுவக் கொள்கையும் மாறப்போவதில்லை. இந்த இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் அமெரிக்காவின் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசியல் பிரதிநிதிகள்தாம். இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இருக்காது என்றபோதிலும், ஒரு வித்தியாசத்தை கவனிக்க வேண்டும்.

பேராசிரியர் அருணன்

ட்ரம்ப்பைப் பொறுத்த அளவில், ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நிறவெறியையும் மதவெறியையும் தூண்டினார். அதன் மூலம் வெள்ளை இனத்தவரைத் தன் அரசியல் அஸ்திவாரமாக வைத்துக்கொள்வது என்பதைத் தன் அரசியல் தந்திரமாகக் கையாண்டார். ஆனால், அதை பைடன் ஏற்கவில்லை. `அமெரிக்க மக்களை ஒன்றுபடுத்துவேன்’ என்று பைடன் பேசுகிறார். `ட்ரம்ப் மக்களைப் பிளந்தார். அந்தக் கொள்கையை நான் பின்பற்ற மாட்டேன். அமெரிக்க மக்களை ஒன்றுதிரட்டுவேன். மதவெறி, இனவெறி அடிப்படையில் பிளவுபடுத்தும் கொள்கையைப் பின்பற்ற மாட்டேன்’ என்று பைடன் கூறுகிறார். இது முக்கியமான வித்தியாசம். இந்த வாக்குறுதியை எப்படிக் காப்பாற்றுவார் என்பது எதிர்காலத்தில்தான் தெரியவரும்.

Also Read: ஜோ பைடன்: சோகம் நிறைந்த பெர்சனல் பக்கங்கள்; சவால் நிறைந்த அரசியல் பக்கங்கள் - அதிபரானது எப்படி?

அமெரிக்காவில் தேர்தல் நடக்கும்போது எந்த வேட்பாளரையும் ஆதரிக்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். ஆனால், மோடியும், அவர் தலைமையிலான அரசும் ட்ரம்ப்பை வெளிப்படையாக ஆதரித்தனர். ட்ரம்ப்பும் மோடியும் எந்த அளவுக்கு நெருக்கமாக உறவாடினார்கள் என்பது உலகத்துக்கே தெரியும். அதனால், இப்போது பைடன் வெற்றிபெற்றிருப்பதால் இந்தியாவின் நிலைமை சிக்கலில் வந்து நிற்கிறது. அமெரிக்க அரசின் கொள்கைகள் என்னவாக இருந்தாலும், பைடனைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில், `தேர்தலில் எனக்கு எதிராக வேலை செய்தவர்தானே...’ என்றுதான் மோடியைப் பார்ப்பார். அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதையும் பார்க்க வேண்டும்.

பைடன், கமலா

ஆனாலும்கூட, பைடன் வருகையால் இந்தியாவுக்குச் சில நல்ல விஷயங்கள் நடக்கும். ட்ரம்ப் ஆட்சியின்போது விசா பிரச்னை பெரிதாக எழுந்தது . இப்போது, அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்லும் மென்பொறியாளர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு விசா கொடுப்பதில் பிரச்னை இருக்காது. அதனால்தான் பெருவாரியான இந்தியர்கள் பைடனின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்” என்றார் அவர்.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கரிடம் பேசினோம். ``சி.ஏ.ஏ மற்றும் காஷ்மீர் விவகாரங்கள், வெளிநாடுகளுக்கு பணிகள் வழங்குதல், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்கள் தொடர்பான கொள்கை ஆகியவற்றில் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

விஜயசங்கர்

முறையாக விசா இல்லாமல் அமெரிக்காவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஏராளமானோர் இந்தியர்கள். அவர்கள் மீது பைடன் கடுமை காட்ட மாட்டார் என்று எதிர்பார்க்கலாம். சீனாவைப் பொறுத்தவரையும் பைடன் மிகவும் கடுமையாக இருக்க மாட்டார்” என்றார்.

Also Read: `சீமானை காப்பி அடிக்கிறார்கள்’, `முருகன் தமிழர் என்று குழப்புகிறார்கள்’... நாம் தமிழர் Vs பா.ஜ.க!

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் குமரகுருவிடம் பேசினோம். ``ட்ரம்ப்பைபைவிட ஜோ பைடனின் நிர்வாகம் இந்தியாவுக்குச் சாதமாக இருக்கும். ஏனென்றால், `அமெரிக்கர்களுக்கு மட்டும்தான் வேலை, வெளிநாட்டவருக்கு வேலை கிடையாது’ என்ற கொள்கையில் ட்ரம்ப் தீவிரமாக இருந்தார். ஜோ பைடன் அப்படி இருக்க மாட்டார். ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை உலக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஏற்றுமதி, இறக்குமதியைப் பொறுத்த அளவில் ஒப்பந்தங்களின் அடிப்படையில் நடைபெறுகின்றன. அதனால், அதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

குமரகுரு

இன்னொரு முக்கியமான விஷயம், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை எந்தவொரு நாடும் பகைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. எனவே, இந்தியாவை யாரும் பகைத்துக்கொள்ள முடியாது. ட்ரம்ப்புடன் மோடி நெருக்கமாக இருந்ததால், தற்போது இரு நாட்டு உறவில் சிக்கல் ஏற்படும் என்ற வாதம் சரியல்ல. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபரான ஒபாமாவிடமும் மோடி நெருக்கமாகத்தான் இருந்தார். எனவே, இரு நாடுகளுக்கும் இடையே அதே உறவு நீடிக்கும்” என்றார் குமரகுரு.



source https://www.vikatan.com/government-and-politics/politics/from-caa-to-kashmir-issues-how-will-modi-deal-with-joe-biden

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக