2020 ஐபிஎல் போட்டிகளை கிட்டத்தட்ட வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது பிசிசிஐ. எந்த சீசனையும் விட இந்த சீசன் போட்டிகளும் மிகவும் கடுமையாக இருந்தது. கடைசி லீக் போட்டிவரை ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறப்போவது யார் என்பது முடிவாகவில்லை. பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில் இருக்கும் அணிக்கும் மூன்றாவது இடத்தில் இருக்கும் அணிக்கும் வித்தியாசம் வெறும் 2 புள்ளிகளே (1 வெற்றி). இப்படி ஆடுகளத்தில் எந்த அளவுக்குப் போட்டி இருந்ததோ அதே அளவு இன்னொரு களத்திலும் கடுமையாக போட்டிப் போட்டுக்கொண்டன ஐபிஎல் அணிகள். அந்தக் களத்தில் எப்போதுமே அனல் தெறித்தது. அது சோஷியல் மீடியா!
கொரோனாவின் காரணத்தால் இம்முறை மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. ஒளிபரப்பின் போது ரசிகர்களின் ஆரவார ஒலியைப் பின்னணியில் ஏனோதானோ எனச் சேர்த்துச் சமாளித்தாலும் ஒரு பெரும் படையுடன்தான் போட்டிகளைப் பார்க்கிறோம் என்ற உணர்வை நமக்குத் தந்தது சமூக வலைதளங்கள்தான். ஒவ்வொரு ரன்னுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஸ்டேட்டஸ், மீம்ஸ் என மிகவும் ஆர்வமாக இம்முறை ஐபிஎல் பார்த்தனர் ரசிகர்கள்.
ஃபிரான்சைஸ்களுக்கும், ரசிகர்களுடன் இணக்கமாக இருக்க சோஷியல் மீடியா மட்டுமே ஒரே களமாக அமைந்தது. இதனால் வார்த்தைகளில் விளையாடுவது, கிரியேட்டிவாக பதிவுகளிடுவது, மற்ற அணிகளுடன் செல்லமாக மோதுவது என அனைத்து ஐபிஎல் அணியின் சமூக வலைதள கணக்கும் இம்முறை செம ஆக்டிவ். ஐந்து வருடத்திற்கு முன்னெல்லாம் சம்பிரதாயத்திற்கு சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்திருந்த அணிகள் இன்று ரசிகர்களைக் கவரும் மிக முக்கிய கருவியாக அதைப் பார்க்கின்றன. சில பெரிய அணிகளின் டைம்லைன்களை புரட்டி பார்த்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு எதிரணி வீரர் என்ற ஒரே காரணத்திற்காக கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஜாம்பவான்களையெல்லாம் நேரடியாகப் பழித்து பதிவுகளிட்டிருக்கிறார்கள். ஆனால், இன்று தங்கள் சொந்த அணிகளையே கலாய்க்கும் அளவுக்கு சமூக வலைதள கணக்குகள் தெளிவான, அதே சமயம் கிரியேட்டிவான கைகளுக்குச் சென்றிருக்கிறது.
இந்த சீசனில் ஃபிரான்சைஸ்கள் சமூக வலைதளங்களில் செய்த சில சிறப்பான தரமான சம்பவங்கள் என்னவென்று பார்ப்போமா?!
ஒரு விதத்தில் இந்த கலாசாரத்தை ஆரம்பித்து வைத்ததே சிஎஸ்கேதான். இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு 'திரும்ப வந்துட்டோம்னு சொல்லு' என சோஷியல் மீடியாவிற்கென '11 பேர் கொண்ட குழு' ஒன்றை அமைத்து அந்த வருடம் பொளந்துகட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். இதை பார்த்துத்தான் அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சோஷியல் மீடியா பக்கங்களுக்கு செம வெயிட்டான அட்மின்களை தேடி பிடிக்க ஆரம்பித்தன மற்ற அணிகள். சிஎஸ்கேவின் சிறப்புகளில் முக்கியமானது அதன் தங்கிலீஷ் வார்த்தை உபயோகம். 'Anbuden', தல, சின்ன தல, கடைக்குட்டி சிங்கம் என தமிழ் வார்த்தைகள் அதிகம் பயன்படுத்துவது சிஎஸ்கே வழக்கம். ஆனால், இந்த வருடம் சீசன் கொஞ்சம் சுமார்தான் என்பதாலோ என்னவோ இந்த வருடம் சோஷியல் மீடியாவிலும் கொஞ்சம் அடக்கியே வாசித்தது சிஎஸ்கே.
எப்போதும் போல 'தல' என தோனி பற்றி என்ன பதிவிட்டாலும் ஹிட்தான். கடைசி போட்டியில் 'இதுதான் உங்களுக்குக் கடைசி ஐபிஎல் போட்டியா?' என்ற கேள்விக்கு 'Definitely Not' என்று தோனி அளித்த பதிலும் வேற லெவல் வைரல். மீம்ஸ், வீடியோஸ் என இரண்டு நாட்களுக்கு அந்த பேச்சுதான். இம்முறை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்துடனான முதல் ஆட்டத்தில் துபாய் வெப்பத்தில் சோர்வுற்று வீழ்ந்த தோனியை பார்த்த ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கிப்போயின. இதை அதே எமோஷனுடன் சிஎஸ்கே பதிவிட அதுதான் இந்த வருடம் அவர்களுக்கு அதிகம் ரீட்வீட்டான பதிவு.
முதல்முறையாக சிஎஸ்கே ப்ளே-ஆஃப் செல்லாத சீசன் இதுதான். இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது களத்தில் வீரர்கள் போதிய 'இன்டென்ட்' காட்டவில்லை என்பதுதான். 'எவ்வளவு பெரிய டார்கெட் என்றாலும் மிடில் ஓவர்ஸ்ல சிங்கிள்தான் தட்டுவோம்' என்று சிஎஸ்கே ஆடிய ஆட்டம் ஆத்ம சிஎஸ்கே ரசிகர்களையும் கடுப்பாக்கியது. சிஎஸ்கே அட்மினுக்கும் அதே ரியாக்ஷன்தான் என்பது அவ்வப்போது பதிவுகளைப் பார்த்தால் புரியும். அப்படி ஒரு ஆட்டத்தில் சிஎஸ்கே பதிவிட்ட ஒரு வைரல் பதிவு இதோ!
'கண்ணன் தேவன் டீ பொடி, சிஎஸ்கே புடி புடி' என சிஎஸ்கேயுடனான முதல் ஆட்டத்துக்குப் பிறகு ஆர்சிபி ரசிகர்கள் போட்ட ஆட்டம் செம வைரல். ஆனால், இப்போது அதுவே அவர்களுக்கு வினையாக முடிந்திருக்கிறது.
அதை வைத்தே மொத்த ஊரும் ஆர்சிபி ரசிகர்களை இப்போது கலாய்த்துக் கொண்டிருக்க சிஎஸ்கேவும் தன் பங்குக்குச் சூசகமாக 'புடி புடி' என ருத்துராஜ் கெய்க்வாட் கேட்ச் பிடிக்கும் போட்டோ ஒன்றைப் பதிவிட்டு லைக்ஸை அள்ளியது.
இந்த 2020 ஐபிஎல் சீசனில் கடைசி இடம் என்றாலும் சோஷியல் மீடியாவில் மாஸ் காட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ்தான். செம கிரியேட்டிவான பதிவுகள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இம்முறை ஈர்த்தது ஆர்ஆர். இந்த சீசனில் சர்ப்ரைஸ் சூப்பர்ஸ்டார் ராகுல் திவேதியா. பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் வேதாளம் அஜித்தை விஞ்சும் 'ட்ரான்ஸ்ஃபர்மேஷன்' காட்டிய திவேதியாவை வைத்து நல்ல வியாபாரம் பார்த்தது ராயல்ஸ் சோஷியல் மீடியா விங். '3000 ரீட்வீட் வந்தால் திவேதியாவையும் ஆர்ச்சரையும் ஓப்பனிங் இறக்கிவிடுகிறோம்' என ராஜஸ்தான் பதிவிட அது பத்தாயிரம் ரீட்வீட்களை கடந்தது.
அடுத்து 'என்ன பாஸ் சொன்ன வாக்க காப்பாத்துங்க!' என மக்கள் கேட்க அதற்கு ஒரு வீடியோ போட்டு வைரலானது ராஜஸ்தான் ராயல்ஸ்.
கடைசி கட்டத்தில் சிஎஸ்கே வெற்றிபெற்றால் தான் நமக்கு வாய்ப்பு என்று தெரிந்ததும் 'விசில் போடு' ஆர்மியாகவே ராஜஸ்தான் உருமாறியதெல்லாம் செம ரகளை!
வீரர்களின் பயிற்சி வீடியோக்கள், மேட்சின்போது அப்டேட்ஸ் என இருந்த அணிக்கு இந்த வருடம் ஷைனிங் ஸ்டார் நம்ம ஊர் நடராஜன்தான். ஒரே சீசனில் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்டாக தன்னை நிரூபித்திருக்கிறார் மனுஷன்! இதை முன்பே கவனித்து 'The One who yorks!' என 'பிரேக்கிங் பேட்' ரெஃபரன்ஸுடன் ஒரு பதிவிட அது செம வைரல். அடுத்தது நடராஜனின் பின்னணி கதை கொண்ட ஒரு வீடியோ ஒன்றையும் தயாரித்தது சன்ரைசர்ஸ். அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
மத்தபடி கேன் வில்லியம்சன் போல சன்ரைஸர்ஸும் சாத்வீகமாகவே இருந்து கொண்டிருந்தது ராஜஸ்தானுடனான போட்டி வரும் வரை. கடைசி ஓவரில் அந்தப் போட்டியை வென்ற ராஜஸ்தான், 'ஸோமாட்டா, எங்களுக்கு ஒரு பிரியாணி பார்சல் பண்ணுபா' என ஒரு ட்வீட் போட்டது. அடுத்த போட்டியில் சன்ரைஸர்ஸிடம் ராஜஸ்தான் மண்ணை கவ்வ 'எங்க ஊரு காரமெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது, போய் உங்க ஊரு பருப்பு சாதம் சாப்பிடுங்க போங்க' எனப் பதிலடி கொடுத்தது. ராஜஸ்தானும் 'அண்ணனுக்கு பிரியாணி கேன்செல்' என சைலன்ட்டாக ஒதுங்கியது. முன்னாள் ஐபிஎல் தலைவர் ராஜீவ் ஷுக்லா, 'இதெல்லாம் ஸ்பிரிட் ஆஃப் தி கேம்க்கு நல்லதல்ல' எனச் சொல்லும் அளவு இந்த மோதல் சென்றது.
எப்போதும் 'இவர்கள் போட்டியை பார்க்க BP டேப்லெட்ஸை கையில வெச்சிருக்கணும்' என சிஎஸ்கேவை பார்த்து சொல்வார்கள். இந்த சீசன் அது பஞ்சாப்புக்குத்தான் பொருத்தமாக இருந்தது. பல பிரஷரானப் போட்டிகளில் ஆடிய பஞ்சாப், மும்பை இந்தியன்ஸுடன் இரண்டு சூப்பர் ஓவர்கள் போராடி வெற்றியை தன்வசப்படுத்தியது. ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் சுவாரஸ்யமான போட்டி என மக்கள் கொண்டாடிய இந்த மேட்ச்சில் கே.எல்.ராகுல் செய்த ரன் அவுட்தான் பஞ்சாப்புக்கு இரண்டாவது சூப்பர் ஓவர் வாய்ப்பை தந்தது. 'இந்த முயற்சிக்கு எத்தனை RT-க்கள்?!' என பஞ்சாப் பதிவிட ரீட்வீட்கள் பறந்தன.
அடுத்து சன்ரைஸர்ஸுடனான போட்டிக்குப் பிறகு 'எங்களுக்கு பிடித்த ஆரஞ்சு' என கே.எல்.ராகுல் ஆரஞ்சு கேப்புடன் இருக்கும் ஒரு போட்டோவை பதிவிட்டு லைக்ஸ் அள்ளியது பஞ்சாப்.
ஒற்றை ஆளாக ஷார்ஜாவில் பஞ்சாப்பை சாய்த்தார் ராகுல் திவேதியா. கையில் இருந்த போட்டியை தோற்ற பஞ்சாப் பதிவிட்ட பதிவு இது.
மற்ற போட்டிகளில் கூட போராடி தோற்றுக்கொண்டிருந்தது பஞ்சாப். ஆனால், சென்னையுடனான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அப்போது மீம் கிரியேட்டர்ஸ் போடுவதற்கு முன்பு நாமே போட்டுவிடுவோம் என தில்வாலே புச் தேனே சா! ஆடியோவை தங்களுக்கே டெடிகேட் செய்து மக்களைக் கவர்ந்தது பஞ்சாப்.
புதிய தீம் சாங், பயிற்சி வீடியோ என சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பே அதிக அலப்பறையைக் கொடுத்த அணி ஆர்சிபி (ஆர்சிபி ரசிகர்கள் செய்த அக்கப்போர்களுடன் ஒப்பிட்டால் இது ஒன்றுமில்லைதான்). அப்போது 'யார் ஒழுங்காக யார்க்கர் போடுகிறார்கள்' என வைக்கப்பட்ட சேலஞ்சில் ஒவ்வொரு யார்க்கரையும் கொண்டாடும் குதூகல கோலிக்காகவே அந்த வீடியோ வைரலானது.
கோலி பிறந்தநாள் பதிவுகளும் செம வைரல். அவர் பிறந்த நாள் பார்ட்டியில் 'எப்படி பாஸ் கடைசி நாலு மேட்ச் தோத்தும் ப்ளேஆஃப் வந்தோம்' என ஒருவர் கேட்கக் கோலி வெடித்து சிரிக்கும் ரியாக்ஷனெல்லாம் காண கண் கோடி வேண்டும்.
கொல்கத்தாவுடனான போட்டியில் வெற்றி பெற ஒரு ரன் வேண்டும் என்ற நிலையில் இரண்டு ரன்கள் ஓடினார் கோலி. 'உங்க கடமை உணர்ச்சிக்கு அளவில்லையா பாஸ்' என நெட்டிசன்கள் கலாய்க்க 'கோலியா இருந்துட்டு இத கூட பண்ணலைனா எப்படி பாஸ்' எனப் பதிவிட்டது ஆர்சிபி. இதுவும் செம வைரல்.
சிஎஸ்கேவின் சுட்டி குழந்தை சாம் கரண் என்றால் ஐபிஎல்-ன் சுட்டி குழந்தை டெல்லி கேப்பிடல்ஸ்தான். பான்ட்டிங்கின் வழிகாட்டுதலில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கும் வந்துசேர்ந்துவிட்டனர். டெல்லி நிர்வாகம் வீரர்களைக் கையாண்ட விதமும் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியிருக்கிறது. ஒரே ஹோட்டலில் இரண்டு மாதங்கள் முடங்கியிருக்க வேண்டும் என்ற நிலையில் வீரர்களை உத்வேகப்படுத்த சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை தயார் செய்துவைத்திருந்தது டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம். அந்த வீடியோவில் ஒவ்வொரு வீரரின் குடும்பத்தினரையும் வாழ்த்து சொல்ல வைத்திருந்தார்கள். வீரர்களை எமோஷனல் ஆக்கிய இந்த வீடியோ டெல்லி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் கவர்ந்திருந்தது.
இவர்களும் அதிகமாக ராஜஸ்தானுடன்தான் செல்லமாக மோதிக்கொண்டிருந்தார்கள். முதல் இரண்டு போட்டிகளை ஷார்ஜாவில் வைத்து வென்றிருந்தது ராஜஸ்தான். அப்போது முதல் இரண்டு போட்டிகளையும் வென்ற மற்றொரு அணியாக இருந்தது டெல்லி கேப்பிடல்ஸ். அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸுடன் டெல்லி தோற்றுப்போனது. அப்போது '100% வெற்றியை மட்டும் பெற்ற அணியின் ரசிகர்களுக்கு குட் நைட்' என பதிவிட்டது ராஜஸ்தான். ஆனால், அடுத்த நான்கு போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் தவித்தது. அப்போது டெல்லி கொடுத்த பதிலடி பதிவு இது,
ஒருமுறையல்ல இப்படிப் பல முறை ராஜஸ்தான் டெல்லியிடம் பல்பு வாங்கியது. 'ஆர்ச்சரை விட வேகமான பந்துவீச்சாளர்களை காட்டுங்க பார்ப்போம்' என ஆர்ஆர் பதிவிட அடுத்த போட்டியே நார்க்கியா 156kmph வேகத்தில் பந்துவீசினார். டெல்லி சோஷியல் மீடியாவில் மீண்டும் ராஜஸ்தானைக் கலாய்த்தது.
ப்ளே-ஆஃப் முதல் போட்டியில் மும்பையுடன் 0-3 எனப் பரிதாப நிலையிலிருந்தது டெல்லி. அப்போது ட்ரம்ப் 'வாக்குகள் எண்ணுவதை நிறுத்துங்கள்' எனப் பதிவிட்டிருந்தார். அதைக் குறிப்பிட்டு 'ஆமா, பாஸ் விக்கெட் எண்ணுறவங்க கொஞ்சம் சும்மா இருங்க' என அந்தப் பரிதாப நிலையிலும் நக்கலடித்தது டெல்லி.
சோஷியல் மீடியாவில் அடக்கி வாசித்த மற்றொரு அணி கொல்கத்தா. 'இருக்குற இடம் தெரியாம இருந்தரனும்' என சைலண்டாக 'ஷாரூக் போட்டோ போட்டோமா லைக்ஸ அல்லினோமா' எனத்தான் இருந்தது கொல்கத்தாவின் சோஷியல் மீடியா விங். அதிகம் ரீட்வீட்டானது அவர்களது குரூப் போட்டோதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
வருண் சக்ரவர்த்தியை வைத்து தமிழில் போட்ட ஒரு பதிவும் வெகுவாக மக்களைக் கவர்ந்திருந்தது.
அதிக ரசிகர்கள் கொண்ட அணியாக சிஎஸ்கேவுக்கு டஃப் கொடுக்கும் ஒரே அணி மும்பை இந்தியன்ஸ். ஆனால், தொடர்ந்து வெற்றிகளைப் பார்த்ததாலோ என்னவோ சோஷியல் மீடியாவில் அவர்களுக்குப் பெரிய வேலை இல்லை. ஏற்கெனவே அதிகப்படியான ரசிகர்களைச் சம்பாதித்துவிட்ட அணியாகவும் இருப்பதால் அது மும்பைக்கு தேவைப்படுவதும் இல்லை. ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் 'We Win!!!!!!!' எனப் பதிவிடுகிறார்கள். அதற்கே லைக்ஸ், ரீட்வீட்ஸ் தெறிக்கிறது. 'MI TV' என அழகாக ஆஃப் தி பீல்டு காட்சிகளையும் ரசிகர்களுக்குக் காட்டிவிடுகிறார்கள். இது இல்லாமல் குறிப்பிட்டுச் சொல்லச் சம்பவங்கள் குறைவுதான். பும்ராவின் முதல் விக்கெட்டும் விராட் கோலிதான், நூறாவது விக்கெட்டும் விராட் கோலிதான். இதை தற்போதைய 'How it started, How it's going?' ட்ரெண்ட்டுடன் பதிவிட அது செம வைரலானது.
இது இல்லாமல் தந்தைக்கு சப்போர்ட் செய்யும் குட்டி 'க்யூட்' பாண்டியாவின் புகைப்படமும் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளைகொண்டது.
இந்த சீசனில் சோஷியல் மீடியாவில் உங்களை அதிகம் கவர்ந்த அணி எது... கமென்ட்களில் உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்!
source https://sports.vikatan.com/ipl/few-viral-moments-from-ipl-franchises-social-media-campaign-this-year
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக